“மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்று ஒன்று இருக்கிறதா?
-ச செல்வகுமார்
சமீப நாட்களில் கவனத்தையும், விவாதத்தையும் கோரும் சொற்பிரயோகம் ஒன்று முன்னணிக்கு வந்து இருக்கிறது.
“மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்பது தான் அந்தச் சொற்பிரயோகம். இந்தச் சொற்பிரயோகம் கடந்த காலங்களிலும் உலா வந்திருக்கிறது. அப்போது இதனை எதிர்கொண்ட முறைகளையும், கட்டுரைகளையும் திரும்ப வாசிக்கக் கிடைக்கச் செய்வதுடன் இன்றைய காலத்திற்கேற்றவாறு மீண்டும் அது குறித்து உரையாடத் துவங்குவது அவசர அவசியமானதாகும்.
அதன் காரணமாகவே, “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற சொல்லாடல் சரியானது தானா? அதைப் பயன்படுத்துவதில் என்ன தவறு? மார்க்சிய சிந்தனை முறைகளை முன்னெடுப்பதற்கு உதவுகிறதா? அல்லது தடையாக இருக்கிறது? என்பதைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும்.
மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற சொல்லைப் பயன்படுத்தும் நபர்கள் எந்த அர்த்தத்தில் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்று தேடினால், அது குறித்து தெளிவான விளக்கங்கள் கிடைப்பதில்லை. விளக்க முற்படும் பலருடைய எழுத்துக்களும் குழப்பம் நிறைந்தவையாகவே இருக்கின்றன. முடிவாக ஒரு தீர்மானகரமான வழியைக் சொல்லாமல் விருப்பப்பட்டதை எல்லாம் எழுதி முடித்துவிட்டு கடைசி வாக்கியமாக “எனவே, மண்ணுக்கேற்ற மார்க்சியம் அவசியம்” என்று வலியுறுத்துகிறார்கள்.
தெளிவற்ற முறையில் முன்வைக்கப்படும் தகவல்களை எல்லாம் தொகுத்து, அதனைத் தத்துவம் மற்றும் நடைமுறை என இரண்டிலும் பொருத்திப் பார்த்து விடை காண முயல்வோம்.
தத்துவார்த்த தளத்தில் மார்க்சியத்தை மண்ணுக்கேற்ப மாற்றியமைக்க முடியுமா? என்று யோசிக்க வேண்டுமென்றால் முதலில் தத்துவம் என்றால் என்ன? மார்க்சியம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு சமூக விஞ்ஞானத் தத்துவம் என்று ஏன் அழைக்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் அதை மண்ணுக்கேற்ப மாற்றியமைக்க வேண்டுமா? மண்ணுக்கேற்ப மாற்றியமைக்க முடியுமா? என்று முடிவு செய்ய முடியும்.
தத்துவம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பலரும் பலவிதமான பொருள் சொல்லி இருந்தாலும் கிடைத்த விளக்கங்களிலேயே மிகச்சிறப்பானதும், மிகத்தெளிவானதுமான விளக்கம் என்பது ஜார்ஜ் பொலிட்சர் அளித்த விளக்கமான “எவற்றையெல்லாம் நடைமுறையில் மெய்ப்பித்துச் சாதிக்க விரும்புகிறோமோ, அவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் ஞானம்தான் தத்துவம்” என்பது தான்.
அந்த வகையில், மனித சமூகம் இதுவரை கடந்து வந்த வரலாற்றையும், அதன் நிகழ்கால, எதிர்காலப் போக்குகளையும் மார்க்சியத்தின் மூன்று அடிப்படைகளான
- இயங்கியல் பொருள்முதல்வாதம்
- அரசியல் பொருளாதாரம்
- விஞ்ஞான சோசலிசம்
என்று விரிவாக விஞ்ஞானப்பூர்வமான முறையில் மார்க்சிய தத்துவம் விளக்குகிறது.
