கம்யூனிஸ்டு தலைவர் மு வீரபாண்டியன் மீது கொலை முயற்சி தாக்குதல்: காவல்துறையே! சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்திடு!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், முன்னணி தலைவருமான மு. வீரபாண்டியனை கொலை செய்யும் வன்மத்துடன் சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வியாசர்பாடி, தமிழ்நாடு மாநில வாழ்விட மேம்பாட்டு நிறுவனக் குடியிருப்புக்கு எதில் உள்ள முல்லை நகரில் குடியிருந்து வருகிறார். இன்று (04.09.2022) மாலை 5.15 மணியளவில் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, வீட்டை விட்டு வெளியே வந்து, ஸ்ரீ சாய் குடியிருப்பு, 4-வது தெருவில் நடந்து சென்ற போது சமுக விரோதிகள் மூன்று பேர், கத்தி, இரும்புத்தடி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்தத் தருணத்தில் மு.வீரபாண்டியனின் சமயோசித தடுப்பு நடவடிக்கையாலும், அக்கம், பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்த காரணத்தாலும் சமூக விரோதிகள் தப்பியோடியுள்ளனர்.
வியாசர்பாடி மக்களின் நன்மதிப்பை பெற்றவரும், தமிழ்நாட்டின் உழைக்கும் மக்களுக்கும், குறிப்பாக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக்கு போராடி வருபவருமான மு. வீரபாண்டியன், நாற்பது ஆண்டுகால பொது வாழ்க்கையில் உள்ள அரசியல் தலைவர். அறிவியல் சார்ந்த பகுத்தறிவுக் கொள்கை நெறியில் வாழ்ந்து வருபவர். இவர் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட சமூக விரோதிகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கோழைத் தனமான தாக்குதலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை, தமிழ்நாடு காவல்துறை விரைந்து கைது செய்து, அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டிக்கும் வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோத சக்திகளை தமிழ்நாடு அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.