மறைபொருளான அறிவியல் மனப்பான்மை
நன்றி: தி இந்து, 24.08.2022 கட்டுரையாளர்: சி.பி. ராஜேந்திரன்
இந்திய தேசத்தின் பயணத்தில் 75வது சுதந்திர தினம் என்பது ஒரு மிக முக்கியமான நிகழ்வு ஆகும். கடந்த ஏழு தசாப்தங்களாகப் பல துறைகளில் ஏற்பட்டுள்ள மேம்பாடு குறித்து மதிப்பீடு செய்ய வேண்டிய தருணம் ஆகும். ஆனால், வேதனையளிக்கும் விதமாக, நமது நாட்டின் அறிவியல் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்து அச்சு மற்றும் இதர மின்னணு ஊடகங்கள் ( விதிவிலக்காக இது போன்ற ஒரு சில இதழ்கள் தவிர) உண்மையில் மதிப்பீடு ஏதும் மேற்கொள்ளவில்லை. அரசியலாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நடிகர்கள் இன்னபிற துறைகளைச் சார்ந்த ஆளுமைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு இருப்பினும், அறிவியல் மற்றும் அறிவியல் அறிஞர்கள் பெருமளவிற்குப் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடையே நிலவி வரும், அறிவியல் மீதான பொதுவான ஆர்வமின்மை, அறிவியல் மனப்பான்மையின்மை ஆகியவை இந்திய உணர்வறிதிறம் ( Indian Sensibility ) குறித்த ஒரு மோசமான கருத்துரையாக உள்ளது.
அறிவியல் மனப்பான்மையின்மை
தகவல் தொழில்நுட்பம், அணு விஞ்ஞானம், விண்வெளி, திடநிலை-வேதியியல், வேளாண்மை, மருந்து உற்பத்தியில், உயிரியல் உள்ளிட்ட ஆராய்ச்சி துறைகளில் சொல்லத்தக்க அறிவியல் முன்னேற்றத்தை இந்தியா அடைந்து இருப்பினும், பொதுமக்களிடமும், இன்னும் சொல்வதானால், அறிவியல் அறிஞர்கள் மத்தியிலும் கூட, அறிவியல் கல்வித் திறத்தைப் பரப்புவதில் இந்தியா தோல்வி அடைந்திருக்கிறது.
42வது திருத்தத்தின் வாயிலாக, நமது அரசியலமைப்பில் ஷரத்து 51 A -வைச் சேர்த்திருப்பதன் மூலம் அறிவியல் மனப்பான்மையைப் பரப்புவதற்கான நமது உறுதிப்பாட்டை நாடாளுமன்றம் சுட்டிக்காட்டுகிறது.
ஷரத்து 51 A கூறுவதாவது: “அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், பகுத்தறிவு மற்றும் சீர்திருத்த உணர்வை மேம்படுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.”
மேற்கண்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பினும் கூட, அறிவியல் மனப்பான்மையானது, நமது சமுதாயத்தின் அகண்ட பரப்பின் ஆழத்திற்குக் கசிவுறவில்லை. இந்தப் போக்கு, நமது தேசத்தின் எண்ணப் பாங்கினை ‘அறிவின்மை’ என்னும் சிறைக்குள் அடைத்துள்ளது; அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள மதச்சார்பற்ற விழுமியங்களைக் கொன்றொழித்துப் பிற்போக்கான, மத அடிப்படைவாத அரசியலுக்கு வழிவகை செய்துள்ளது. 1950 மற்றும் 1960களில், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆதரவுடன், நவீன அறிவியலுக்கான ஒரு வலுவான அடித்தளம் கட்டமைக்கப்பட்டது. எனினும், பிறழ்வு ஏற்பட்டுள்ளது. எவ்வாறு ?