மேற்கண்ட அடிப்படைகளைக் கவனத்தில் கொண்டு விஞ்ஞானப்பூர்வமான இன்னொரு தத்துவத்தோடு சம்பந்தப்படுத்தி விளங்கிக் கொள்வதற்குப் பதிலாக உயிரியல், இரசாயனம், பெளதீக தத்துவங்களின் துணையோடு செயல்பட்டு அதை எதார்தத்தில் பொருளாகப் படைத்துத் தரும் விவசாயத்தோடு தொடர்புபடுத்தி மண்ணுக்கேற்ற விவசாயம் என்பதைப் போல மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற வாதத்தை முன்வைக்கிறார்கள்.
அதனை நிறுவவதற்கான வாதங்களை அவர்கள் முன்வைக்கிறபோது அமெரிக்காவில் ஆப்பிள் விளையும், ஈரோட்டில் அரசாணிக்காய் தான் விளையும் எனவே எப்படி மண்ணுக்கேற்பத்தான் ஒரு பொருளை விளைவிக்க முடியுமோ அப்படியே தான் மண்ணுக்கேற்ப மார்க்சியத்தை மாற்றியமைக்க வேண்டும் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட கருத்துக்களைப் பொருள்முதல்வாத கருத்தாகக் கருத முடியாது. அவற்றை கருத்துமுதல்வாதமாகத்தான் கருத வேண்டும். ஏனென்றால் இன்று தவிர்க்கவே இயலாமல் நாம் பயன்படுத்தும் மிளகாய் பொலீவியா & மெக்சிகோவிலிருந்து வந்தது, தக்காளி பெரு & ஈக்வடாரிலிருந்து வந்தது, நிலக்கடலை பொலீவியாவின் தென்பகுதி & அர்ஜெண்டீனாவின் வடமேற்குப் பகுதியிலிருந்து வருகை தந்த பொருட்கள்…
இதன் அடிப்படைலிருந்து புரிந்து கொள்ள வேண்டியது ஒரு சீதோஷ்ன நிலை நிலவும் பகுதியில் விளையும் பொருட்கள் அதே சீதோஷ்ன நிலை நிலவும் வேறு பகுதியிலும் விளைவிக்க முடியும் என்று விவசாய உற்பத்தியில் நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் விளையும் ஆப்பிள் இந்தியாவில் சிம்லா, காஷ்மீர் போன்ற இடங்களில் விளைகின்றன மேலும் வளைகுடா நாடுகளில் விளைவிளையும் பேரீட்சை இந்தியாவின் பல பகுதிகளிலும் விளைவிக்கப்படுகிறது.
உண்மைமைக்குப் புறம்பாகக, கற்பனையில் முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு கருத்துமுதல்வாதம் என்று ஏராளமான விசயங்களில் மார்க்சியம் நிரூபித்து இருக்கிறது.
மார்க்சியம் விஞ்ஞான ரீதியில் சமூகத்தை ஆய்வு செய்யும் தத்துவம் ஆகும். எனவே, அதை அதே வகையில் செயல்படும் இன்னொன்றோடு ஒப்பீடு செய்தால் தான் பொருத்தமாக இருக்கும்.
மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பதை வலியுறுத்துபவர்களின் இன்னொரு புரிதல் மார்க்சியம் என்பதைக் கண்டறிந்தவர்கள் ஐரோப்பியர்கள். அவர்கள் அவர்களுடைய வாழ்வியல் சூழ்நிலைகளின் மூலமாக அந்தப் பிரதேசத்திற்குத் தகுந்த ஒன்றைக் கண்டறிந்து இருக்கிறார்கள். அது இந்தியச் சூழ்நிலைக்குப் பொருந்தாது. எனவே இந்திய மண்ணிற்கு ஏற்றபடி மாற்றியமைக்க வேண்டும். எனவே, மார்க்சியத்தை மண்ணுக்கேற்ப மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
மார்க்சியம் என்பது ஒரு அறிவியல் முறை. அது சமூகத்தை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்ய உதவும் ஒரு வழிகாட்டி என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதால் தான் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று குழப்புகிறார்களோ என்றும் நினைக்கவேண்டி இருக்கிறது.
