பாசிச பா.ஜ.க அரசாங்கமே… எங்கே இரண்டு கோடி வேலை?
த.லெனின்
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்ற முழக்கத்தோடுதான் கடந்த 2014ல் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த கடந்த எட்டு ஆண்டுகளில் இருந்த வேலை வாய்ப்பையும் அழித்ததுதான் அவரது இமாலய சாதனையாக உள்ளது!
ஆனாலும், 2024 பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் சில பொய்யான புள்ளி விபர சரடுகளை அவிழ்த்துவிட்டு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தினந்தோறும் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். அடுத்த 18 மாதத்திற்குள் 10 லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளனர். ஆனால், இந்த அறிவிப்பிற்குப் பின்னால் பல சூழ்ச்சிகளும் தனியார்மயமாக்கலும் கடை விரிப்பதே காட்சியாக மாறிவிட்டது.
இராணுவம், கடற்படை, விமானப்படையில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணியாற்றும் வகையில் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டப்படி 17.5 வயது முதல் 21 வயதுடைய இருபால் இளம் தலைமுறையும் முப்படைகளில் சேரலாம் என்று அறிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் நிரந்தர சேவை, மற்றும் குறுகியகால சேவை ஆகிய பிரிவுகளின் கீழ் ஆள் தேர்வு நடைபெறுகிறது. குறுகிய கால சேவையில் சேர்பவர்கள் 10 முதல் 14 ஆண்டுகள் வரை பணியில் நீடிக்கலாம். ஆனால் அக்னி பாதை என்ற இந்தப் புதிய திட்டத்தின் கீழ் படையில் சேரும் இளைஞர்கள் ஏற்கனவே உள்ள கல்வித் தகுதியின் அடிப்படையில்தான் சேர்க்கப்படுகிறார்கள் என்றாலும் இதில் 46 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்களாம். அதில் ஆறு மாதங்கள் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்படுமாம்.
முதலாமாண்டு 30 ஆயிரம் ரூபாய். இரண்டாமாண்டு 33 ஆயிரம் ரூபாய், மூன்றாமாண்டு 36,500 ரூபாய், நான்காம் ஆண்டு 40 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுமாம். இவ்வூதியத்தில் 30 சதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப்பட்டு மீதம் உள்ளி 70 சதம் மட்டுமே வழங்கப்படுமாம். இதன் மூலம் பணி விலகலுக்குப் பிறகு 11.71 லட்சம் வருமான வரி விலக்கோடு நிதி வழங்கப்படுமாம். ஆனால் ஓய்வூதியம் கிடையாது. ஆக “அக்னி” பாதை இந்திய இளைஞர்களை உயிரோடு எரிக்கும் பாதை என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இந்தியாவின் முதல் தனியார் ரயில் “பாரத் கவுரவ்” கோவையிலிருந்து சீரடி வரையிலான தனது புனித யாத்திரையைத் தொடங்கிவிட்டது. அவர்களது ஆன்மிகம் எப்படிப்பட்டது என்பதை இந்த ரயிலின் மூலம் அறியலாம். உலகத்திலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகிய இந்திய ரயில்வே மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால், அதற்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் இன்றும் 4.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அந்த காலிப் பணியிடங்களை நிரப்பினால் சமூக நீதி அடிப்படையில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், தனியார்மயமாக்கல் மூலம் சமூக நீதியையையும் இளைஞர்களுக்கான வேலை உரிமையையும் ஒரே கல்லில் அடித்து வீழ்த்தியிருக்கிறது அடாவடி மோடி அரசு! பாரத் கவுரவ் உண்மையில் பாரத் அவ கவுரவ்வாக மாறிவிட்டது!