இந்தப் பிரச்சனையின் ஒரு பகுதி நமது அறிவியல் அறிஞர்கள் மற்றும் அவர்கள் சார்ந்துள்ள அறிவியல் கல்வி அமைப்புகளோடு தொடர்புடையது ஆகும். முழுவீச்சில் செயலாற்றிட சூழல் கோரிய போதும் கூட, நமது அறிவியல் அறிஞர்கள் உறுதிப்பாடு இன்றியே அறிவியல் நோக்கங்களை முன்னெடுத்தார்கள். ‘தி இந்து’ நாளிதழில் 2015ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று, “அறிவியல் மனப்பான்மையற்ற அறிவியல் அறிஞர்கள்” எனும் தலைப்பில் புகழ்வாய்ந்த மூலக்கூறு உயிரியல் அறிஞரான புஷ்பா பார்கவா எழுதியுள்ளது பின்வருமாறு: “உயர் பொறுப்பு வகித்த எண்ணற்ற அறிவியல் அறிஞர்கள், பகுத்தறிவு சிந்தனைப் போக்கு இல்லாதவர்களாக, மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அறிவியல் மனப்பான்மையற்றவர்களாக இருந்தனர்.”
இந்திய தேசிய அறிவியல் நிறுவனம் (Indian National Science Academy) உள்ளிட்ட மூன்று உயர்மட்ட அறிவியல் அமைப்புகளிலும் அறிவியல் தொடர்புடைய சமூகப் பிரச்சனைகள் குறித்து அர்ப்பணிப்பு உணர்வற்ற நிலை நீடிப்பதைக் கண்டித்து, 1994 ஆம் ஆண்டில் இவ்வமைப்புகளிலிருந்து பார்கவா ராஜினாமா செய்தார். 2015ஆம் ஆண்டில் அவர் எழுதிய கட்டுரையில் மேலும் கூறியிருப்பது பின்வருமாறு: “நமது தேசத்தில் அறிவியல் மனப்பான்மையை ஒரு முக்கியமான கூறாகக் கருதும் அறிவியல் சூழல் இல்லாத காரணத்தால் தான் 1930 இல் இருந்து இதுவரையில் அறிவியலுக்கான நோபல் பரிசு பெறுவதற்கான ஒரு அறிஞரைக் கூட நமது தேசத்தால் உருவாக்க முடியவில்லை.”
விளையாட்டுப் போட்டிகளுக்குத் தடகளப் பண்பாடு ( Athletic Culture ) தேவைப்படுவதைப் போன்று, தேசத்தில் அறிவியல் வளர்ச்சி ஏற்பட வேண்டுமென்றால், தேசம் முழுவதிலும் அறிவியல் மனப்பான்மை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். பொதுமக்களிடையே அறிவியல் அறிவை வளர்த்தெடுத்து, மிகப்பெரிய அளவில் செழுமைப்படுத்த வேண்டியது அறிவியல் கல்வி நிறுவனங்களின் பணியாகும். இந்தப் பணியைச் செம்மையாக நிறைவேற்றுவதே அவ்வமைப்புகளின் இருப்பை நியாயப்படுத்த கூடும்.
எங்கும் போலி அறிவியல் ( Pseudoscience )
மனித இனத்தின் தோற்றம் குறித்த விஞ்ஞானபூர்வ தத்துவத்திற்கு மாற்றாக, படைப்புவாதத்தை ( Creationism ) அறிவியல் பாடத்திட்டத்திற்குள் புகுத்திட, சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவைச் சார்ந்த கிறித்தவ புத்தாக்க குழுக்கள் கடுமையாக முயன்றன. அப்போது, அந்நாட்டின் தேசிய அறிவியல் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் இறுதிப் பகுதி பின்வருமாறு:
“அறிவியல் கூர்நோக்கு, பொருள் விளக்கம் மற்றும் பரிசோதனை முறை ஆகியவற்றைப் புறந்தள்ளிவிட்டு, கோட்பாட்டு அடிப்படைகளை வேராகக் கொண்டிருக்கும் மத நம்பிக்கைகளின் தொகுப்பை எந்த ஒரு அறிவியல் பாடத்திலும் அறிவியலாக ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தகைய கோட்பாடுகளின் கற்பித்தலை அறிவியல் பாடத்திட்டத்தில் இணைப்பது, பொதுக் கல்வியின் நோக்கங்களை நீர்ந்து போகச் செய்வதாகும். இயற்கையின் இயக்கங்களை விளக்குவதில் அறிவியல் மாபெரும் வெற்றியடைந்து வருகிறது. இந்த வளர்ச்சிப் போக்கு, பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு மேம்பட்ட புரிதலை உருவாக்குவதோடு மட்டுமின்றி, பொதுமக்களின் நல்வாழ்வு, பொது சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மாபெரும் முன்னேற்றத்திற்கும் வித்திட்டுள்ளது. நவீனகால வாழ்க்கை முறையில் அறிவியலின் அதிகரித்து வரும் பங்கு, அறிவியல் வகுப்புகளில், மதத்தை அல்ல, அறிவியலையே கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.”
