கொலம்பியாவின் முதல் இடதுசாரி அதிபராகிறார் குஸ்தவோ பெட்ரோ !
போகோடா நகரின் முன்னாள் மேயரும் இடதுசாரி தலைவருமான குஸ்தவோ பெட்ரோ கொலம்பியா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரோடோல்ஃபோ ஹெர்னாண்டஸை விட 7,16,890 வாக்குகள் அதிகம் பெற்று குஸ்தவோ சாதனை படைத்துள்ளார்.
“இன்று நாம் எழுதிக் கொண்டிருக்கும் அத்தியாயம், கொலம்பியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் உலகத்திற்கான ஒரு புதிய அத்தியாயம்.” என்று வெற்றி பெற்றுள்ள குஸ்தவோ பெட்ரோ கருத்து தெரிவித்துள்ளார்.
கொலம்பியா நாட்டின் வரலாற்றில் முதன்முதலாக இடதுசாரி, ஜனாதிபதியாக குஸ்தவோ பெட்ரோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரில்லா இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான, பொருளாதார நிபுணர் குஸ்தவோ பெட்ரோ, ஆழ்ந்த சமூக மற்றும் பொருளாதார மாற்றத்திற்கு உறுதியளித்துள்ளார்.
இலவச பல்கலைக்கழகக் கல்வி, ஓய்வூதிய சீர்திருத்தங்கள் போன்றவற்றை அமல்படுத்தப் போவதாக பெட்ரோ கூறி உள்ளார். மேலும், உற்பத்தி செய்யாத நிலத்தின் மீது அதிக வரிகள், சமத்துவமின்மை ஆகியவற்றை எதிர்த்துப் போராடவும் உறுதியளித்துள்ளார்.
பெட்ரோவின் முன்மொழிவுகள் — குறிப்பாக புதிய எண்ணெய்த் திட்டங்களுக்கான தடை — சில முதலீட்டாளர்களைத் திடுக்கிட வைத்துள்ளது. இருப்பினும், தற்போதைய ஒப்பந்தங்களை மதிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
அவர் ஒரு நல்ல ஜனாதிபதியாக இருப்பார் என்றும், வசதி குறைந்தவர்களுக்கு அவர் உதவுவார் என்றும் நாடு நன்றாக மாறப்போகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இது பெட்ரோவின் மூன்றாவது ஜனாதிபதி முயற்சியாகும். மேலும், அவரது இந்த வெற்றியானது சமீபத்திய ஆண்டுகளில் முற்போக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் பட்டியலில் சேர்கிறது.
62 வயதான பெட்ரோ, கொரில்லாக்களுடன் ஈடுபாடு கொண்டதற்காகத் தான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது, இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறி உள்ளார்.
பெட்ரோவுடன், ஃபிரான்சியா மார்கஸ், ( முன்னாள் வீட்டுப் பணிப்பெண்) நாட்டின் முதல் ஆப்ரோ-கொலம்பிய பெண் துணை அதிபராக இருப்பார்.
பெட்ரோ கிளர்ச்சியாளர்களுடனான 2016 அமைதி ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்தவும், இயங்கிக் கொண்டிருக்கும் கொரில்லாக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தப் போவதாகவும் கூறி உள்ளார்.
வாழ்த்துக்கள் பெட்ரோ! உங்கள் கனவு மட்டுமல்ல, மக்கள் கனவும் மெய்ப்படும்!!