தியாகி களப்பால் குப்புசாமிக்கு வீரவணக்கம்
அ.பாஸ்கர்
கரைகளை உடைத்து கட்டுப்பாடின்றி தாண்டவமாடிய காவிரியை கரைகளை கட்டி தண்ணீரை கட்டுப்படுத்தி, அணையைக் கட்டி அதன் ஆவேசத்தை அடக்கி, அதன் ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும், பயன்பாடு உடையதாக மாற்றிய பெருமை உழைக்கும் மக்களுக்கு உண்டு.
“சோழவள நாடு சோறுடைத்து” என்னும் மறையாத சொல்லாடல் தோன்றும் வகையில் காவிரி படுகையை விவசாய பூமியாக மாற்றிய வேளாண் மக்களை புகழ்ந்து பாடாத புலவர்கள் இல்லை.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தைகளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்த்துக்கள் வேண்டும்.
ஆனால் புகழுக்குரிய இந்த மக்களின் வாழ்க்கை, வாழ்க்கை நிலை பெருமைப்பட தகுந்ததாக இல்லை “உழுது விதைத்துறுப்பார்க்கு உணவில்லை” என்று பதிவு செய்தான் முண்டாசுக் கவி பாரதி.
கட்டுக்கடங்கா காவிரியை கட்டி நிறுத்தியவர்கள் தான் கொடிய அடக்குமுறைகளுக்கும், சமூகக் கொடுமைகளுக்கும், சுரண்டல்களுக்கும், காரணம் எல்லாம் தலைவிதியே என எண்ணி வாழ்ந்த மக்களின் கை விலங்கை, கட்டுகளை அறுத்தெறிய வழிதெரியாமல் கூனிக்குறுகி வாழ்ந்தார்கள் உழவர் பெருமக்கள் என்பது தஞ்சை மாவட்டத்தின் வரலாற்றிலிருந்து மறைக்க முடியாது.
நிலப்பிரபுக்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள் ஆதிக்க வெறியர்களின் கோரத்தாண்டவத்தை அடக்கி நிறுத்த போவது யார்? அரசாங்கத்தின் ஆதிக்கக் கோட்பாடுகளை உடைத்தெறியும் வலிமையை இவர்களுக்கு ஊட்ட போவது யார்? என தெரியாமல் வாயிருந்தும் ஊமையாய் கண்ணிருந்தும் குருடர்களாய், காதிருந்தும் செவிடர்களாய், கூனிக்குறுகி வாழ்ந்த தஞ்சை மாவட்ட விவசாயிகளை, விவசாய தொழிலாளர்களை அடிமைச்சங்கிலியிலிருந்து அறுத்தெறிய நம்மைப் படைத்த கடவுள் வரவில்லை. ஆனால் அரைக்கால் சட்டையுடன் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுவனாக தஞ்சை மாவட்டத்திற்கு வந்தார் தோழர் பி.எஸ்.ஆர்.
அடிமைப்பட்ட மக்களை திரட்டிட செங்கொடி இயக்கத்தை உருவாக்கி நிலப்பிரபுக்களின் கொட்டத்தை அடக்குவதற்கு தலைமை ஏற்பதற்கு தளபதிகளை தேடுகிறார் தோழர் பி.எஸ்.ஆர்.
களப்பால் கிராமத்தில் அருணாசலம்_முத்தம்மாள் தம்பதியினருக்கு மூத்தமகனாக 1911 மார்சு 11ம் தேதி குப்புசாமி பிறந்தார்.
கிராமத்தின் தலையாரியாக இருந்த அருணாசலத்திற்கு தமது மகனை படிக்க வைக்க ஆசை. ஆனால் பண்ணையின் அடிமைகளும், விவசாயக் கூலிகளின் குழந்தைகளுக்கும் பள்ளியில் படிக்க இடம் கிடையாது.
பண்ணையாருக்கு குழந்தை பிறந்தவுடன் தெரிவிக்க வேண்டும். ஆறு வயதில் மாடு மேய்க்க வேண்டும். பத்து வயதில் சாணம் அல்ல வேண்டும். பதினைந்து வயதில் வண்டி ஓட்ட வேண்டும். இது பண்ணையார்களின் எழுதப்படாத சட்டம்.
அதனால் தனது மகன் பிறந்ததை மறைத்து முதலாளிக்கு தெரியாமல் குப்புசாமியை பள்ளியில் சேர்த்து விடுகிறார் அருணாசலம்.
வாத்தியார் ஒரு அய்யர். மாணவனான குப்புசாமி அங்கே உயர் ஜாதி குழந்தைகளையோ வாத்தியார் அய்யரையோ தொட்டு விடக்கூடாது என்பதால் திண்ணையில் நின்று தான் படிக்க வேண்டும். சிறிய தவறு செய்தாலும் தண்டனை தப்பாது. எப்படியோ ஆறாம் வகுப்பு வரை படித்து விடுகிறார்.
