தமிழகம்

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளித்திடுக! தமிழக டிஜிபிக்கு – தலைவர்கள் நேரில் கடிதம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்கசிஸ்ட்),
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 2 அன்று தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தி சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. ஆகியோர் இன்று (30.09.2022) தமிழக காவல்துறை இயக்குநரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்.

அக்கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

30.09.2022
கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர் – சிபிஐ (எம்).
இரா.முத்தரசன்
மாநில செயலாளர் – சிபிஐ.
தொல் திருமாவளவன் எம்.பி.,
தலைவர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி.

பெறுநர்
உயர்திரு காவல்துறை இயக்குநர் அவர்கள்,
தமிழ்நாடு காவல்துறை,
மயிலாப்பூர்,
சென்னை – 600 004.

பொருள்: அக்டோபர் 2 – தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி சிபிஐ(எம்), சிபிஐ, விசிக மற்றும் மதச்சார்பற்ற, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அமைப்புகள் சார்பிலும் தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ள “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” இயக்கத்திற்கு அனுமதி வழங்கிட கோருதல் தொடர்பாக:

தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ந் தேதியன்று தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்), சிபிஐ, விசிக மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ், மதிமுக, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள அமைப்புகளின் சார்பில் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடத்திட திட்டமிட்டு ஆங்காங்கே உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து இடங்களிலும் இந்த மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவில், பி.எப்.ஐ. அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வுத் துறையினர் ஆய்வு நடத்தியதையும், அதனைத் தொடர்ந்து உபா சட்டத்தைப் பயன்படுத்தி அந்த அமைப்பு தடை செய்யப்பட்டதையும் தொடர்ந்து ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், மேலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அக்டோபர் 2ந் தேதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியளித்தால் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த உத்தரவை திரும்பப் பெற வற்புறுத்தியதோடு, இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2ந் தேதி அன்று சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடத்தவிருக்கும் மனித சங்கிலிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மதச்சார்பற்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட, மத நல்லிணக்கத்திற்கும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாத்திடவும் அனுதினமும் போராடி வரும் அமைப்புகளாகும்.
எனவே, மதவாத அடிப்படையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகளையும், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பது பொருத்தமற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, தாங்கள் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிபிஐ, சிபிஐ (எம்), விசிக மற்றும் மதச்சார்பற்ற, மதநல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகளின் சார்பில் அமைதியான முறையில் அக்டோபர் 2ந் தேதி அன்று தமிழகம் முழுவதும் மாலை 4.00 மணியளவில் திட்டமிடப்பட்டிருக்கும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” இயக்கத்திற்கு அனுமதி அளித்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
(கே. பாலகிருஷ்ணன்)
(இரா. முத்தரசன்)
(தொல் திருமாவளவன் எம்.பி.)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button