பா.ஜ.கவின் தேசியக் கொடி பிரச்சாரம்: சில வரலாற்று குறிப்புகள்
நன்றி: தி இந்து நாள்: 26.08.2022
கட்டுரையாளர்: ஷம்சுல் இஸ்லாம், டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயிற்றுவிப்பவர்.
தற்போதைய அரசாங்கத்தின் வழிகாட்டிகள், மூவர்ணக் கொடி தேசியக் கொடியாகத் திகழ்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருபவர்கள் ஆவர்.
இந்தியாவின் ஆட்சியாளர்கள், அவர்களது கூட்டாளிகள் மற்றும் தற்போதைய அரசாங்க நிர்வாகத்தார் திடீரென்று நமது மூவர்ணக் கொடி மீது பெரும் பற்று கொண்டவர்களாக உருவாகி வருகிறார்கள். அனைத்து இல்லங்களிலும் மூவர்ணக் கொடி ஏற்றுவது (ஹர் கர் திரங்கா) எனும் பிரச்சாரத்தின் கீழ், 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 13 முதல் 15 வரை, 24 கோடி இல்லங்களில் மூவர்ணக் கொடியை ஏற்றிட ஒன்றிய பாஜக அரசாங்கம் முனைப்புடன் திட்டமிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1925ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து, இந்த அமைப்பானது, மூவர்ணக் கொடி இந்திய தேசியக் கொடியாகத் திகழ்ந்து வருவதை எதிர்த்து வருகிறது. தேசியக் கொடி மீதான இந்துத்துவ சக்திகளின் எல்லையற்ற வெறுப்புணர்வை அறிந்து கொள்ள, ஆர்.எஸ்.எஸ் மற்றும் வி.டி.சவர்க்கர் தலைமையிலான இந்து மகாசபையின் ஆவணத் தொகுப்புகளை ஒருவர் படிப்பதே போதுமானது ஆகும்.
கடிதப் போக்குவரத்து
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான, இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் குறியீடாகத் திகழ்ந்த எந்த ஒரு விஷயத்தையும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெறுத்தது. இதற்கு, தேசியக் கொடி மீதான அதன் வெறுப்புணர்வு மிகவும் பொருத்தப்பாடு நிறைந்த ஒன்று ஆகும். 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, அந்த ஆண்டு முதல் இனி வரும் ஆண்டுகளில் ஜனவரி 26 ஆம் நாளை, மூவர்ணக் கொடியை ஏற்றி, கொடிக்கு (விடுதலைப் போராட்ட இயக்கத்தின் போது மூவர்ணக் கொடியில் நூல் நூற்பு இராட்டை இடம் பெற்றிருந்தது) வீரவணக்கம் செலுத்தி, சுதந்திர தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்தது. ஆனால், அதற்கு எதிர்மறையாக, காவிக் கொடியை தேசியக் கொடியாக வணங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்-தலைவர் கே.பி.ஹெட்கேவர், அனைத்து ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கும் 1930 ஜனவரி 21 அன்று சுற்றறிக்கை அனுப்பினார்.