இளம் வயதிலேயே முற்போக்கு சிந்தனை, அநீதிகளை கண்டு கொதித்து எழும் உணர்வு கொண்டவராக இருந்தார். குறிப்பாக களப்பால் கிராமத்தில் பஞ்சு ஐயர் என்ற மருத்துவர் அங்குள்ள மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தார். இவர் தலித் மக்களை தொட்டு வைத்தியம் பார்க்க மாட்டார். இதைப்பார்த்த களப்பால் குப்பு வைத்தியம் பார்ப்பது போல் சென்று அய்யரின் கையை பிடித்து இழுத்து விடுகிறார். இதுவே இவரது முதல் கலகம்.
இச்செய்தி காட்டு தீ போல் பரவுகிறது. பஞ்சாயத்து கூடுகிறது. விசாரித்து இளைஞர் என்பதால் அபராதமோ, தண்டனையோ இல்லாமல் பஞ்சாய்த்து கலைந்தது.
1943 ஆம் ஆண்டில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகா தென்பரை கிராமத்தில் விவசாயிகள் சங்கம் அமைக்கப்பட்டு தோழர் பி.சீனிவாசராவ் செங்கொடி ஏற்றுகிறார்.
தென்பரையில் செங்கொடி ஏற்றுவதற்கு சேரன்குளம் அமிர்தலிங்கம், வேதபுரம் ரங்கசாமி, வெங்கடேச சோழகர், ராமானுஜம், களப்பாள் குப்பு போன்ற தலைவர்களின் முயற்சியால் தென்பரையில் செங்கொடி ஏற்றிய பிறகு கீழத் தஞ்சை மாவட்டம் முழுவதும் கிராமங்கள் தோறும் பூதம் போன்று செங்கொடிகள் பறக்கின்றன, புரட்சி ஓங்குக! என்ற முழுக்கம் முழங்கப்படுகின்றது. இது நிலப்பிரபுக்களுக்கு பெரும் அச்சத்தை உண்டாக்கி, கதிகலங்க வைத்தது. ஒடுக்கப்பட்ட மக்களை நம்பிக்கை பெறச் செய்தது.
தோழர் பி.எஸ்.ஆர். அவர்களோடு இணைந்து களப்பால் குப்பு, சிவராமன், இரணியன், மணலி கந்தசாமி, வெங்கடேச சோழகர், ஏ.எம்.கோபு என எண்ணற்ற தோழர்கள் கிராமங்கள் தோறும் செங்கொடி இயக்கத்தை கட்டுகிறார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபாடுகொண்ட களப்பால் குப்புசாமி மிகப்பெரிய ஒரு கூட்டத்தை களப்பாலில் ஏற்பாடு செய்து தலைமை ஏற்கிறார்.
கூட்டத்தின் தகவலறிந்து மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, தலை ஞாயிறு போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான தோழர்கள், இளைஞர்கள் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அந்த கூட்டத்தில் தோழர் பி. சீனிவாசராவ் ஆற்றிய உரை “உனக்கும் இரண்டு கால், இரண்டு கை, அவர்களுக்கும் இரண்டு கால் இரண்டு கை உங்களை அவர்கள் அடித்தால் நீங்கள் அவர்களை திருப்பி அடியுங்கள்” என நீண்ட உரையாற்றுகிறார். அந்த கூட்டத்தில் விவசாய சங்கத்தின் கிளை தலைவராக களப்பால் குப்புசாமியும், கிளை காரியதரிசியாக சிங்காரமும் தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்களிடம் உணர்ச்சியை ஊட்டியது, எழுச்சியுடன் சென்றனர். பண்ணையார்களின் அடாவடித்தனத்தை எதிர்த்தனர்.
கோட்டூர் ஒன்றியத்தில் குன்னியூர் பண்ணையில் வேலை பார்த்து வந்த பண்ணை ஆட்கள் விவசாய சங்கத்தில் சேர்ந்தனர், செங்கொடியை ஏற்றினர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத பண்ணையார்கள் அடியாட்களை குவித்தனர். பண்ணை ஆட்களை தாக்கினர். குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது, கடைகளில் பொருட்கள் வாங்க கூடாது, வெளியிலும் வேலைக்கு போகக்கூடாது, பண்ணையிலும் வேலை கிடையாது இப்படி கடுமையான உத்தரவுகளைப் போட்டு வேலை ஆட்களை வைத்து தாக்கினர்.