இந்திய ரயில்வே துறையின் உள்கட்டமைப்பில் இந்தத் தனியார் ரயில்கள் இயங்கினாலும், அதன் கட்டணம் என்னவோ மிக அதிகமாகும். முதல் வகுப்பு ஏ.சி. பயணத்திற்கு ரூ.10,500 முதல் ரூ.13,650 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு ஏ.சி.க்கு ரூ.7,350 முதல் ரூ.10,500 வரையும், மூன்றாம் வகுப்பு ஏ.சி.க்கு ரூ.3990, ரூ.5,250, ரூ.8,400 என்றும், ஏ.சி. அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.1,510, ரூ.2,625, நெரிசல் காலங்களில் ரூ.5,250 என்று கட்டணம் நிர்ணயம் செய்ததன் மூலம் இந்த “ஆன்மிக அரசு” ஆன்மிக பயணம் மேற்கொள்வோருக்கு எவ்வளவு எதிராக இருக்கிறது என்பதை நாம் காணலாம்.
ரயில்வே துறைக்கு ஆள் எடுப்பதற்கான தேர்வுகள் நடக்கும் போதெல்லாம் வினாத்தாள் வெளியாகி தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது தொடர் நிகழ்வாகும். அதுபோலவே, உத்தரபிரதேச அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தேர்வும் வினாத்தாள்கள் வெளியாகி நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தியதை நாம் அறிவோம். அத்துடன் உ.பி. முதல்வர் யோகியின் காவல்துறை பிரக்கியாராஜில் அவர்களை நைய்ய புடைத்ததையும் நாடு அறியும்.
பாட்னாவில் நடைபெற்ற ரயில்வே பணியிடங்களுக்கான தேர்வும் வினாத்தாள் வெளியானதால் ரத்து செய்யப்பட்டது. அதுபோலவே ஆயுதப் படைகளுக்கான காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த உலகப் பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. அதுபோலவே ஒன்றிய துணை ராணுவப்படை, ஜி.எஸ்.டி. துறையும் அதில் உள்ளடங்கிய கஸ்டம்ஸ் -மற்றும் கலால் வரித்துறைக்கான காலிப் பணியிடங்களும் பூர்த்தி செய்யப்படவில்லை.
அதுபோலவே வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பணிகளுக்கான களப் பணியாளர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தேர்வு செய்யப்படவில்லை. பா.ஜ.க.வின் நாடாளுமன்ற உறுப்பினரான வருண்காந்தி ஒன்றிய அரசின் கீழ் உள்ள 60 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது வேலை இல்லாத் திண்டாட்டத்தை அதிகரிக்கும் செயல் என பேசியிருப்பது இந்த உண்மையை உலகுக்கு பறைசாற்றி விட்டது. அதனால்தான் என்னவோ இன்று புதிய புள்ளி விபரங்களை எல்லாம் அள்ளி வீசி வருகிறார்கள்.
அதன்படி, தொழிலாளர்களின் வேலைப் பங்கேற்பு கடந்த ஆண்டுகளில் 40.1 சதமாக இருந்தது. ஆனால், 2020-2021ஆம் ஆண்டில் 41.6 சதமாக அதிகரித்துள்ளது என்றும், தொழிலாளர் உழைப்பு பங்கெடுப்பு விதிதம் கடந்த ஆண்டுகளில் 4.2 சதமாக இருந்தது என்றும், 2020-21ல் அது 4.8 சதமாக அதிகரித்துள்ளதால் இதன் மூலம் வேலையின்மை குறைந்தது போன்று காட்டப்படுகிறது.
ஆனால் உண்மை என்னவென்றால் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலமும், கிராமப்புற விவசாய வேலைகளின் மூலமும் ஓரளவு உடல் உழைப்பு வேலை மட்டுமே பெருகியது. இந்தியாவில் முறைசாரா தொழில்களில் 40 கோடி பேர் வேலை செய்கிறார்கள். இதில் 90 சதம் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. & பி.எப். போன்ற எந்த சமூகப் பாதுகாப்பும் இல்லை. அதிலும், இந்த வகையில் சம்பளம் பெறும் மொத்த பணியாளர்களில் 45% வெறும் ரூ.9750 மாத ஊதியமாகவும் நாள் ஒன்றுக்கு ரூ.375 மட்டுமே பெறக்கூடியவர்கள் என்பது அதிர்ச்சியானது.
