தி.மு.கழகத் தலைவர் – தேர்வு – மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக திரு.மு.க ஸ்டாலின் இரண்டாம் முறையாக, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
சமூக சீர்திருத்த புரட்சியில் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக, பகுத்தறிவுப் பெரியார் ஈ.வெ.ரா முன்னெடுத்த சுயமரியாதை, சமதர்ம கொள்கை வழிநின்று, அரசியல் அதிகாரம் வென்ற அறிஞர் அண்ணா கண்ட தி.மு.கழகத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் அடியொற்றி, கோபாலபுரத்தில் இளைஞர் அணி அமைத்து, பதினான்கு வயதில் பொதுவாழ்வைத் தொடங்கியவர். அரை நூற்றாண்டு பொதுவாழ்வில், மேடு பள்ளங்களையும், அடக்குமுறை சவால்களையும் சந்தித்துப் பயணித்த, கழகத்தின் ” தளபதி”, திராவிட முன்னேற்ற கழகத்திலும், அரசு அமைப்புகளிலும் பல்வேறு பொறுப்புகளிலும் பங்கேற்று பன்முகத் திறன் வளர்த்து, நாடு எதிர்நோக்கும் தலைவராக உயர்ந்துள்ள திரு.மு.க.ஸ்டாலின், வகுப்புவாத, மதவெறி, சாதிவெறி, சனாதான பழைமைவாத சக்திகளிடமிருந்தும், பன்னாட்டு கார்ப்பரேட் சக்திகளின் நிதிமூலதன ஆக்டோபஸ் கரங்களிலிருந்தும் இந்திய ஒன்றியத்தை மீட்டுப் பாதுகாக்க, மதச்சார்பற்ற, சமூகநீதி சார்ந்த ஜனநாயக மாற்றைக் கட்டமைத்து, வெற்றி காண விழைந்து, இரண்டாம் முறையாக தி.மு.கழகத் தலைவராகப் பொறுப்பேற்கும் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.