மக்கள் நலனுக்கு எதிரான நேட்டோவின் பயங்கரவாத போக்கு
பருவகால மாற்றத்தின் மோசமான விளைவுகள், கொரோனா பெருந்தொற்று, சமத்துவமின்மை, வறுமை, உக்ரைன் போர் மற்றும் பொருளாதார தடைகள் காரணமாக ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது; உலகம் முன்னெப்போதும் கண்டிராத பசிக் கொடுமையைத் தற்போது எதிர்கொண்டு வருகிறது என்று ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டணியோ குட்ரஸ் அண்மையில் எச்சரித்துள்ளார். ஆனால், அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ இராணுவ அமைப்பு உலகை யுத்தத்தின் விளிம்பில் நிறுத்திடவே முயன்று வருகிறது.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில், போருக்கான ஆதரவு என்ற அடிப்படையில் உக்ரைனின் போர் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா 40 பில்லியன் (1 பில்லியன் – 100 கோடி) அமெரிக்க டாலர் (1 டாலர் – ஏறத்தாழ 81.44 ரூபாய், 04.10.2022 நிலவரப்படி) அளவிற்கு உதவிகளைச் செய்துள்ளது; ஐரோப்பிய ஒன்றியம் 27 பில்லியன் யூரோ (1 யூரோ – ஏறத்தாழ 80.14 ரூபாய், 04.10.2022 நிலவரப்படி) மதிப்பிலான உதவிகளைச் செய்துள்ளது.
எனினும், உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள ஐ.நா அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மேற்குலக நாடுகள் வெறும் 5 பில்லியன் அமெரிக்க டாலரை மட்டுமே பங்களிப்பு செய்துள்ளன என்பது கவனிக்கத்தக்கதாகும்.
நெருக்கடிகள் மிகுந்த சூழல், 2022ஆம் ஆண்டில் பல்வேறு பஞ்சங்களுக்கு வித்திடும் என்று எச்சரித்த அவர், 2023ஆம் ஆண்டில் சூழல் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த நெருக்கடிகளை ஏற்படுத்தவுள்ள சமூக மற்றும் பொருளாதார அழிவுகளில் இருந்து எந்த ஒரு நாடும் தப்பிப் பிழைக்க முடியாது என்று வலியுறுத்திக் கூறியுள்ளார்.
தற்போதைய நெருக்கடியான நிலையை மேலும் தீவிரமாக்கும் உணவு மற்றும் எரிபொருட்களின் கட்டுப்பாடற்ற விலை உயர்வுக்கு, உக்ரைனில் நடைபெற்று வரும் போரும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்பதற்கான ஐ.நா சபையின் முயற்சிகளையும் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இருந்து உணவு மற்றும் உரங்கள் ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டையாக உள்ள இடையூறுகளை நீக்குவதில் ஐ.நா சபையின் பங்களிப்பையும் குட்ரஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
ஏழை நாடுகள், அவற்றின் பொருளாதாரத்தைச் சீரமைத்துக் கொள்ள கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், உணவுச் சந்தைகள் நிலைத்தன்மையைப் பெற்றிட தனியார்துறை உதவிட வேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டைக் காட்டிலும், உலக அளவில் உணவு இறக்குமதிக்கான செலவு 51 பில்லியன் டாலர் உயரும் என்று ஐ.நா சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் கவலையளிக்கக்கூடிய அம்சம் என்னவென்றால், ஏற்கனவே பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் நாடுகள், உணவுப் பொருட்களுக்காக அதிகம் செலவழித்தாலும், அவற்றுக்கு குறைந்த அளவே உணவுப் பொருட்கள் கிட்டும்.
உலக அமைதி, மூன்றாம் உலக நாடுகளின் கடன் சுமை குறைப்பு நெருக்கடி நிலைமைகளைச் சமாளிப்பதற்கான ஐ.நா அமைப்பின் நிதியம், ஐரோப்பாவின் நிலைத்தன்மையைச் சீரழித்து வரும் உக்ரைன்-ரஷ்ய போர் நிறுத்தம், பருவகால மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நியாயமான கொள்கை அறிக்கைகள், உலக அளவிலான புலம்பெயர்தல் பிரச்னையை எதிர்கொள்வது ஆகிவற்றுக்கான அறைக்கூவல் அதிகரித்து வரும் வேளையில், மேற்குலக நாடுகள் அச்சுறுத்தல் மற்றும் மோதல் போக்குகளையே மேற்கொண்டு வருகின்றன; பிரச்சனைகளுக்கு உரிய தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் பெயரளவிற்கு மட்டுமே பங்களிப்பு செய்கின்றன.
நேட்டோ, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் வெளியிடும் ஒவ்வொரு அறிக்கையிலும், உக்ரைனில் நடைபெற்று வரும் போரை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஆணவம், அராஜகம் மற்றும் பொறுப்பற்றதன்மை பெருக்கெடுத்து ஓடுகிறது; அரசியல் முதிர்ச்சியற்று, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான வெறுப்புணர்வை உமிழ்கின்ற பிரகடனமாகவே அவை வெளியிடப்படுகின்றன.
இத்தகைய அமெரிக்க ஆதரவு, ஏகாதிபத்திய, எதேச்சதிகார மோதல் போக்கை மேட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் தெளிவுபடுத்திவிட்டார்.
மனிதகுலத்தை அச்சுறுத்தி வரும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, உக்ரைனுக்கான இராணுவ உதவி, ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் நகர்வுகள், ஆயுதக் குவிப்பு, இராணுவச் செலவின அதிகரிப்பு, ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாட தொழிற்துறையில் முதலீட்டு அதிகரிப்பு, ஐரோப்பாவில் அமெரிக்காவின் புதிய இராணுவ தளங்கள் ஆகியவை பற்றிய நேட்டோ உச்சி மாநாடு அதிகம் கவனம் செலுத்தியது.
உணவுத் தட்டுப்பாடு நெருக்கடியை எதிர்கொள்வதற்கான ஐ. நா சபையின் முயற்சிக்கு மேற்குலக நாடுகள் இதுவரையில் ஐந்து பில்லியன் டாலர் அளவிற்கு மட்டுமே பங்களிப்பு செய்துள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
போலந்து, ரொமேனியா, ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பால்டிக் பிராந்தியத்திலும் அமெரிக்கா அதன் ராணுவ இருப்பை மேலும் பலப்படுத்த உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையிலான குழு இம்மாநாட்டில் அறிவித்துள்ளது.
அமைதி, குறைந்த விலையில் உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் மற்றும் உரங்கள் வேண்டும் என்று உலக நாடுகள் உரத்த குரலில் அறைகூவல் விடுத்து வரும் காலச்சூழலில், அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர் மற்றும் நேட்டோவின் ஸ்டோல்டன்பர்க் ஆகியோர் போர் முரசறைந்து வருகிறார்கள். உக்ரைனில் நிலவும் போர்ச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, நேட்டோ விரிவாக்கத் தையும், அமெரிக்காவின் நலன்களையும் மேலும் முன்னெடுத்துச் செல்கிறார்கள்.
மேட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் முடிவுகளைப் பொறுத்தவரையில், நேட்டோவின் விரிவாக்க செயல்திட்டத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நேட்டோவின் இந்தப் போக்கு உலக மக்கள் நலனுக்கு எதிரானது என்பது மீண்டும் தெளிவாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள் ஓரணியாகத் திரண்டு இந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் எழுந்துள்ளதுள்ளது. புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும் உலகை வேருடன் சாய்ப்போம்!