சென்னை பெருநகர், கோவிந்தசாமி நகர் மக்கள் வசிப்பிட உரிமையைப் பாதுகாக்க வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை:
முதலமைச்சர் தலையிட்டு கோவிந்தசாமி நகர் மக்கள் வசிப்பிட உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.
சென்னை பெருநகர், மைலாப்பூர் பகுதி 173வது வட்டத்தில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள கோவிந்தசாமி நகரில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஏழை மக்கள் குடியிருந்து வரும் குடிசைகளையும், வீடுகளையும் வருவாய்த்துறை அதிகாரிகள் காவல் துறையின் பாதுகாப்போடு புல்டோசர் கொண்டு இடித்து தகர்த்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
இந்த கோவிந்தசாமி நகரில் உடல் உழைப்பு மட்டுமே வாழ்வாதாரம் என்ற நிலையில் உள்ள தினக்கூலி தொழிலாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. கோவிந்தசாமி நகர் கடந்த 1970 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தான் மாநகரின் குடிசைப்பகுதி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சுமார் 700 குடும்பங்கள் வசித்து வரும் இந்த நிலப்பரப்பை அபகரிக்கும் நோக்கத்துடன் நில வியாபாரி ஒருவர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக குடிசைகள், வீடுகளை காலி செய்வதில் வருவாய்த்துறை அதிகாரிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பக்கிங்காம் கால்வாய் நீர் வழிப்பாதைக்கோ, அதன் கரைகளுக்கோ சேதாரம் ஏற்படும் வகையில் எந்தக் கட்டுமானமும் கோவிந்தசாமி நகரில் கட்டப்படவில்லை என்று மக்கள் கூறுகின்றனர் . ஏற்கனவே, அங்கு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விட்டன என்றும் தெரிவிக்கின்றனர்
இப்போது “புல்டோசர்” கொண்டு வீடுகளை இடிப்பதால், வசிப்பிடத்தை இழந்த கல்லுடைக்கும் தொழிலாளி கண்ணையா இன்று (08.05.2022) தீக்குளித்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். .
நாட்டின் குடிமகன், வசிப்பிடம் கேட்டு உயிரிழப்பது சமூகத்திற்கே அவமானமாகும். அதுவும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதும் சூழலில் இந்த நடவடிக்கை எண்ணிப் பார்க்கவே நெஞ்சு பதறுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆறாம் முறையாக தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தி, அதனை வழிநடத்தும் “தளபதி” திரு மு.க.ஸ்டாலின் ஆட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கொண்டாடி மகிழ்ந்து வரும் வேளையில் கோவிந்தசாமி நகரில், அதிகார வர்க்கத்தின் வருவாய்த்துறை, புல்டோசர் கொண்டு ஏழை மக்கள் வீடுகளைத் தகர்த்து வரும் இரக்கமற்ற செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்தப் பிரச்சனையில் மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, நீதிமன்ற உத்தரவின் மீது மேல்முறையீடு செய்வது உட்பட சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு, கோவிந்தசாமி நகர் மக்களின் வசிப்பிட உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.