உள்துறை அமைச்சர் அமித்ஷா மொழித் திணிப்பு செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா மொழித் திணிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா “ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே குடிமக்கள் உரையாடும் மொழி இந்தி மொழியாகவே இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
உள்துறை அமைச்சரின் கருத்து “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற முறையில் “இந்து ராஷ்டிரா” கட்டமைக்கும் நோக்கம் கொண்டதாகும். இது நாட்டின் ஒன்றிய கட்டமைப்பை சீர்குலைக்கும் சிந்தனையாகும். இது “வேற்றுமையில் ஒற்றுமை காணும்” நாட்டின் தனித்துவப் பண்புக்கு எதிரானது. மாநிலங்களின் தாய்மொழி வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தும் செயலாகும்.
வடகிழக்கு மாநிலங்களில் இந்தி ஆசிரியர்கள் நியமித்திருப்பதும், பழங்குடி மக்களின் பேச்சு வழக்கு மொழிகளை தேவநாகரி எழுத்து வடிவத்துக்கு மாற்றுவதும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். நாட்டின் ஒரு பகுதியில் வழக்கத்தில் இருந்து வரும் ஒரு நாட்டின் பொது மொழியாக திணிப்பது, பிற பகுதிகளின் தாய் மொழி வளர்ச்சியைத் தடுக்கும் பேராபத்தானது.
தொன்மை வரலாறு கொண்ட தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எதிரானது. ஒன்றிய கட்டமைப்பில் உள்ள மாநிலங்களின் தாய் மொழிகள் மற்றும் மாநில அரசின் நிர்வாக மொழிகளை ஒன்றிய அரசின் நிர்வாக மொழிகளாக ஏற்பதன் மூலம் தான் நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் வலிமை பெற்று வளரும் என்பதை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், இந்தி மொழித் திணிப்பில் ஈடுபட்டு வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.