படுகொலையா? தற்கொலைக்குத் தள்ளப்பட்ட கொலையா?
இளசை கணேசன்
முதலில் இந்த நோட்டீசை பாருங்கள்! படியுங்கள்!! பகிருங்கள்!!!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகில் கன்னியாமூரில் அமைந்துள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில்…
- கடந்த சில வருடங்களாக கொடுமைகள், ஒழுக்கக் கேடுகள் நடந்து வருகின்றன.
- ஏழை, எளிய பிள்ளைகள் எதிர்காலக் கனவு குழிதோண்டி புதைக்கப்படுகிறது.
- பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், அநியாயங்கள் தலைவிரித்து ஆடுவதை அளவிட முடியாது.
- நெஞ்சைப் பிளக்கும் வகையில் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கிறார்கள்.
- மாணவர்கள் நாள்தோறும் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகும் அளவுக்கு பள்ளியின் நிலைமை மோசமாகி வருகிறது.
- வியாபார நோக்கில் செயல்படும் இந்தப் பள்ளி மாணவர்கள் கல்விக் கட்டணத்தை தாமதமாக செலுத்தினால் தண்டிக்கப்படுகிறார்கள்.
- கடுமையான வெயிலில் முட்டி போட வைக்கப்படுகிறார்கள். கைதிகளை தண்டிப்பது போல் அறையில் பூட்டி வைக்கப்படுகிறார்கள்.
- மாணவர்கள் விடுதியில் தங்க வைக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
- பாதுகாப்பற்ற முறையில் மண் தரையில் உணவு கொடுத்து உட்கார வைக்கப்படுகிறார்கள்.
- அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை விட பல மடங்கு அதிகம் வசூலிக்கப்படுகிறது.
- படிப்புக்கு சம்பந்தமில்லாத பல்வேறு கட்டணங்கள் மிரட்டி வசூலிக்கப்படுகின்றன.
- பள்ளியின் கொடுமைகளை எதிர்த்துக் கேட்டால் மாணவர்கள் மிரட்டப்படுகிறார்கள். தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
- மாணவர்களின் டி.சி. கேட்டு வரும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அவமதிக்கப்படுவதும், அபராதம் விதிக்கப்படுவதும் நடக்கிறது.
- பள்ளியின் நிர்வாக சீர்கேடுகள், ஒழுக்கக் குறைவான நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவித்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
- அதிகாரிகளின் அலட்சியத்தால் விலை மதிக்கமுடியாத மாணவர்களின் உயிர்கள் பலியாவது அதிகரித்து வருகிறது.
- 2003 ஜனவரியில் அம்மகளத்து கிராம மாணவர்களை ஏற்றிச்சென்ற இப்பள்ளியின் வாகனம் மோதியதால் பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
- 2004 ஜூன் மாதம் இப்பள்ளியில் 7 ம் வகுப்பு மாணவன் ஆர்.ராஜா ஆசிரியை பயமுறுத்தல் காரணமாக மனமுடைந்து பூச்சி மருந்து குடித்தான்.
- லட்சக்கணக்கில் செலவு செய்யப் பட்டும் வாய் பேச முடியாமல் மனநிலை பாதிக்கப்பட்டான்.
- 2005 டிசம்பர் 8 ல் நெஞ்சை உருக்கும் வகையில் 4வயது எல்.கே.ஜி. மாணவி பிரதிக்ஷ£ மீது வாகனம் ஏற்றி கொல்லப்பட்டாள்.
- மாநிலத்தில் முதலிடத்தை இப்பள்ளி பெற வேண்டும் என்பதற்காக யாக பூஜைக்கு மாணவர்கள் நரபலி கொடுக்கப்படுகிறார்கள் என்று ஊர் மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நேற்று ராஜா
இன்று பிரதிக்ஷ£
நாளை யாரோ!
இப்படி கொலைவெறி சிந்தனையும், மூடநம்பிக்கையும், உயிர்களை காவு வாங்கும் விதமாக செயல்படும் இப்பள்ளியின் அங்கீகாரத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், 29. 12.2005 ல், சின்ன சேலம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் பிரச்சார நோட்டீஸ் தான் இது.
சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் கொடுமைகளை எதிர்த்து 2005 அன்றே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குரல் எழுப்பி போராடியது.
அரசாங்கம் அன்றே இதற்கு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அன்று முதல் இன்று வரை இது போன்ற பிரச்சனைகள் நடந்திருக்காது.
இதே பள்ளியில் கடந்த 13.7.2022 புதன்கிழமை பிளஸ் டூ படிக்கும் மாணவி ஸ்ரீமதி சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்துள்ளார்.
மரணமடைந்த மாணவியின் தாயார் நீதிகேட்டு கதறிய கதறல் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இது தற்கொலையா? அல்லது கொலையா?
பொதுவாக தற்கொலைகள் தானாக நடக்காது. தற்கொலைக்கு தள்ளப்படுவதால் நடக்கிறது.
எனவே இது கொலையா? அல்லது தற்கொலைக்குத் தள்ளப்பட்ட கொலையா? என்பதே சரியானது.
மாணவியின் மரணத்திற்காக, பெற்றோருக்கு ஆதரவாக உறவினர்கள், உள்ளூர்க்காரர்கள், வேப்பூர், பெரிய நாசலூர் மக்கள், ஊரை சுற்றியுள்ள அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்று குரல் எழுப்பப்பட்டன.
இதன்பின்பே மாணவியின் மரணம் ‘சந்தேக மரணம்‘ என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்தப் போராட்டம் இல்லையென்றால் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டு இருக்காது.
ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்கள் அமைதியான முறையில் நடந்த போராட்டம் அதற்குப் பிறகு வன்முறை வடிவம் எடுத்திருக்கிறது.
காவல்துறை டி.ஐ.ஜி., ஒரு எஸ்.பி. உள்ளிட்ட 52 காவலர்கள் காயமடைந்துள்ளனர்.
வாகனங்கள் எரிக்கப்பட்டன. பள்ளியின் பல பாகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. - சம்பவ இடத்திற்கு டி.ஜி.பி. விரைந்தார்.
- 70 பேர் கைது.
- மாணவி மரணம் மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்றம்.
- மீண்டும் பிரேத பரிசோதனை!
- மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் மாற்றம்.
- சிபிசிஐடி துப்புத் துலக்கியதில் சில தடயங்கள்.
என்றவாறு நடந்தேறியுள்ளது.
“வன்முறை திட்டமிட்டதா? எதார்த்தமானதா? இதன் பின்னணியில் யார்?”
என்று நீதிபதி கேள்வி எழுப்புகிறார். ஊடகங்களும் இந்தக் கேள்வியை எழுப்புகிறது.
பள்ளி நிர்வாகம்,
மாவட்ட ஆட்சி நிர்வாகம்,
மாவட்ட காவல்துறை.
இவைகள் நடந்துகொண்ட முறை தான் அமைதிப் போராட்டம் வன்முறையாக மாறக் காரணம்.
பள்ளி நிர்வாகம் வெளிப்படையாக நடந்து கொள்வதற்கு பதிலாக மாணவியின் தாயார் மீது குற்றம் சுமத்த துணிகிறது.
உயிரைப் பறிகொடுத்த தாய்க்கு ஒப்பாரி வைக்கக் கூட உரிமை இல்லையா?
மாவட்ட ஆட்சி நிர்வாகமும் மாவட்ட காவல்துறையும்…
வன்முறைக்கு பின்பு எடுத்த துரித செயல்பாடுகள் அதற்கு முன்பே…
செய்திருந்தால் வன்முறையை தவிர்த்திருக்க முடியும்.
மரணத்திற்கு மனமிரங்குதல், காலதாமதமின்றி, பொறுப்பை உணர்ந்து செயல்படுதல்,
வெளிப்படைத்தன்மை, கைது, குற்றப் பதிவு, விசாரணை, நிவாரணம்…
என்று துரிதகதியில் செயல்பட்டிருந்தால் வன்முறை நிகழ்ந்து இருக்குமா?
ஏன் இப்படி செயல்படவில்லை? இதன் பின்னணியில் யார்? என்பதே கேள்வி!
தனியார் கல்வி நிறுவனங்களில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஆளும் கட்சியினர் அல்லது ஆண்ட கட்சியினர்.
அரசியல்வாதிகள் அல்லாத தனியார் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள் ஆளும் அல்லது ஆண்ட கட்சிகளுக்கு ஆதரவு தருகிறார்கள்.
இதுதான் ஆணவப்போக்கு, அதிகாரத் திமிர் போன்றவற்றிற்கு காரணமாக அமைகிறது.
சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி 1998 ல் துவங்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய பிரமுகர்.
2001 &- 2006 மற்றும் 2011 & -2021 அதிமுக ஆட்சியிலும் 2014 முதல் இன்றுவரை ஒன்றிய பாஜக ஆட்சியிலும் இந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆழமாக காலூன்றியது.
இந்த பள்ளியில் அவ்வப்போது ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்கள் நடைபெற்றுள்ளன.
2003 முதல் இன்றுவரை இப் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் மர்மங்கள் நிறைந்தவையாக உள்ளன.
இத்தகைய சம்பவங்களும் பள்ளியின் ஆதிக்கத் திமிரும் அந்தப் பகுதி மக்களிடையே அவ்வப்போது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கோபாவேசங்கள் ஒன்று திரண்டு இப்போது மாணவி மரணத்தில் எதிர் வினையாற்றி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுஷில்ஹரி பள்ளி மாணவிகளுக்கு, சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்த போதும்…
சென்னை அசோக் நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதும்…
வாய்மூடி ஊமையாக இருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இப்போதும் வாய் மூடி ஊமையாக இருக்கிறார்.
மரணம் அடைந்த மாணவி ஸ்ரீமதி இந்துவாக இருந்தாலும் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் ஆர்.எஸ்.எஸ். முக்கிய புள்ளியாக இருப்பதே இதற்குக் காரணம்.
அண்ணாமலை அடிக்கடி தூவும் விஷமம் இன்று அவரை நோக்கித் திரும்புகிறது.
“தன் வினை தன்னைச் சுடும்”
மாணவியின் மரணம் மத ரீதியிலும், சாதி ரீதியிலும் விமர்சிக்கப்படுவது தேவை இல்லாத ஒன்று.
இது அவரவர் அடையாள அரசியலுக்கு பயன்படலாம். பிரச்சினையின் அடிப்படையை தீர்க்க உதவாது.
- மாணவி ஸ்ரீ மதியின் மரணத்தில் உண்மையை சிபிசிஐடி வெளிக் கொண்டுவர வேண்டும்.
- மரணம் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டும்.
- மரணம் நிகழ்ந்தது 13-ஆம் தேதி 5:30 மணியா? அல்லது 12 ஆம் தேதியே நடந்ததா?
பிரேதம் பொய் சொல்லாது! இரண்டாவது பிரேதப் பரிசோதனை உண்மையை உணர்த்துமா?
இதே பள்ளியில் இதற்கு முன் 7 பேர் இறந்துள்ளார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்த உண்மை வெளிவர வேண்டும்!
தொடர்புக்கு: 82204 68816