அதை ஏதேனும் ஒரு உதாரணத்தோடு விளக்க முற்பட்டால் உதாரணமாகச் சொல்லப்பட்ட விசயத்தை பிடித்துக்கொண்டு அந்த உதாரணத்தை ஆய்வு செய்யக் கிளம்புகிறார்கள் அல்லது அந்த உதாரணத்தைக் கிண்டலடித்துக் கடந்து போகிறார்கள்.
மார்க்சியத்தை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்போடு ஒப்பிட்டால் ஓரளவு தெளிவு பெற வாய்ப்பு கிடைக்கும்.. உதாரணத்திற்கு மின்சாரம் என்பது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு. அதை அனல், நீர், காற்று என்று ஏதேனும் ஒரு முறையில் உற்பத்தி செய்ய முடியும். ஆனால் மின்சாரத்தைப் பயன்படுத்தும் யாரும் அது மண்ணுக்கேற்ற மின்சாரமா? என கேள்வி கேட்பதே இல்லை.. எப்படி மண்ணுக்கேற்ற மின்சாரம் என்ற ஒன்று இல்லையோ அப்படியேதான் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. அதை நடைமுறைப்படுத்தும் முறைகளை, விளக்கப் பயன்படுத்தும் உதாரணங்களை வேண்டுமானால் மண்ணுக்கேற்ப, மொழியில் உள்ள சொற்களின் வளத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம்.
ஒட்டுமொத்த மனித சமூகத்தின் உற்பத்தி முறையை, உற்பத்தி உறவுகளை விளக்கும் ஒரு தத்துவத்தை ஐரோப்பாவின் சூழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்ட தத்துவம் என்று சுருக்கிப் புரிந்துகொள்ளும் தவறான சிந்தனையிலிருந்து வெளிவந்து மிகச்சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும் அல்லது அது ஐரோப்பாவின் உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகளை மட்டுமே விளக்குகிறது என ஆய்வுப்பூர்வமாக நிறுவ வேண்டும். ஆய்வுப்பூர்வமாக நிறுவ முடியாமல் தான் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற கருத்தை முன்வைப்பவர்கள் கற்பனையான கட்டுக்கதைகளை முன்வைக்கிறார்கள். அப்படிப்பட்ட கருத்துக்களை தத்துவார்த்த தளத்தில் கருத்துமுதல்வாதிகளின் கருத்தாகக் கருதி மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பது உறுதியாக நிராகரிக்கப்பட வேண்டும்.
தத்துவார்த்தத் தளத்தில் வலியுறுத்தவில்லை அந்தந்த நாடுகளின் சூழ்நிலைக்கேற்ப நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதைத் தான் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று சொல்கிறார்கள் என்றால் முதலில் நடைமுறை என்றால் என்ன? என்பதைப் பற்றிய ஜார்ஜ் பொலிட்சரின் வரையறையைக் கூர்மையுடன் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு விஷயத்தை அல்லது தத்துவத்தை எதார்த்தத்தில், வாழ்க்கை அனுபவத்தில் வெளியிடச் செய்யும் செய்கையைத்தான் நடைமுறை என்கிறோம். உதாரணமாக, தொழிலும், விவசாயமும் என்ன செய்கின்றன? இரசாயனத் துறையையோ அல்லது பௌதீகத் துறையையோ அல்லது உயிரியல் துறையையோ சேர்ந்த சில தத்துவங்களை அவை எதார்த்த அனுபவமாகச் (பொருளாக) செய்து தருகின்றன.
அப்படியென்றால் மார்க்சியத்தை நடைமுறைப்படுத்துவதில் கையாளும் முறைகளை மண்ணுக்கேற்ற மார்க்சியம் என அழைக்க முடியாது. மண்ணுக்கேற்ற நடைமுறை என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.. அதை மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற சொற்களால் பயன்படுத்த முடியாது.
