JNU மாணவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள் கொடூரமான தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!
தங்களுக்கு விருப்பமான உணவைச் சாப்பிட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கிய ஆர்எஸ்எஸ் – ஏபிவிபி குண்டர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இது குறித்து கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏப்ரல் 10 அன்று ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் தங்களுக்கு விருப்பமான உணவைச் சாப்பிட்ட அப்பாவி மாணவர்கள் மீது வன்முறைத் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்ட ஆர்எஸ்எஸ்-பாஜக-ஏபிவிபி குண்டர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
நமது நாட்டின் பன்மைத்துவத்திற்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்-ன் வெறுப்புணர்வுக்கு இந்த வன்முறைச் சம்பவம் மற்றுமொரு எடுத்துக்காட்டு ஆகும். ஒருவர் எந்த உணவைச் சாப்பிட வேண்டும், எந்த ஆடையை அணிய வேண்டும், எந்த மொழியில் பேசவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கட்டளையிட விரும்புகிறது.
அண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்தபடியே, மதச்சார்பற்ற விழுமியங்களுக்காகப் போராடுபவர்களையும், முற்போக்கு சிந்தனையுடைய மாணவர்களையும் அழித்திட, பாஜக-ஏபிவிபி கூட்டணி முயன்று வருகிறது. மாணவிகளையும் அவர்கள் தாக்கியுள்ளனர்.
மக்கள் விரோத, பிரிவினைவாத மற்றும் தேசவிரோத சக்திகள் மாணவர்கள் மீதான கொடூரமான தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது.
மாணவர்கள் மீதான இந்தத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுக்கிறது.
இவ்வாறு தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.