தனியார் காப்பகங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் – ஆதரவு ஏற்போர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டதால் மூன்று குழந்தைகள் மரணமடைந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. உயிரிழந்த குழந்தைகள் தவிர மேலும் 12 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தனியார் குழந்தைகள் காப்பகம், முதியோர் காப்பகங்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றிச் செயல்படுகிறதா? என்பதை அரசு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். காப்பகத்தில் தயாரிக்கப்பட்டு வழங்கிய உணவு கெட்டுப்போனதா? வெளியில் இருந்து வழங்கப்பட்ட உணவு விஷமாகி விட்டதா? என குழம்புவதும், குழப்புவதும் குற்றவாளிகளைத் தப்பிக்க செய்யும் வழிமுறையாக அமைந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடு விசாரணை அமைய வேண்டும்.
இந்த நிகழ்வில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல், உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் காப்பகங்கள் இயங்கும் முறை, அதில் உள்ளோர் உடல் நலன், வழங்கப்படும் உணவுகள் போன்றவைகளைக் காலமுறைப்படி பரிசோதித்து அறிக்கை பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.