ஒரு தத்துவத்தை விளக்கிச் சொல்லி அதை மக்களை ஏற்கச் செய்யும் நடைமுறைகள் என்று வரும் போது “மண்ணுக்கேற்ற மார்க்சியர்கள்” முன்வைக்கும் இன்னொரு வாதம் லெனின் ரஷ்யாவிற்கு ஏற்றவாறும், பிடல் காஸ்ட்ரோ கியூபாவிற்கு ஏற்றவாறும், ஹோசிமின் வியட்நாமிற்கு ஏற்றவாறும் நடைமுறைப்படுத்தினார்கள் என்று விளக்கமளிக்கிறார்கள்.
உண்மையில், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவிற்கு ஏற்றபடியான நடைமுறைகளைத்தான் முன்னெடுக்கிறார்கள். அவை மத்தியில் ஆட்சியை நிறுவும் அளவிற்கு வெற்றியடையவில்லை என்பதற்காக நடைமுறைகள் இந்திய மண்ணிற்கு ஏற்ப இல்லை என சொல்ல முடியாது அல்லவா? பல மாநிலங்களில் வெற்றிகரமாக ஆட்சியை அமைத்திருக்கிறோம்.. பல காரணங்களால் ஆட்சியை இழந்தும் இருக்கிறோம். எனவே, இந்திய மண்ணுக்கேற்ப நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்பதில் இன்னொரு மறைவான கருத்தும் புதைந்து இருக்கிறது.
இந்தியாவில் பல்வேறு வகையான மத, ஜாதி அமைப்புகள் இருக்கின்றன. அதையொட்டி தத்துவம் என்ற வரையறைக்குள் வரவே இயலாத பல தனிநபர்களின் கருத்துக்களைத் தொகுத்து அதை தத்துவங்கள் என்று நிறுவுவதற்கு முயல்கிறார்கள், அதை மக்களிடம் பரப்பி அதன் மூலம் மக்களைத் திரட்டியும் வருகிறார்கள்.
சில பொதுவான மக்கள் பிரச்சினைகள முன்வைத்து ஜனநாயக சக்திகள் என்கிற அளவில் அவற்றோடு இணைந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டங்களை நடத்திவருகின்றன. அவற்றோடு இணைந்து போராட்டங்களை நடத்தும் அதே வேளையில் தத்துவார்த்தத் தளத்தில் அவற்றின் தவறுகளை, போதாமைகளை விமர்சித்தும் வருகிறார்கள். விமர்சிப்பதைக் கைவிட்டு அந்தத் தத்துவங்களை அங்கீகரிக்க வேண்டும், என்பதைத்தான் வேறுவேறு வார்த்தைகளில் முன்வைத்து இறுதியாக முடிக்கும் போது மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்று சொல்லி வருகிறார்கள்.
அவைகளைத் தத்துவார்த்த தளத்தில் தத்துவமாக நிறுவாமல் அங்கீகரிக்கக் கோருவது நியாயமும் அல்ல, அது சரியான மார்க்சிய அணுகுமுறையும் அல்ல.
ஜனநாயக சக்திகள் என்கிற அளவில் அவற்றோடு இணைந்து வேலை செய்வதில் சரியான அணுகுமுறைகளைத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் மேற்கொள்கின்றன. நடைமுறை வேலைகளில் பங்கேற்கும் பிற தத்துவமல்லாத, அடையாளைத்தை முன்வைத்து திரட்டப்பட்ட மக்கள் திரளின் எண்ணிக்கையைக் காட்டி மார்க்சியத்திற்கு இவை பயன்படும் என்று சொல்வது மார்க்சியத்தைச் சரியான முறையில் கற்றுக்கொள்ள முடியாதவர்களின் தத்துவ பலவீனமே காரணமாக இருக்க முடியும். தத்துவத்தில் பலவீனமாக இருப்பவர்கள் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் தங்கள் எழுத்தாற்றலால் குழப்பமடைய வைக்கிறார்கள்.
