கட்டுரைகள்

தமிழ்நாடு அரசே! சிறுபான்மை ஆணைய அரசாணையை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏன்?

-நீ சு பெருமாள்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மொழிவாரி சிறுபான்மையினர் சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் விதி: 350B.யின் படி, மொழிவழி சிறுபான்மையினருக்கான சிறப்பு அதிகாரி ஒருவர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 

இந்த அரசியலமைப்பின் கீழ் மொழிவழி சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய்ந்து, குடியரசுத் தலைவர் கவனத்திற்கு அறிக்கையாக வழங்க வேண்டும். 

நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் முன்பும் அந்த அறிக்கை வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கும் அந்த அறிக்கையின் விபரங்கள் அனைத்தும் அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் சிறுபான்மையினர் நலன்கள் உறுதி செய்ய வேண்டும் என்றெல்லாம் அரசியலமைப்பு சொல்கிறது. 

ஆனால், இந்த நடைமுறைகள் முறையாக தற்போது நடைபெறுவதில்லை. இந்திய மக்கள் தொகையில் 20 விழுக்காடு கொண்ட இசுலாமியர்களின் ( சமூகப் பொருளாதார ரீதியிலான உண்மைப் பிரதிநிதியாக ) பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினரும் தற்போது இல்லை. மாநிலங்களவையிலும் ஒரே ஒருவர்தான் இசுலாமியர். இந்த நிலையில், மொழிவாரி சிறுபான்மை மக்களின் நலன்களைப் பற்றி ஒன்றிய பா.ஜ.க அரசு எப்படி கவலைப்படும்.?

ஒரே நாடு, ஒற்றை கலாச்சாரம், ஒரே தேர்தல் என்றெல்லாம் முழக்கமிடும் பாஜக அரசிடம் சிறுபான்மை மக்கள் நிலை குறித்து என்ன பேச முடியும் ?

தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்ற மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணி காத்திட முதன் முதலில் 1989 ஆம் ஆண்டில் டிசம்பர் 13-ல் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் உத்தரவுப்படி, மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது.  பின்னர் சட்டபூர்வ அதிகாரம் பெற்ற ஆணையமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனை திருத்தி (Act 21 of 2010) மீண்டும் கலைஞர் ஆட்சியில் மேம்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வருவதாகவும், இந்த ஆணையத்தை தமிழ்நாடு முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருத்தியமைத்து , அதன் தலைவராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் . பீட்டர் அல்போன்ஸை நியமித்து கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தமிழக முதல்வரால் திருத்தியமைக்கப்பட்ட மாநில சிறுபான்மை ஆணையத்தில் மொழிவாரி சிறுபான்மையினரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, தலைவரைத் தவிர்த்து ஆணையத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 13 ஆக உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில் குறிப்பாக 9 பேர் மத சிறுபான்மையினராகவும், 4 பேர் மொழிவாரி சிறுபான்மையினராகவும் இடம் பெறுவர் எனவும் தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது. 

மேலும் அந்த அரசாணையில் , மதம் மற்றும் மொழி பிரிவைச் சேர்ந்த தலா ஒருவர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருப்பார். மொழி சிறுபான்மையினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்றும், அதன்படி தமிழகத்தில் வாழ்ந்து வரும் தெலுங்கு, மராத்தி, உருது, கன்னடம், மலையாளம், சௌராஷ்டிரா ஆகிய மொழி பேசும் பிரிவைச் சேர்ந்தோர் 4 பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் மத ரீதியாக மட்டுமே சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினராக இருந்து வந்த நிலையில் அனைத்துப் பகுதி மக்களின் கோரிக்கைகளும் தமிழக அரசின் கவனத்திற்கு வரவேண்டும் என்கிற வகையில் மொழிவாரி சிறுபான்மையினராக இருப்பவர்களையும் கவனத்தில் கொண்டு ஆணையத்தின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து அரசாணை வெளியிட்டது வரவேற்கத்தக்கது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டு கடந்து விட்ட நிலையில் இன்றைக்கும் சிறுபான்மை ஆணையத்தின் உறுப்பினராக 9 பேர் மட்டுமே இருந்து வருகின்றனர்.

அதாவது மதரீதியான பிரநிதித்துவம் மட்டுமே உள்ளது. கிறித்தவம், இசுலாம், சீக்கியர், ஜெயின், பௌத்தம் ஆகிய மதங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆணையமாகவே தொடர்கிறது.

கடந்த ஓராண்டுக்குள் வெளியிடப்பட்ட தமிழக அரசாணைகளில் நிலுவையில் உள்ள அரசாணையாக சிறுபான்மை ஆணையத்தின் திருத்த அறிவிப்பு உள்ளது.

இந்தி மொழி பேசுவோரும் தமிழகத்தில் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்களின் பிரதிநிதியும் மொழிவாரி சிறுபான்மை ஆணையத்தில் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்த காரணத்தால் தான் இதனை தமிழக அரசு கிடப்பில் போட்டுவிட்டது என்றெல்லாம் இணையதளத்தில் கம்பு சுற்றி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக முதல்வர் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். 

தூய இந்தி பேசுவோர் தாய்மொழியாகக் கொண்டோர் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. பல வட இந்திய மாநிலங்களில் உள்ள வட்டார மொழிகளைக் கொண்டு சமஸ்கிருதத்தின் குழந்தையாகத்தான் இந்தி உலவுகிறது. எனவே அந்த மொழியை சிறுபான்மை ஆணையத்தில் அமர வைக்க இயலாது என்பதே உண்மை நிலையாகும். 

தமிழகத்தில் காலம் காலமாக வாழ்ந்து வரும் மொழிவாரி சிறுபான்மை பிரிவு மக்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாகவும் மேம்பட வணிகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தமிழக அரசின் நேரடி கவனத்திற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இந்த ஆணையத்தின் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் என்பதால் தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் சிறுபான்மை ஆணையத்தின் அறிவிப்பு நடைமுறையில் வருவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தொடர்புக்கு: 9442678721 / 7904234672

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button