தஞ்சாவூர் தேர்த்திருவிழா விபத்தில் இறந்தவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடந்த தேர்திருவிழாவில், உயர் அழுத்த மின்பாதையில், அலங்கரிக்கப்பட்ட தேரின் உச்சிப் பகுதி உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சியால் நெஞ்சு பதறுகிறது.
மேலும் பதினாறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வேதனையளிக்கிறது. ஊர் மக்கள் ஒன்று கூடி தேர் இழுக்கும் ஒற்றுமை பண்பாட்டு விழா சோகமயமாகி விட்டது.
உயிரிழந்துள்ள குடும்பங்களுக்கு அரசு நிவாரண நிதி அறிவித்திருப்பதும், அமைச்சர் நேரில் விரைந்து மருத்துவ உதவி உட்பட நிவாரணப் பணிகளை மேற்கொள்வதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.