சீனப் பொதுவுடைமை இயக்கத்தின் முலான்
-ஆனந்த் பாசு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க கால உறுப்பினர்களில் ஒருவரான சியாங் ஜிங்யு (1895 – 1928), ஹுனான் மாகாணத்தில் ஹுவாய்ஹுவா மாவட்டத்தில் உள்ள க்ஸுபு கவுண்டியில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார்.
பணக்காரக் குடும்பத்தில் பிறந்த சியாங்கிற்கு சகோதர சகோதரிகள் 10 பேர். ஜப்பானில் படித்த சகோதரர்களின் தாக்கம் சிறு வயதிலேயே சியாங் ஜிங்க்யுவிற்கு ஏற்பட்டது. அந்தக் காலத்திலேயே ஆரம்பக் கல்வியைப் பயின்ற, மாவட்டத்தின் முதல் பெண்ணாகத் திகழ்ந்தார். பாலின சமத்துவத்துக்காகப் போராடும், சீன வரலாற்றின் ஆகப்பெரும் நாயகியான ஹுவா முலானைப் போலத் தானும் ஆக வேண்டும் என்று இளம் வயதில் சியாங் ஜிங்க்யு கனவு கண்டார்.
1916 ஆம் ஆண்டில், சியாங் பட்டம் பெற்ற பின்பு, கல்வியின் மூலம் பெண் விடுதலைக்குப் பாடுபட்டு தேசத்தை முன்னேற்றும் லட்சியத்துடன் தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்கு முதலில் ஒரு தொடக்கப் பள்ளியை நிறுவினார். முதலில் டஜன் கணக்கான மாணவர்களை மட்டுமே கொண்டிருந்த ஒரு வகுப்பு மட்டுமே கொண்டிருந்த பள்ளியிலிருந்து, சுமார் 300 மாணவர்களுடன் எட்டு வகுப்புகள் கொண்ட பள்ளியாக காலப்போக்கில், அது வேகமாக விரிவடைந்தது.
சிறிது காலத்திற்குப் பிறகு பீஜிங்கிற்குச் சென்ற சியாங், 1918 ஆம் ஆண்டில் மாவோ மற்றும் காய் ஹெசன் ஆகியோரால் நிறுவப்பட்ட ஜின்மின் நிறுவனத்தில் சேர்ந்தார். பிறகு அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில், சியாங், காய் ஹெசன் மற்றும் காய் சாங் ஆகியோருடன் சேர்ந்து மேற்படிப்பு படிக்க பிரான்சுக்குச் சென்றார். அவர் பாரிஸில் உள்ள பெண்கள் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது சியாங், பிரெஞ்சு மற்றும் மார்க்சியத்தை கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், பிரான்சில் உள்ள தொழிலாளி வர்க்கத்துடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். 1920 இல், சியாங், காய்
ஹெசனை மணம் புரிந்தார்.
1922 ஆம் ஆண்டில் அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார். ஜூலை 1922 இல் இரண்டாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக் காங்கிரஸைத் தொடர்ந்து, கட்சியின் மத்தியக் குழு, சியாங்கை சீனக் கம்யூனிஸ்ட் மகளிர் பணியகத்தின் முதல் இயக்குநராகவும், மத்தியக் குழுவின் முதல் பெண் உறுப்பினராகவும் நியமித்தது.
ஒரு வருடம் கழித்து, அவர் ஷாங்காய் நகரிற்குச் சென்றார். 1923ஆம் ஆண்டு, மூன்றாவது கட்சி காங்கிரஸில், அவருடைய பாலின சமத்துவம் பற்றிய முன்மொழிவு நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு வாரிசுரிமை, சம ஊதியம், திருமண சுதந்திரம் மற்றும் கல்வியில் சம உரிமை உள்ளது என்பது தான் அதன் முக்கிய உள்ளடக்கம். இதையடுத்து, பெண்கள் இயக்கக் குழுவின் முதல் செயலாளராக சியாங் பொறுப்பேற்றார்.
1924 ஆம் ஆண்டு, ஷாங்காய் நகரில் இயங்கிக் கொண்டிருந்த 14 பட்டுத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த, 4,000 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை அணி திரட்டி, ஒரு மிகப்பெரிய வரலாறு காணாத வேலை நிறுத்தத்தை சியாங் தலைமை தாங்கி வழி நடத்தினார். வேலை நிறுத்தப் போராட்டத்தின், 16 அம்ச கோரிக்கைகளில் சம்பள உயர்வு, வேலை நேரத்தை
10 மணி நேரமாகாக் குறைத்தல் ஆகியவையும் அடங்கும்.
அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக 1925 ஆம் ஆண்டு மே 30 சீன மண்ணில் இயக்கம் வெடித்த பிறகு, ஷாங்காய் நகரில் தங்கி, சியாங், தொழிலாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதிக அளவில் வேலை நிறுத்தங்களுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்தினார்.
இவர் ஒரு சிறந்த தொழிற்சங்கப் போராளியாக மட்டும் இல்லாமல், பெண்களின் உரிமைகள் பற்றி 40 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டு, பெண்ணிய இயக்கத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சீனத்தின் முதன்மையான பெண்ணியவாதியாகவும் திகழ்ந்தார்.
சியாங் தனது கணவருடன் மாஸ்கோவில் மீண்டும் படிக்க அனுப்பப்பட்டார். 1927ல் தாயகம் திரும்பிய அவர், தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்படுத்தி தொழிற்சங்க அரங்கில் அரும்பணியாற்றினார்.
1927 ஜூலையில், அவர் வாழ்ந்து கொண்டிருந்த வுஹானில், எதிர்ப்புரட்சிப் போர்
தொடங்கப்பட்டது. இருப்பினும், ஆபத்தைப் பொருட்படுத்தாமல், சியாங் அங்கேயே தங்கி இருக்க முடிவு செய்தார். ஆனால் அவர் காட்டிக் கொடுக்கப்பட்டு மார்ச் 20, 1928 ல் கைது செய்யப் பட்டார். கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட போதிலும், சியாங் கம்யூனிஸ்ட் கட்சியின் எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்த மறுத்துவிட்டார். மரணதண்டனை விதிக்கப்பட்டு, மரண வாயிலில், செல்லும் வழியிலும், மக்களிடையே எழுச்சி உரை ஆற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும், மக்களின் தேசபக்தியைத் தட்டி எழுப்பும் வகையில் பரவியதாலேயே, சியாங் மே 1, 1928 அன்று தூக்கிலிடப்பட்டார்.
அவர் தனது வாழ்க்கையை தியாகம் செய்தபோது அவருடைய வயது 33. 1936ல், மா சேதுங் சியாங்கை கட்சியின் ‘ஒரே பெண் நிறுவனர் – உறுப்பினர்’ என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் சியாங்கை சீனத்து வானின் தாரகையாக அங்கீகரித்து, பாதி வானம் பெண்களுக்கானது என்று பெண்களின் பெருமையைப் பறை சாற்றினார்.
செப்டம்பர் 4 அவரது பிறந்தநாள். சியாங் இன்றளவும் சீன மக்களின் இதயங்களில் ஆகச் சிறந்த தொழிற்சங்கப் போராளியாகவும், பெண்ணியவாதியாகவும், கம்யூனிஸ்டாகவும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
வாழ்க அவர் நாமம்!
தொடர்புக்கு – 73584 42610