தேசிய கருத்தொற்றுமையைத் துச்சமெனத் தூக்கியெறிந்துவிட்டு, 1930 ஜனவரி 26 அன்று மாலை 6 மணிக்கு, ஷாகாக்கள் நடைபெறும் அவரவர் ஸ்தலமான சங்கஸ்தானத்தில் அணிதிரண்டு காவிக் கொடியை ஏற்றி, அதனைத் தேசியக் கொடியாகப் போற்றிட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.[ ஆதாரம்: Dr. ஹெட்கேவர் கடிதங்களின் இந்தி மொழிபெயர்ப்பு, அர்ச்சனா பிரகாஷன், இந்தூர், 1981, ப.எண்: 18 ]
இந்தச் சுற்றறிக்கை வாபஸ் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1946, ஜூலை 14 அன்று நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் குருபவுர்ணமி நிகழ்வுக்காக கூடியிருந்தவர்கள் மத்தியில், அந்த அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரும், புகழ்பெற்ற இந்துத்துவ சித்தாந்தவாதியுமான எம்.எஸ்.கோல்வால்கர் பேசியது பின்வருமாறு: “காவிக் கொடியே பாரதப் பண்பாட்டை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அதுவே, இறைவனின் காட்சிப் பிரமாணம் ஆகும். தேசம் முழுவதும் இறுதியில் காவிக் கொடியைப் போற்றிப் புகழ்ந்து பணிந்திடுமென்று நாம் உறுதிபட நம்புகிறோம்.” [ எம். எஸ். கோல்வால்கர் தொகுதி 1, பாரதீய விசார் சாத்னா, நாக்பூர், ப.எண்: 98 ]
தேச விடுதலையின் போது, செங்கோட்டைக் கொத்தளத்தில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் சாமானிய மக்கள் தமது கரங்களில் மூவர்ணக் கொடியை ஏந்தி வீறுநடை போட்டனர்; வீடுகளின் உச்சத்தில் தேசியக் கொடியைப் பறக்கச் செய்தனர். ஆனால், அதிர்ச்சி கொள்ளத்தக்க வகையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆங்கில இதழான ஆர்கனைசரில் 1947 ஆகஸ்ட் 14 அன்று, தேசியக் கொடியின் மாண்பைச் சிதைக்கும் வண்ணம் எழுதப்பட்டது பின்வருமாறு: “விதியின் தயவால் இன்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் நமது கைகளில் மூவர்ணக் கொடியைக் கொடுத்து விடலாம். ஆனால், அந்தக் கொடி ஒருபோதும் இந்துக்களால் ஏற்கப்படவோ, மதிக்கப்பவோ மாட்டாது. ‘மூன்று’ எனும் அந்தச் சொல்லே தீமை பயக்கக்கூடியது, மூன்று வண்ணங்களைக் கொண்ட ஒரு கொடி, நிச்சயமாக, மிக மோசமான உளவியல் விளைவை ஏற்படுத்தும் என்பதோடு, தேசத்திற்கு சேதம் விளைவிக்கக் கூடியதாகும்.”
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பொறுத்தவரையில், இந்திய தேசியக் கொடி ஒருபோதும் இந்துக்களால் மதித்துப் போற்றத்தக்கதன்று; தேசத்திற்கு அந்தக் கொடி சேதத்தை உண்டாக்கக் கூடியதாகும்.
தலையங்கம்
ஆர்கனைசர் இதழின் தலையங்கம் [ “தேசத்தின் கொடி” ஜூலை 17 1947 ] ஒன்றில், இந்திய அரசியல் நிர்ணய சபையின் தேசியக் கொடிக்கான குழு, மூவர்ணக் கொடியைத் தேசியக் கொடியாக ஏற்க முடிவு செய்தது குறித்து எழுதப்பட்டது பின்வருமாறு: “இந்தியாவின் அனைத்து சமூகங்கள் மற்றும் பிரிவினருக்கு ஏற்புடையதாகக் கொடி இருந்திடல் வேண்டும் என்பதை நாம் ஒருபோதும் ஏற்பதாக இல்லை. இது முற்றிலும் முட்டாள்தனமானது. கொடி, தேசத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்துஸ்தானத்தில் இந்து தேசம் என்னும் ஒற்றைத் தேசம் மட்டுமே இருக்கிறது. அனைத்து சமூகங்களின் அபிலாஷைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் கண்ணோட்டத்துடன் கூடிய ஒரு கொடியை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. நமக்கான சட்டை அல்லது கோட்டைத் தைப்பதற்கு தையல்காரரிடம் கூறுவது போல் கொடியைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கூறிவிட முடியாது.”
இதுவே சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நமது மூவர்ணக் கொடியின் வடிவமைப்பு பற்றிய ஆர்.எஸ்.எஸ்.-ன் கருத்தாக இருந்தது.