நம்மைச் சுற்றிலும் வியாபித்துள்ள பல்லுயிர்த் தொகுப்பின் சூட்சுமத்தை விளக்கும் பரிணாமத் தத்துவம், பருவகால மாற்றம் குறித்து அறிவிக்கும் அறிவியல் என்று பலவற்றையும் மறுதலிப்பதில் எங்கும் போலி அறிவியலே நிலைகொண்டுள்ளது. அத்தகைய போலி அறிவியல், நடைமுறையில் நிலைபற்றி நின்றிட, வளமான தளம் அமைத்துக் கொடுப்பதில் இந்திய தேசமும் விதிவிலக்கல்ல. நமது தேசத்திலும்கூட, போலி அறிவியலை அறிவியல் பாடத்திட்டங்களில் புகுத்திடுவதற்கான எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் ஒன்றில், ‘ஜோதிடம்’ ஒரு பாடப்பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது. அறிவியல்பூர்வமான சான்றுகள் இல்லாத போதும், பசுவின் கழிவுக்கு நோயைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் இருப்பதாகக் கூறப்படும் கட்டுக்கதைகளுக்கு ஆட்சியாளர்களின் அதிகாரப்பூர்வ ஆதரவும் இருக்கிறது. பசுவின் சிறுநீருக்கு நோயைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது என்னும் கருத்துக்கு ஆதரவாகப் புராதனக் கதைகளும் அரசாங்கத்தின் சுற்றறிக்கைகளில் மேற்கோளாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. இது போன்ற சூழல்களில், நமது அறிவியல் கல்வி அமைப்புகள் விமர்சன மனப்பான்மையை வெளிப்படுத்துமா ?அறிவியலுக்கான ஒரு சூழலை உருவாக்குவதில் நாம் உறுதியான பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், இலக்கு குறித்த தெளிவான பார்வையற்ற அரசியல் தலைமையின் காரணமாக, 1960 களுக்குப் பிறகு நாம் தளர்வுற்றோம். கற்பனைக்கும் எட்டாத வகையில், விதிமுறைகளில் சிக்குண்டு கிடக்கும் அதிகார வர்க்கம் மற்றும் தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொள்வதில் பேரார்வம் கொண்ட இந்திய அறிவுஜீவிகளின் குழுமத்தால் ( Indian Intelligentsia ) நிலைமை மேலும் மோசமடைந்தது.
தவறான தகவல் தொடுக்கும் தாக்குதல் ( Onslaught of Disinformation )
அறிவுப் பெட்டகம் என்பதைக் காட்டிலும், அறிவியல், ஒரு சிறப்பு வாய்ந்த சிந்தனை முறையாகும் என்று அறிஞர் கார்ல் சகன் குறிப்பிடுகிறார். பொதுமக்களும் சிறப்பான முறையில் புரிந்து கொள்வதற்கு ஏற்ப, அறிவியலின் சிக்கலான நுட்ப விவரங்களை எளிமைப்படுத்துவதும் ஒரு கலையே ஆகும். தகவல் புரட்சியின் எதிர்மறை கூறுகளில் ஒன்றான ‘உருவமைக்கப்பட்ட உண்மைகள்’ ( Manufactured Truths ), கட்டுக்கதைகள் மற்றும் பொய்யான செய்திகள் தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக, அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை மேற்கொள்ள உதவிடும் ஒரு பகுத்தறிவு உத்தியாக வினைபுரியும் அறிவியலின் பங்கினை நமது சக குடிமக்களும் உணரச் செய்திட வேண்டும்.
