கட்டுரைகள்

போராட்டங்கள் எழும்!  பொல்லாத அரசுகள் விழும்!

த.லெனின்

உணவுக்கு மட்டும் வாழ்பவன் அல்ல மனிதன் என்றார்  ஏசு கிறிஸ்து. ஆம்! மனிதனின் நாகரிக, கண்ணிய வாழ்விற்கு வேலை வாய்ப்பும் வருமானமும் அவசியம் தானே! இந்திய சுதந்திரத்திற்கு முன்பே நமது வறுமைக்கு காரணமான காலனியாதிக்க கொடுங்கோன்மைக்கு எதிராகத்தான் கொள்கை முடிவுகளை சுதந்திரத்திற்காக போராடியவர்கள் முன்வைத்தார்கள்.

பண்டித ஜவஹர்லால் நேரு இந்தியாவிற்கான தொழிற்கொள்கையை வகுக்கும்போது இந்த வழியில்தான் சிந்தித்தார். தொழில்மயமாக்கலுக்கு அடிப்படையான இரும்பையும், மின்சக்தியையும் உருவாக்க வேண்டும். இவைதான் தொழிற்மயத்திற்கு அடிப்படை. இதன் மூலம்தான் நிவாகத்துக்கான உத்திகளும், திட்டங்களும் இந்தியாவில் அமைய வேண்டும் என்றார்.

இப்படி அமையும் தொழில்மயமாக்கலுக்கு அடிப்படையாக அமையும்  கனரக தொழிற்கூடங்களுக்கே முதலிடம் என்று வரையறுத்தார் நேரு. அதன் மூலம் உருவாக்கப்பட்டதுதான் பிரம்மாண்டமான பெல் உள்ளிட்ட கனரக தொழில் கூடங்களாகும்.

ஏறத்தாழ சீனாவும் இதேபோன்ற நிலையைதான் பொருளாதாரத்தில் புரட்சிக்கு பிறகான தனது நிலைப்பாடாக அறிவித்தது. தற்சார்பு கொள்கைதான் வளர்ச்சியின் உந்து சக்தி என்றது. (self reliance is the motor of growth)

இந்தியாவில் காலனியாதிக்க சுரண்டல் பெரும்பாலும் வணிகத்தின் மூலம்தான் நடந்தது. ஆனால் அதற்கு பின்பு பிரிட்டிஷார்கள் இந்திய தொழில்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். அதன் பிறகே இந்தியாவின் பொருளாதாரம் அவர்களால் ஒட்டுமொத்தமாக உறிஞ்சப்பட்டது. குறிப்பாக  அதன் மூலம் வரும் அதீத லாபம் மற்றும் டிவிடன்ட் மூலம் நமது பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளானதுடன் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கான ஊதியத்தொகைகள், உள்நாட்டு படிகள், ஊதியம், ஓய்வூதியம், முதலீட்டு தொகைக்கான வட்டி என்ற வகைகளில் அவர்களுக்கு அதீத லாபம் கிடைக்க வழி செய்யப்பட்டது.

இந்த காலனியாதிக்கத்தின் மேம்படுத்தப்பட்ட வழிமுறைதான் உலகமய முறையில் உருவான முதலீடுகள். அந்நிய நேரடி முதலீடுகள், தனியார் பொதுமக்கள் பங்கேற்பு திட்டங்கள் (பி.பி.பி.) உள்ளிட்டவையாகும். இந்த பி.பி.பி. திட்டங்கள் பொதுத்துறையை தனியார் மயப்படுத்துவதும், அதை வாங்கும் தனியார் துறைக்கு பொதுத்துறை நிதிவளங்களை தாரை வார்ப்பதும் நடக்கிறது.