1947 க்குப் பின்னர்
தேச விடுதலைக்குப் பின்னரும் கூட, மூவர்ணக் கொடியைத் தேசியக் கொடியாக ஏற்க ஆர்.எஸ்.எஸ் மறுத்தது. தேசியக் கொடியாக மூவர்ணக் கொடி தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்த கோல்வால்கர், தனது ‘சிந்தனைக் கொத்து’ [ Bunch of Thoughts, Collection of writings/speeches of Golwalkar ] என்னும் நூலில் எழுதியிருப்பது பின்வருமாறு: “நமது தேசத்திற்காக ஒரு புதிய கொடியை நமது தலைவர்கள் வடிவமைத்துள்ளார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள்? அவர்களின் செயல் நோக்கமின்றிப் பயணிப்பதாகும், மற்றொன்றைப் பின்பற்றுவதுமாகும். நமது தேசம் பழம்பெரும் தேசம்; தொன்மைப் புகழ்வாய்ந்த மாபெரும் தேசமாகும். நமக்கென்று சொந்தமாகக் கொடி இருந்ததில்லையா? ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமக்கென்று தேசியச் சின்னம் இருந்ததில்லையா? ஐயத்திற்கு இடமின்றி, அவை இருந்தன. பிறகு, ஏன் நமது சிந்தனைகளில் இது போன்ற பெரும் வெற்றிடம்? இது போன்றதொரு இன்மை நிலை.” [ M. S. Golwalkar, Bunch of Thoughts, Sahitya Sindhu Prakashan, Bangalore, 1966 pp 237-38 ]
சாவர்க்கரும் மூவர்ணக் கொடியை தேசியக் கொடியாக ஏற்க மறுத்தார். தேசியக் கொடியைப் புறக்கணிக்கக் கோரிய அவர், 1941ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று தனது பிரகடனத்தை அறிக்கை ஒன்றில் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: “பரந்து விரிந்த இந்துஸ்தானத்தில் மதித்துப் போற்றப்பட்ட, யுகம் யுகமாகத் தொடர்ந்திடும் கோட்பாடு மற்றும் இந்து மதத்தின் மிகப் புராதனமானக் குறியீடுகளான ‘ ஓம் மற்றும் ஸ்வஸ்திக்’ சின்னங்களைக் கொண்ட ‘குண்டலினி க்ருபாணங்கித்’ மகாசபையின் கொடியைக் காட்டிலும் இந்து சாம்ராஜ்யத்தை முழுவதுமாக வேறு எந்தவொரு கொடியும் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதை இந்துக்கள் அறிவார்கள். எனவே, அகண்ட இந்து சாம்ராஜ்யக் கொடியை மதித்துப் போற்றாத எந்தவொரு ஸ்தலத்தையும், விழாவையும் இந்து மகாசபை உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும். இந்துக்களின் தொன்மை வாய்ந்த தேசத்திற்கும், பெருமித உணர்வுக்கும் நூல் நூற்பு இராட்டை ஒருபோதும் குறியீடாக இருந்திட முடியாது. [ Extracts from the President’s Diary of his Propagandist tours Interviews from December 1937 to October 1941, Bombay PN: 469, 473 ]
தேசியக் கொடியாம் மூவர்ணக் கொடியைக் கொச்சைப்படுத்தி, தேசியக் கொடிக்கு மாற்றாக காவிக் கொடியை முன்னிலைப்படுத்தும் செயல்திட்டத்தைக் கைவிடுமாறு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பாஜக அரசாங்கம், சமாதானம் செய்து இருந்தால், இந்த அரசாங்கத்தின் [ ஹர் கர் திரங்கா ] பிரச்சாரம், ஒருவேளை, பொதுமக்களிடம் நம்பகத்தன்மையைப் பெற்றிருக்கக்கூடும்.
இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் அமைப்பை நீர்ந்து போகச் செய்வதற்கான மாபெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் இந்தக் காவிக்கொடி என்பதை நாம் நமது சிந்தனையில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பு: இக்கட்டுரைக்கான ஆதாரங்கள் – ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபை வெளியீடுகளில் இருந்து பெறப்பட்டவை ஆகும்.
தமிழில் – அருண் அசோகன்