மறுபுறத்திலேயே பெரும் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் ஆண்டுக்கு 42 கோடி ரூபாய், 36 கோடி ரூபாய் ஊதியம் வாங்கும் காலத்தில் அனைத்து விலைச்சுமைகளையும் தன் தலைமேல் சுமக்கும் இந்த அடித்தட்டு உழைப்பாளி மக்களுக்கு என்ன மிஞ்சும்? அதுவும், வாங்கும் ஊதியத்தில் 30% பெட்ரோல், டீசல் மற்றும் போக்குவரத்து செலவுகளாக ஆகிவிடுகின்றன. இதன் விளைவாக மக்களின் வாங்கும் சக்தி படுபாதாளத்திற்கு சென்று விட்டது. மொத்த விற்பனை விலை குறியீடு உலகத்திலேயே மிக அதிகமாக 15.9% த்தை கொண்டிருக்கும் நாடாக இந்தியா மாறிவிட்டது. வேலையின்மையால் உருவாக்கப்பட்ட வறுமை இந்தியாவை உலக அரங்கில் சிறுமைப்படுத்துகிறது.
வேலை தேடி அயலகம் சென்று, வலைகுடா நாடுகளில் பணி வாய்ப்பில் இருக்கிற இந்தியர்களுக்கும் வேட்டு வைக்கும் விதத்தில் பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் நுபுர்சர்மாவும், நவீன்குமார் ஜிண்டாலும் இஸ்லாம் குறித்தும் நபிகள் குறித்தும் பழித்துப் பேசிய காரணத்தால் பலர் வேலை நீக்கம் செய்யப்படுவதும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவதும் தொடர்கிறது.
ஆக, வறுமையும் வேலையின்மையும்தான் ஒரு வளரும் நாட்டின் பிரச்சினை என்றால் மோடியின் இந்தியாவிலோ வகுப்புவாதமும், மதவெறியும் தன் பங்குக்கான வேலையை தாராளமாகச் செய்து வருகிறது.
உலகில் உள்ள பல வளரும் நாடுகளை விட இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகம். அதாவது, 8 % உள்ளது. ஆனால், இது வங்கதேசத்தில் 5.3%, மெக்சிகோவில் 4.7%, வியட்நாமில் 2.3% என்று பொருளாதார வல்லுனர் கவுசிக் பாசு குறிப்பிடுகிறார்.
எதிர்கொள்ள வேண்டிய வேலையின்மைக்கு பதில் சொல்ல முடியாத, திராணியற்ற மோடி அரசு மதக் கலவரங்களை ஏற்படுத்தி தனது வெறுப்பு அரசியலுக்கான வாய்ப்பை உறுதிப்படுத்த முனைகிறது. எதற்கெடுத்தாலும் ஊழல், ஊழல் என்று ஒற்றை வரியில் குரல் எழுப்பும் பா.ஜ.க. இன்று தனது ஆட்சியில் தொடர்ந்து நடைபெற வேண்டிய ரயில்வே தேர்வுகளின் வினாத்தாள்கள் வெளியாகி தேர்வுகள் நிறுத்தப்படுவது எதைக் காட்டுகிறது?
பிரதமரின் கிசான் இணையத்தில் சேர்ந்துள்ள 11 கோடி விவசாயிகளின் ஆதார் தகவல்கள் அந்நிய நிறுவனங்களால் திருடப்பட்டுள்ளது எதைக் காட்டுகிறது?
வேலை வாய்ப்பு என்பது ஒருவர் தனது ஆற்றலை நாட்டிற்காக உழைக்கத் தயாராக இருந்தும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாத நாட்டைப் பற்றியது. வேலை கொடுப்பதுதான் உண்மையான தேசபக்தி! ஏற்கனவே வேலையில் இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்புவது பெரும் நிறுவன ஆதரவுக்காக ஏற்பட்ட முக்தி!
வேலையின்மையை வேரறுக்க புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பொறுப்புடன் செயல்படும் புதிய அரசியல் சிந்தனை இன்றைய தேவையாக இருக்கிறது. இடதுசாரி, மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளைத் திரட்டி இளைஞர்களுக்கு எதிரான பாசிச பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ்.கும்பலை வீட்டிற்கு அனுப்புவோம்.
பகத்சிங் வாரிசுகளே செயல்முடிக்க களம்காண தயாராவீர்!
தொடர்புக்கு: 94444 81703