இந்தியா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி ராஜாவுடன் வியட்நாம் தூதுக் குழுவினர் சந்திப்பு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி ராஜாவை வியட்நாம் தூதுக் குழுவினர் இன்று(21.06.2022) கட்சியின் தலைமை அலுவலகமான அஜாய் பவனில் சந்தித்து உலக அரசியல், பொருளாதார பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினார்.

(விரிவான செய்திக்குறிப்பு பின்வருமாறு:)

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், ஹோ-சி-மின் நகர செயலாளருமான ஜுயென் வான் நென் தலைமையில் 21  உறுப்பினர்களைக் கொண்ட உயர்மட்ட தூதுக்குழு ஜூன் 21 அன்று புதுடில்லியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான அஜாய் பவனில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, கட்சியின் தேசியச் செயலாளர்களான பல்லப் சென்குப்தா மற்றும் டாக்டர் காங்கோ ஆகியோர் உடனிருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின்போது இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவது, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேலும் பலப்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

வியட்நாம் தூதுக்குழுவுடன் இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதர் ஃபாம்சவ் உடன் இருந்தார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்புகள் குறித்த விபரத்தை ஜுயென் வான் நென், டி.ராஜா உள்ளிட்ட கட்சியின் தலைவர்களுக்குச் சுருக்கமாக எடுத்துரைத்தார். இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான ராஜ்ஜிய உறவின் 50ஆவது ஆண்டை 2022 குறிப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளுக்கிடையேயான உறவு பரஸ்பரம் வலுப்பெற இரு நாடுகளும் அவற்றால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய சூழல் குறித்து விரிவாக எடுத்துரைத்த டி.ராஜா இருதரப்பு உறவுகளும், வியட்நாம் விடுதலைப் போராட்ட காலத்திலிருந்து தொடர்ந்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.  வியட்நாமின் வீரம்செறிந்த விடுதலைப் போராட்டத்தின் போது, இந்தியர்கள், குறிப்பாக, மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

இந்த ஆண்டு அக்டோர் மாதம் விஜயவாடா மாநகரில் நடைபெற இருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டிற்கு வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் குழு வருகை தரவேண்டும் என்று டி.ராஜா அழைப்பு விடுத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button