இந்தியாவின் உள்கட்டுமான குத்தகை மற்றும் நிதிசேவைகள் நிறுவனம் (ஐ.எல்.&எப்.எஸ்.) இதன் மூலம் பி.பி.பி. திட்டங்களுக்கு அரசின் நிறுவனங்களாக எல்.ஐ.சி., பொதுத்துறை வங்கிகள் மூலம் நிதி உதவி செய்யப்படுகின்றன.
இதன் மூலம் தனியார் துறைக்கு அள்ளி அள்ளி ஊட்டுவதும், பொதுத்துறையை வலுக்கட்டாயமான இழப்பிற்கு உள்ளாக்குவதும் தொடர்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பொதுத்துறை மீது தொடர்ந்து தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுகிறார். பொதுத்துறை என்றாலே அவை ஏளனத்திற்கு உரிய ஒன்றாகவும் போட்டியிடும் தன்மை இல்லாத ஒன்றாகவும், மொத்தத்தில் திறனற்ற ஒன்றாக எடுத்துக் காட்டுவதில் பா.ஜ.க. அரசு திறமையாக அவர்கள் நடத்தும் பொருளாதார சீர்திருத்தம் என்கிற பெயரிலான சீர்குலைவு நடவடிக்கையின் மூலம் தெரிவித்து வருகின்றனர். அப்படியென்றால் ஒன்றிய அரசே பல துறைகளில் தோல்வி அடைந்ததை ஒப்புக் கொண்டு அதையும் கலைத்து விட முடியுமா?

இந்திய அரசின் தோல்வியடைந்த துறைகளாக நமது ஆரம்பக் கல்வித்துறை, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு, நில சீர்திருத்தம், சமூக நீதி ஆகியவற்றில் தொடர் தோல்விகளும் சிக்கல்களும் இன்றுவரை நிலவுகிறது. இவற்றின் காரணமாகத்தான் பொருளாதார வளர்ச்சிக் குன்றி சமூக சமத்துவமின்மை அதிகரிக்கிறது. இதற்கு யார் பொறுப்பேற்பது?

சீனாவில் பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் லாபத்தோடு இயங்குகின்றன. உள்ளாட்சி அரசால் நடத்தப்படும் ஹெஃபாய் நிறுவனம் 787 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது 17% நியோவில் வியாபார முதலீடுகள் மூலம் லாபம் பெற்றுள்ளனர். சீன அரசுக்கு சொந்தமான கம்பெனிகள் 97.5 லட்சம் கோடி ரூபாயை வெளிநாட்டு கம்பெனிகளில் முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தில் இது 27% என்றால் இதன் பிரம்மாண்டத்தை பார்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம்தான் சீனா உலகளாவிய செல்வாக்கைச் செலுத்துகிறது. இந்தியாவும் இதுபோல் செய்திருந்தால் நாமும் உலகளாவிய செல்வாக்கை செலுத்தியிருக்க முடியும். அதைவிட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் சீனாவை குறை கூறுவது மட்டும்தான் இன்றும் தொடர்கிறது.

சீனா சோசலிச நாடு, அங்கு அது சரி என்று பேசுவோருக்கு, நமக்கு அருகாமையில் உள்ள முதலாளித்துவ நாடான சிங்கப்பூரை எடுத்துக் கொள்ளலாம். சிங்கப்பூர் அரசின் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் உலகம் முழுவதற்கும் பலவற்றில் முதலீடு செய்ததன் மூலம் அதன் பங்கு மதிப்பு 1.09 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  
உலகாளாவிய நிறுவனங்களில் சிங்கப்பூரின் முதலீடுகள் ரூ.55 லட்சம் கோடியாகும். இதன் மூலம் குட்டி நாடான சிங்கப்பூர் உலகின் 8வது மிகப்பெரிய நிதிமுதலீடு செய்யும் நாடாக மாறியுள்ளது. இந்தப் பணம் கடந்த 20 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. இந்தப் பணத்திலிருந்து வரும் பங்குத் தொகைகளை வைத்துதான் அரசின் பொதுநலத்திட்டங்கள், மக்கள் நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்படுகின்றன. சிங்கப்பூர் அரசின் மற்றொரு நிறுவனமான டெமசெக் ஹோல்டிங் நிறுவனம் 22 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.