பண்ணையார்களின் நெல்லை திருடியதாக பல தோழர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்தனர். கலகம் செய்ததாக 23 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து களப்பால் மற்றும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் குத்தகைதாரர்கள், தொழிலாளர்களும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பி.சீனிவாசராவ், சிவராமன், களப்பால் குப்புசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இத்தகைய போராட்டத்தின் விளைவாக 1944இல் களப்பாவில் பண்ணையார்கள் சார்பில் வி.எஸ்.முதலியார், மடாதிபதி, இன்னும் சிலரும் அதேபோல விவசாயிகளின் சார்பில் களப்பால் குப்புசாமி, ஆர்.அமிர்தலிங்கம், டி.இராஜகோபால் போன்றோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தான் “சாட்டையடி -சாணிப்பால்” நிறுத்தப்படவேண்டும். குத்தகைதாரர்கள் தனது குத்தகை நிலத்திலேயே கதிர் அடிக்கலாம். அறுவடையில் பண்ணையாருக்கு களத்திற்கு முக்கால் மரக்காலும், மேக்கூலியாக ஒரு மரக்கால் என ஒப்பந்தமானது, இதுவே முதல் ஒப்பந்தமாகும்.
அதே நேரத்தில் விவசாய சங்கத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றியாக இது அமைந்தது. கீழத் தஞ்சை மாவட்டம் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தியது. இதன் விளைவாக ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் விவசாயிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டம் மேலும் சூடுபிடித்தது. செங்கொடி இயக்கம் காட்டுத்தீயாக பரவியது.
1946இல் குன்னியூர் சாம்பசிவ ஐயர் பண்ணையில் போராட்டம் நடைபெற்றது. இராமநாதபுரத்தில் இருந்து ஆட்களைக் கொண்டு வந்து வேலை செய்தனர். இதனை தடுத்த போது கலவரம் ஏற்பட்டது. இதில் சாம்பசிவ ஐயரின் இரண்டு அடியாட்கள் இறந்தனர். இதனை தொடர்ந்து களப்பால் குப்புசாமி, ஆலத்தூர் ராமையன், கிரா லாத்தூர் பிச்சைக்கண்ணு ஆகிய 3 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டது.
தலைமறைவாக இருந்த களப்பால் குப்புசாமியை காவல்துறையினர் கைது செய்து பல்வேறு பொய் வழக்குகளை புனைந்து 1947ல் திருச்சி சிறையில் அடைத்தனர்.
ஆளும் வர்க்கத்தின் துணையோடு தஞ்சாவூர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் என கிளர்ச்சிகள் எழுந்தன. கம்யூனிஸ்ட் கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தஞ்சை நீதிமன்ற தீர்ப்பான தூக்குத்தண்டனையை ரத்து செய்தது, ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்.
நாணலூரில் 13.04.1948 காங்கிரஸ் கூட்டம் போட்டு நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் குப்புசாமி தண்டனையிலிருந்து தப்ப முடியாது, தப்பித்தாலும் நாங்கள் வெளியில் விடமாட்டோம் என பேசினர்.
அது போலவே 1948 ஏப்ரல் 18-ல் திருச்சி சிறையில் விஷம் கொடுத்து களப்பால் குப்புவை படுகொலை செய்தனர்.
களப்பால் குப்பு இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியானது. தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. கிளர்ச்சிகள் எழுந்தன. சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காக போராடிய தோழன் குப்புசாமி தமது 36 வயதிலயே சிறைச்சாலையிலேயே உயிர் பலியானார்.
ஆதிக்க சாதியினரும், பண்ணையார்களும் என்ன சதிசெய்தார்களோ அந்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படமால் அழுத்தமாக நீடிக்கிறது.
தியாக தோழர்கள் பி.எஸ்.ஆர்.களப்பால் குப்புசாமி, சிவராமன், இரணியன், மணலி கந்தசாமி, கோட்டூர் ராஜி என தியாகிகள் பட்டியல் தொடர்கிறது. இவர்களின் தியாகத்தால் தான்.
கீழ தஞ்சை மாவட்டத்தில் அடிமையாய் வாழ்ந்த மக்களின் அடிமை விலங்கு அறுக்கப்பட்டது. ஊமைகள் பேசினார்கள், குருடர்கள் பார்த்தார்கள். கூனர்கள் நிமிர்ந்தார்கள்.
தியாகி களப்பால் குப்பு வின் எழுபத்தி நான்காம் ஆண்டு நினைவு நாளில் வீரவணக்கம் செய்வோம் அவர் விட்டுச் சென்ற பணியை தொடர்வோம்.
தொடர்புக்கு: 94884 88339
திருத்துறைப்பூண்டி
ஒன்றியப் பெருந்தலைவர்