முதலாளித்துவ நலன்களைத் தங்கள் கொள்கையாக வைத்து இருப்பவர்களையும், தனிமனிதர்களின் அடையாளங்களையும், மத- ஜாதி அடையாளங்களையும் பயன்படுத்தித் திரட்டப்பட்ட மக்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி அவற்றை அங்கீகரித்தால் தான் இந்தியாவில் மார்க்சியம் வளரும் என்ற ஒரு விவாதத்தை முன்வைப்பது மக்களை மார்க்சியத்தை நோக்கி வரவைப்பதற்காக வேலை செய்வோரையும், மக்களையும் குழப்பும் வேலையாகும்.
எல்லா வகையான அடையாளங்களையும் விட்டு வெளியேற மக்களுக்கு மார்க்சிய தத்துவத்தை கற்றுக்கொடுப்பதே மார்க்சியம் கற்றுக்கொண்டவர்களின் முதன்மையான பணியாக இருக்க வேண்டும்.
விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை உலகில் எவராலும் மார்க்சியம் முன்வைத்த தத்துவார்த்த விளக்கங்களுக்கு எதிராக இன்னொரு கருத்தை நிறுவ முடியவில்லை. அதற்குப் பதிலாக மார்க்சியத்தை குழப்புவதையும், அதன் கருத்துக்களை சிதைப்பதையும், திரித்து விளக்கமளிப்பதையே பிரதான வேலையாக முதலாளித்துவம் செய்துவருகிறது.
மார்க்சியம் முன்வைக்கிற ஒவ்வொரு கருத்துக்களுக்கும் முன்னும், பின்னும் ஏதேனும் வார்த்தைகளை இணைத்து மார்க்சியத்தின் பெயராலேயே மார்க்சியக் கருத்துக்களை மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்பது போன்று திரிப்பதையும், குழப்புவதையும் மார்க்சியம் படித்தவர்கள் கைவிடவேண்டும்.
இத்தகைய திரிபுவாத கருத்துக்களுக்கு எதிராக தோழர் தோதாத்ரி அவர்கள்: “மார்க்சியம் ஒரு விஞ்ஞானம். அது நியூட்டனின் அல்லது ஐன்ஸ்டைனின் விதியைப் போன்றது. தத்துவரீதியாக அது இயங்கியல், பொருள்முதல்வாதம் சமுதாய ரீதியாகப் பொருளாதார உறவுகள் தாம் எல்லாவற்றிற்கும் அடிப்படையானவை என்பது மார்க்சியம். மாறுதல்களை ஏற்றுக்கொள்வது மார்க்சியம். வர்க்கப் போராட்டம்தான் சமுதாயத்திற்கு உந்துவிசை என்பது மார்க்சியம். சுரண்டலற்ற சமுதாயத்தினைப் பற்றிக் கூறுவது மார்க்சியம். மற்றவை அப்படியல்ல. பெண்ணியம் பெண் விடுதலை பற்றியது. தலித்தியம் விளிம்புநிலை மக்கள் பற்றியது. பெரியாரியம் அடிப்படை மாறுதலை வலியுறுத்தாமல், சமூக சீர்த்திருத்தக் கருத்துகளை முன்வைப்பது. இவற்றிற்கும் மார்க்சியத்திற்கும் வேறுபாடுகள் உண்டு. இவை முற்போக்கானவைதாம் என்றாலும், இவை மார்க்சியத்தினை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. பெண்ணியக் கொள்கைகளில் மார்க்சியம் சார்ந்ததும் உண்டு; அதிலிருந்து வேறுபட்ட கொள்கையும் உண்டு. தலித்தியத்தில் மார்க்சியம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவர்கள் கூறும் காரணம் அது வன்முறையானது என்பதாகும். பெரியாரியவாதிகளும் மார்க்சியத்தினை அவர்களின் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள். அது பெரியாரிய மார்க்சியம் எனப்படுகிறது. இப்படி முரண்படும் கோட்பாடுகளை மார்க்சியத்துடன் இணைப்பது என்பது சாத்தியம்தானா? மேலும் இந்த வாதத்தினை