இந்தியாவின் 2022-23 பொதுநிதி பட்ஜெட்டே ரூ.39.45 லட்சம் கோடி என்றால், சிங்கப்பூர் அரசின் முதலீடுகள் எவ்வளவு பலமானவை என்பதை அறிய முடியும்.
கடந்த 2013ஆம் ஆண்டில் அன்றிருந்த ஒன்றிய அரசு லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயப்படுத்தமாட்டோம் என்று கொள்கை முடிவை எடுத்திருந்தது. ஆனால், அந்த முடிவகளையெல்லாம் தூக்கி காற்றில் எறிந்துவிட்டு லாபத்தில் இயங்கும் பெரும் இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ.சி.யின் பங்குகள் விற்கப்படுகின்றன. பாரத் பெட்ரோலிய பங்குகள் ஏற்கனவே விற்கப்பட்டன. ஓ.என்.ஜி.சி.யும் விற்கப்படுகின்றன. இதுபோல, பல பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டும் விற்பனைக்கு தயாராக்கப்பட்டும் வருகிறது. சிங்கப்பூரிலும், சீனாவிலும் பொதுத்துறை முதலீடுகள் மூலம் உலகளாவிய லாபத்தைப் பெற்று அதைத் தத்தமது நாடுகளில் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் நிலையில் இந்தியா தனது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம், அதாவது அடிமாட்டு விலைக்கு விற்பதன் மூலம் ரூ.13 லட்சம் கோடி திரட்டப் போவதாக அறிவித்துள்ளது. இப்படித் திரட்டப்படும் பணத்தின் மூலம் உள்கட்டமைப்பை மேம்படுத்துவோம் என்றும் அதற்கு நேர் எதிராக பேசி வருகின்றனர். அந்த உள்கட்டமைப்பு வசதிகள்தான் அதானிக்கும், அம்பானிக்கும் தங்கத் தட்டில் வைத்து தாரை வார்க்கப்படுகின்றது.

உதாரணத்திற்கு, சீனாவில் சீன தேசிய பெட்ரோலிய கார்ப்பரேஷன் என்ற ஒரு பொதுத்துறை நிறுவனம் உள்ளது. அதன் சொத்துக்கள் மட்டும் ரூ.45 லட்சம் கோடியாகும். ஆனால், சீன அரசு இதை தனியார் மயமாக்க முயற்சிக்கவில்லை. மாறாக அதை பாதுகாக்கும் நடவடிக்கையை எடுக்கிறது. ஆனால், இங்கோ ரூ.38 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள எல்.ஐ.சி. விற்பனைக்கு தயாராகி வருகிறது.
பா.ஜ.க.வினர் “அரசு வியாபாரம் செய்யக் கூடாது” என்று சொல்வார்கள். எனவே, வியாபாரிகளிடமே விற்றுவிடாலம் என்று மொத்தத்தையும் அள்ளிக் கொடுக்கிறார்கள் போலும். பற்றாக்குறையை நிவர்த்தி செய்தத்தான் பங்கு விலக்கல் முறை என்கிறார்கள். ஆனால், இந்திய இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதற்கு கார்ப்பரேட் முதலீட்டாளர்கள் வாயில் எச்சில் ஒழுகக் காத்திருக்கிறார்கள் என்பது வேறுகதை!

இந்திய அரசு இப்போது பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் டிவிடென்டாக பெறும் தொகை ரூ.50 ஆயிரம் கோடி. சிங்கப்பூர் மற்றும் சீன அரசுகளிடம் பாடம் கற்றுக் கொண்டால் உலகின் பெரிய நிதிசக்தி கொண்ட நிறுவனங்களாக இந்திய நிறுவனங்கள் மாறும். அதுவும் உலக அளவில் பெரும் நிதி சக்தியைக் கொண்டிருக்கிற பொதுத்துறை நிறுவனங்களான அமெரிக்க, இஸ்ரேலிய, ஐரோப்பிய யூனியன் நாடுகளில் உள்ளத்தைப் போல இந்தியாவில் பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனங்களைக் கட்ட தயாராக இல்லை.

