வர்க்கப் போராட்டம் காலாவதியாகி விட்டதா?
க. சந்தானம்
“அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக உழைப்பாளி காணாமல் போய்விட்டான். பழைய உழைப்பாளி யாருமில்லை. பழைய உழைப்பாளியை நம்பிய மூலதனமும் இன்று இல்லை. எனவே, சரக்கு உற்பத்தியின் பொருளாதார கோட்பாடான ‘மதிப்பு விதி’ காலாவதி ஆகிவிட்டது. இத்தகைய ‘பின் முதலாளித்துவ’ சமூகத்தில் வர்க்கப் போராட்டத்திற்கு இடமில்லை. ஏனெனில் வர்க்கங்களும் இங்கில்லை.” என மார்க்சியர்கள் என்று கூறிக்கொள்வோர் வாதம் செய்கின்றனர்.
அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆதரவு அறிஞர்கள் ஏற்கனவே பேசிய, வரலாற்றால் கைவிடப்பட்ட, பழைய சரக்கை தமிழ்நாட்டில் சிலர் புதிய மொந்தையில் விற்க முயல்கின்றனர். வர்க்கப் போராட்டப் பாதையில் பயணிக்கும் அமைப்புகளைப் பாதை மாற்ற முயலும் முயற்சியே இது. இதை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர் நடவடிக்கையாக உள்ள காலத்தில் வாழ்கின்றோம். நேற்றைய தொழில்நுட்பம் காலாவதியாகிறது. இன்று “செயற்கை நுண்ணறிவு” “ரோபாட்டிக்ஸ்” போன்ற புதிய தொழில்நுட்பங்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. நாளை இவைகளும் காலாவதியாகி, இன்னும் புதியதாய் தொழில்நுட்பங்கள் வரும். இதனால், சமூக பொருள் உற்பத்தி நடவடிக்கையே அறிவுசார் உற்பத்தி நடவடிக்கையாக பெரும்பாலும் மாறிவிட்டது. மேலும் தகவல்கள், கருத்துக்கள் ஆகியவையும் சரக்காக (பண்டமாக) (Commodity) மாறுகின்றன.
அறிவுச் சமூகத்தில் சேவைத் துறையின் மேலாண்மை நிறுவப்பட்டு விட்டதால், பொருள் உற்பத்தி பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டதாக தோற்றம் தெரிகிறது. ஆனால் உண்மை இதுவல்ல. உற்பத்தி சக்தி என்பது மனித உழைப்பு சக்தியும், உற்பத்தி கருவிகளும் ஆகும். உற்பத்திக் கருவிகளின் மூலம் தனது உழைப்புச் சக்தியை பொருள்களின் மீது பிரயோகித்து புதிய பொருட்களை மனிதன் படைக்கின்றான். அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாய் மனித உழைப்பில் ‘அறிவு உழைப்பு’ மேலாண்மை பெற்றுள்ளது. அதேபோல், உற்பத்திக் கருவிகளும் அறிவு உழைப்பின் காரணமாய் கணினி தொடங்கி செயற்கை நுண்ணறிவு, ரோபாடிக்ஸ் போன்ற வகைகளில் புதிய மட்டத்தில் வளர்ந்து தானியங்கியாக மாறி வருகின்றது.
இதன் வளர்ச்சி எல்லை எவ்வளவு தூரம் சென்றாலும் அவை “மனித அறிவு உழைப்பின்” விளைவாகவே இருக்கும். உழைப்பு என்பதே ஒரு சமூக நடவடிக்கை என்பதுதான். உற்பத்தி செய்யப்படும் சரக்கு உருவாக்கத்தில் திண்மையான உழைப்பு அதாவது தனிநபர் உழைப்பு (concrete labour) மற்றும் அருவமான உழைப்பு அதாவது சமூக உழைப்பு (abstract labour) தொழிற்படுகிறது.
சரக்கு அல்லது பண்டத்தின் மதிப்பு என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது சமூக உழைப்பின் சராசரியை அடிப்படையாகக் கொண்டது. சமூக உழைப்பின் சராசரியை “சமூக ரீதியாக தேவைப்படும் உழைப்பு நேரம்” தீர்மானிக்கிறது. இந்த உழைப்பு நேர அளவை “உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி மட்டம்” தீர்மானிக்கிறது.