முன்வைப்பவர்கள் மார்க்சியம், பெண்ணியம், பெரியாரியம், தலித்தியம் ஆகியவற்றைச் சமமாகவே காண்கின்றனர். இது சரியான பார்வை ஆகாது. மார்க்சியம் அடிப்படையானது. இதன் உதவியுடன் சகலத்தையும் விளக்கமுடியும். ஆனால், பெண்ணியத்தையோ, பெரியாரியத்தையோ வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் விளக்கமுடியாது. பெண்ணியம், பெரியாரியம், தலித்தியம் ஆகியன முன்வைக்கும் கருத்துகள் அந்தந்தத் துறைகளுக்குப் பொருத்தமானவையே. இவற்றில் ஒட்டுமொத்தப் பார்வை என்பது இல்லை. இவற்றில் உண்மை உண்டு. ஆனால் அந்த உண்மை துறை சார்ந்த உண்மையே தவிர சகலத்திற்கும் பொருத்தமான உண்மையில்லை. மார்க்ஸ் கூறும் வர்க்கப் பார்வை எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். மற்றவை அப்படி அல்ல. எனவே அடிப்படையான ஒன்றைத் துறை சார்ந்த பார்வையுள்ளவற்றிற்குச் சமமாக மார்க்சியத்தைக் காண்பது சரிதானா என்ற கேள்வி எழுகிறது. இதற்கு மாறாக, மார்க்சியத்துடன் பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம் என்று எல்லாவற்றையும் இணைத்தாலோ இவற்றிற்குச் சமமாக மார்க்சியத்தைப் பார்த்தாலோ மார்க்சியம் வினோதமான உடையணிந்த கோமாளியாகவே இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வோம்” என்று கூறுகிறார்.
மார்க்சிய கருத்துக்களை குழப்புவது, திரிப்பது போன்ற எந்தச் சின்னஞ்சிறு வேலைகளும், முயற்சிகளும் முதலாளித்துவவாதிகள் செய்துவரும் மார்க்சியத்திற்கு எதிரான பணிகளுக்கு உதவுமே தவிர, அவை மார்க்சியத்தை வளப்படுத்த உதவவே உதவாது.
எனவே, மார்க்சியத்திற்கு எதிராகவும், மார்க்சியத்திற்கு ஆதரவான கருத்து என்ற போர்வையிலும் மார்க்சியத்தைக் குழப்ப முன்வைக்கப்படும் ஒவ்வொரு மிகச்சிரிய முயற்சிகளையும், கருத்துக்களையும் மிகக் கூர்மையுடன் கவனித்து முறியடிப்பது ஒன்றே மார்க்சியர்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணியாகும். மார்க்சிய தத்துவத்தை முன்வைத்து வர்க்க அரசியலை நோக்கி மக்களைப் பெருந்திரளாக அணிதிரட்டுவோம். மார்க்சியம் எப்போதும் வெற்றியே பெறும்!
சிறப்பு தோழர். கட்சியிலுள்ள தோழர்கள் இதை விரிவாக விவாதித்துப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மார்க்சிய அறிஞர்கள், பேராசிரியர்கள் என்றழைக்கப்படும் சிலர் பெரியார் மற்றும் அம்பேத்கரது கொள்கைகளைத் தழுவிப்போனால்தான் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற முடியும் எனும் தவறான கருத்துக்களைத் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். அத்தகைய அடையாள அரசியற் போக்குகளை முறியடிக்க இக்கருத்துக்கள்பயன்படும். வாழ்த்துக்கள்
பெரியார் வெறும் சாதி ஒழிப்பை மட்டுமே முன்னிறுத்தி யவர். ஆம்பேத் காரும் அப்படியே கருதினார்.அப்படியானால் ஜாதிகள் ஒழிக்க பட்டதாக கருதப்படும் நாடுகளில் பொருளாதார சமத்துவம் இருக்கிறதா?? மதங்களை பற்றி இவர்கள் என்ன சொன்னார்கள்? அம்பேத்கார் பவுத்த மதத்தை தழுவினார்! அங்கெல்லாம் சமத்துவம் இருக்கிறதா?? இலங்கை நிலை??