பொதுத்துறை நிறுவனங்கள் பொதுவாக அரசு முதலாளித்துவம்தான். ஆனால், முதலாளித்துவத்தைவிட இது முற்போக்கானது, சமூக நோக்கு கொண்டது என்பதால்தான் இதனை நாம் ஆதரிக்கிறோம். இந்தியாவில் லாபம் குன்றிய பொதுத்துறை நிறுவங்களை அடிமாட்டு விலையில் விற்பதும் லாபம் தரும் நிறுவனங்களை சீர்திருத்தம் என்கிற பெயரில் சீர்குலைப்பதும் தொடர்கிறது. மிக உன்னதமான பொதுத்துறை நிறுவனங்களும் மிகச்சிறந்த அனுபவ அறிவைக் கொண்ட நிர்வாகத் துறையும் நம்மிடம் இருக்கிறது. ஆனால் அவற்றையெல்லாம் அயலாருக்கு மட்டுமே தாரை வார்ப்பது என்றால் என்ன செய்வது?

சிங்கப்பூரைப் போல முதலில் தேசம் மற்றும் பொதுமக்கள் நலன் என்று அரசு கருதுமேயானால்  மிகச்சிறந்த கொள்கை முடிவுகளை எடுக்க முடியும்? செல்வத்தின் ஆதார வளர்ச்சி நிலத்திலிருந்து இயற்கை வளங்களாக மாற்றியது. பின்பு தொழிற்கூடங்கள் மூலம் உருவானது. அது தற்போது அறிவுசார் பொருளாதாரமாக வடிவம் பெற்று வருகிறது. எனவே, சொத்துக்கள் தற்போது பெரும்பாலும் நிதிச்சந்தையில்தான் உள்ளன.

அதிகமான செல்வத்தை உருவாக்க உலகம் அறிந்த முதலீட்டாளர்களும் சில அரசுகளும் உலகம் முழுவதும் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒருவேளை இந்திய அரசு பங்கு விலக்கலுக்கு பதிலாக  சிங்கப்பூரை போல முதலீடுகளில் இறங்குமேயானால் பெரும் முன்னேற்றத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் காணும். வளர்ச்சி திட்டங்களுக்கு வாய்ப்புகள் ஏற்படும். சந்தைகள் செல்வத்தை உருவாக்க முடியம் என்றால் பொதுமக்கள் நலனுக்காக  அரசு ஏன் அந்தச் செல்வத்தை உருவாக்கக் கூடாது? இந்தியா ஒன்றும் இதில் முன்னுதாரணம் படைக்காத நாடு அல்ல. 1980களில் தொலைத்தொடர்புத்துறை மிகப் பெரிய லாபத்தை ஈட்டியது. தனியார்மயமாக்கலால் அது எவ்வாறு வஞ்சிக்கப்பட்டு அழித்தொழிக்கப்பட்டது என்பதை நாடு அறியும். இன்று நஷ்டத்தில் இயங்குகிறது என்று 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை கொடுத்தவனே எடுத்துக்கொண்டாண்டி என்பதற்கிணங்க டாடாவிடமே திரும்ப ஒப்படைத்து விட்டோம். குட்டி நாடுகள் கூட தங்களுக்கென்று தனி விமான சேவை வைத்திருக்கும் போது, நமது நாடோ இருந்ததையும் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு பிரதமர் என்ற ஒற்றை நபர் பயணம் செல்வதற்கு ரூ.8000 கோடிக்கு தனி விமானத்தை வாங்கியிருக்கிறோம். இவர்தான் குடும்ப ஆட்சியை எதிர்த்து போரிடுபவராம்! பேசுவது இந்துத்துவா! பூசுவது தேசப்பற்று அரிதாரம்! ஆனால் செயல்பாடோ முழுக்க, முழுக்க அந்நிய முதலீட்டாளருக்கும், தனது நெருங்கி கார்ப்பரேட் நண்பர்களுக்கும்தான்!

இலங்கையில் இன்று காணும் அவலநிலை நாளை இந்தியாவிலும் எழும்! ஆட்சியாளர்களே! மக்களை காலம் காலமாக பிரித்து ஆளலாம் என்ற கனவில் மட்டும் நீங்கள் வாழ்ந்துவிட முடியாது! போராட்டங்கள் எழும்!  பொல்லாத அரசுகள் விழும்! இதுவே உலகம் எப்போதும் காணும் வரலாறு!

தொடர்புக்கு:  94444 81703

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button