தவறான உலக கண்ணோட்டத்தை வார்த்தெடுக்கும் பகுத்தறிவின்மையொன்றும் நமது சமுதாயத்திற்குப் புதியது அன்று. ஆனால், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, அது போன்ற தவறான கண்ணோட்டம் மற்றும் தகவல்கள் நொடிப்பொழுதில் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைந்து விடுகிறது. தவறான தகவல்கள் ஜனநாயகத்தின் பல கூறுகளையும், மனித உரிமைகளையும் எவ்வாறு பலவீனப்படுத்துகிறது என்பதையும் நாம் பார்த்து வருகிறோம்.
போலி அறிவியலை ஊக்கப்படுத்தும் ஒருதலைப்பட்சமான, அறிவார்ந்த கருத்து குவியலுக்கு எதிராக நாம் களம் காண்கிறோம். மேற்குலகின் போற்றுதலுக்குரிய அறிவியல் அறிஞர்களான – கார்ல் சகன், ஸ்டீபன் ஹாக்கிங், ஸ்டீவன் வெயின்பெர்க், ஸ்டீபன் ஜெ கவுல்டு , கார்லோ ரோவெலி, ரிச்சர்டு டாக்கின்ஸ், நீல் டிகிராஸ் டைசன் மற்றும் நம் நாட்டு அறிவியல் அறிஞர்களான யஷ்பால், புஷ்பா பார்கவா மற்றும் ஜெயந்த் நர்லிகர் ஆகியோர் வலியுறுத்திக் கூறும் ஒற்றை கருத்து பின்வருமாறு: ” அறிவியலில் பின்பற்றப்படும் மிகவும் வெற்றிகரமான மற்றும் காலங்கள் பல கடந்தும் நீடித்து நிற்கும் முறைகளைப் பயன்படுத்தி உய்யச் சிந்தனைக்கான ( Critical Thinking ) தனித்திறத்தை வளர்த்திடல் வேண்டும்.”
அறிவியல் ரீதியாக நிரூபணமான உண்மைகளுக்கு எதிராகக் குவிக்கப்படும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளை விட்டொழிக்கும் அறிவுத் திறமற்று இருக்கும் அரசியலாளர்கள் மற்றும் அரசாங்க நிர்வாகத்தினர், அத்தகைய நம்பிக்கைகளைக் கடந்து வர மறுப்பதை நாம் எவ்வாறு எடுத்துரைப்பது? புறவயமான எதார்த்தத்தைப் ( Objective Reality ) பார்க்க மறுப்பதையும், மாயைகளை நொறுக்கும் முரண்பட்ட ஆதாரங்கள் பெறப்பட்ட பின்னரும் கூட, தனது சொந்த நம்பிக்கைகளைப் பற்றிக் கொண்டிருக்கும் மனப்பான்மையையும் நாம் எவ்வாறு எடுத்துரைப்பது? சுய-விழிப்புணர்வும் அறிவார்ந்த செயல்திறனும் குறைவாக இருக்கும் காரணத்தால், குறைவான விஷயஞானம் கொண்டிருப்பவர்களும் கூட, தங்களை நிபுணர்களாகக் கருதிக் கொள்கிறார்கள். இதற்கு மாறாக, ஏதேனும் ஒரு விஷயம் குறித்து அதிகம் தெரிந்தவர்கள், அது குறித்து நிச்சயமற்ற கருத்து கொண்டவர்களாக விளங்குகிறார்கள்; ஆதாரங்கள் இன்றி நம்ப மறுப்பவர்களாக விளங்குகிறார்கள்.
தேசத்தின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம், பழம்பெருமைகளையும், சாதனைகளையும் பற்றிய சொற்பொழிவுகளாகவும், நம்மை நாமே புகழ்ந்துரைத்துக் கொள்ளும் சாதாரண கொடியேற்று விழாவாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. ஒரு வளமான வருங்காலத்தைக் கட்டமைத்திட, நமது வெற்றி மற்றும் தோல்விகளை விமர்சன அடிப்படையில் மதிப்பீடு செய்திடக் கிடைத்த மகத்தான வாய்ப்பாகச் சுதந்திர தினக் கொண்டாட்டம் கருதப்பட வேண்டும். அத்தகைய வருங்காலத்தைக் கட்டமைப்பதில் அறிவியலும், அறிவியல் கல்வியறிவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தமிழில் – அருண் அசோகன்