மஹ்ஷா அமினி படுகொலைக்கு எதிராகப் போராடி வரும் ஈரான் மக்களுக்கு ஆதரவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
ஈரான் நாட்டு காவல்துறையின் அங்கமான மத ஒழுக்கப்பண்பு வழிகாட்டுப்படை கடந்த செப்டம்பர் மாதம், 22 வயதேயான இளம்பெண் மஹ்ஷா அமினியைப் படுகொலை செய்ததை எதிர்த்துப் போராடி வரும் ஈரான் மக்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு அதன் ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் தற்போதைய இந்தப் போராட்டங்கள், மதச்சார்பு கொண்ட அரசாங்கத்திற்கு எதிரான அவர்களின், முன்னெப்போதும் கண்டிராத, எழுச்சி, வீரம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்தப் போராட்டங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருப்பதோடு, மதச்சார்பு கொண்ட அரசாங்கத்திற்கு எதிரான ஈரானிய பெண்களின் கிளர்ச்சிக்கு மகத்தான ஆதரவைப் பெற்றுத் தந்துள்ளன.
ஏற்கனவே, 30 பெண்கள் (பெரும்பாலானவர்கள் இளம்பெண்கள்) இந்த அரசாங்கத்தால் கொல்லப்பட்டுள்ளார்கள். எனினும், இந்த அரசாங்கத்தின் அராஜகப் போக்கால் மக்கள் எழுச்சியை அடக்கி, ஒடுக்கிவிட முடியவில்லை.
போராடி வரும் ஈரானிய மக்களுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அம்மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் அனைத்துவித வன்முறை வெறியாட்ட நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோருகிறது; கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதோடு, மஹ்ஷா அமினியைப் படுகொலை செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அதே சமயம், எந்தச் சூழலிலும், ஈரான் நாட்டின் உள்விவகாரங்களில் அந்நிய சக்திகளின் தலையீடு இருக்கக் கூடாது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்துகிறது.
அமைதி மற்றும் நீதியை உத்தரவாதப்படுத்தக்கூடிய ஒரு தேசிய ஜனநாயக குடியரசு அமைந்திட வேண்டும் என்பதற்காக கடந்த 80 ஆண்டுகாலமாக அடக்குமுறைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு வரும் ஈரான் துதே கட்சிக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.