அறிவியல் தொழில்நுட்ப புரட்சி காரணமாக சமூக உழைப்பின் சராசரி பெரும் பாய்ச்சலில் வளர்ந்து உழைப்பாளியின் திண்மையான உழைப்பை (தனிநபர் உழைப்பை) ஒப்பீட்டளவில் குறைத்து வருகின்றது.
இந்த திடீர் மாற்றங்கள் சரக்கு அல்லது பண்டம் பற்றிய மயக்கங்களை உருவாக்கியுள்ளன. இதனால் மதிப்பின் உருவாக்கத்தில் தனிநபர் உழைப்பே இல்லை என்பது போலவும், உழைப்பே இல்லாமல் உற்பத்தி நடைபெறுவது போலவும், எனவே உழைப்பு சுரண்டல் இல்லை என்பது போலவும், எனவே “உபரி மதிப்பு” உழைப்பு சுரண்டலால் ஏற்படவில்லை என்பது போலவும் தோற்றம் உருவாக்கப்படுகின்றது.
இந்த தோற்றம் பொய் என்பதை கரத்தாலும், கருத்தாலும் இரத்தத்தை வேர்வையாக சிந்தி உழைத்து கொண்டுள்ள கோடான கோடி உழைக்கும் மக்களின் இன்றைய அவல வாழ்க்கையே நிரூபிக்கும்.
சமூக உற்பத்தித் துறையை மூன்று பெரும் துறைகளாக பிரிப்பர்.
1. வேளாண் துறை
2. தொழில்துறை
3. சேவைத்துறை
நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சேவை துறையில் தொடங்கி இன்று அனைத்துத் துறைகளிலும் மேலாண்மை பெற்றுவிட்டது. உற்பத்தி சாதனங்களின் உற்பத்தி, மூலப் பொருட்கள் உற்பத்தி, நுகரும் பொருட்கள் உற்பத்தி, உணவு உற்பத்தி போன்றவற்றோடு சேவை துறையான போக்குவரத்து, சந்தை, நிதி, தகவல் தொடர்பு போன்ற அனைத்தையும் புதிய மட்டத்திற்கு உயர்த்தி இதன்மீது ‘அறிவு உழைப்பு’ செயல்படுகின்றது.
சமூக உற்பத்தியில் இத்தனை பிரிவுகளிலிலுமிருந்துதான் சமூகச் செல்வம் உற்பத்தியாகின்றது. முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடே சமூக செல்வத்தை உருவாக்கும் சமூக மயமாக்கப்பட்ட உழைப்புக்கும், அந்த செல்வத்தை தனிநபர் அபகரிப்பதற்குமான முரண்பாடுதான்.
இன்றைய ஏகாதிபத்திய உலகமய சூழலில் ஒவ்வொரு சரக்கும் உலகமயமான சமூக உழைப்பின் விளைவே ஆகும். எனவேதான் மேற்சொன்ன முரண்பாடு உலகமயமான சமூக உழைப்புக்கும் தனிநபர் அபகரிப்புக்குமான முரண்பாடுதான்.
உலக நிதி மூலதனம் தொடங்கி அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை சமூகச் செல்வங்களை அபகரித்துச் செல்வதை நாம் வெளிப்படையாகக் கண்டு வருகின்றோம். இந்த அபகரிப்பை எதிர்த்து தானே விவசாயிகளும், தொழிலாளர்களும் போராடி வருகின்றனர். இந்திய விவசாயிகளின் வரலாற்று சிறப்புமிக்க “டெல்லி முற்றுகை” என்னும் அந்த மாபெரும் போராட்டம் வர்க்கப் போராட்டம்தான்.
அறிவியல் தொழிற்நுட்ப பாய்ச்சல் வேக வளர்ச்சி காரணமாக ஏற்படும் இந்த மாற்றங்களை அறிந்தும் அறியாதது போல் பேசுகின்றனர்; செயல்படுகின்றனர். வர்க்கம் இல்லை; வர்க்கப் போராட்டம் காலாவதியாகி விட்டது என்ற சித்தாந்தங்களை மீண்டும் பரப்பும் விதமாக பேசி வருகின்றனர்.
இவர்கள் யாருக்காக இதை செய்கின்றனர் என்பதை தமிழ் நாட்டு உழைக்கும் மக்கள் நன்கு அறிவர்.
தொடர்புக்கு: 95975 06006