தமிழகம்

ஒன்றிய அரசு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்து விட்டது – சி பி ஐ மாநில செயற்குழு குற்றச்சாட்டு


பாஜக ஒன்றிய அரசு பன்னாட்டு நிதி மூலதன சக்திகளுக்கும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவான கொள்கைகளைத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகை வழங்கி வரும் பாஜக ஒன்றிய அரசு மறைமுக வரி செலுத்தி வரும் உழைக்கும் மக்களை கசக்கி பிழிந்து பெருந்தொகை வசூலித்து வருகிறது.

ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம் மாநிலங்களின் நிதி ஆதாரத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 137 நாட்களாக பதுங்கியிருந்த ஒன்றிய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் 9 நாட்களில் பெட்ரோல் விலை 6 ரூபாய் 54 காசுகள் உயர்த்தியுள்ளது. இது இன்னும் சில நாட்கள் தொடர்ந்து ரூ.20 வரை உயரும் எனக் கூறப்படுகிறது. டீசல் விலையினையும் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

பொருள் போக்குவரத்து வாடகை உயர்வில் தொடங்கி அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனைத்தின் விலைகளும் உயர்ந்து வருகின்றன. சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.50/= உயர்த்தி விட்டது.

நோய்த் தொற்று பரவல் காலத்தில் கடுமையான வாழ்க்கை நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முன்வராத ஒன்றிய அரசு 800 மருந்துகளின் விலைகளை 10.7 சதவிதம் உயர்த்தியுள்ளது. இடிமேல் இடியாக விழுந்து வந்த விலைவாசி உயர்வின் தொடர்ச்சியாக தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ரூ.40 வரை உயர்த்தியுள்ளது.

பாஜக ஒன்றிய அரசு விலைவாசி கட்டுப்படுத்துவதில் படுதோல்வி அடைந்துள்ளது. தேர்தல் நேரங்களில் வாக்காளர்களை வஞ்சமாக ஏமாற்றி அதிகாரத்தில் தொடரும் பாஜகவின் அரசியல் சதி விளையாட்டை அதன் விலைவாசிக் கொள்கை ‘உள்ளங்கை நெல்லிக் கனியாக’ வெளிப்படுத்தி வருகிறது. மக்கள் வாழ்க்கை நலனையும், தரத்தையும் கடுமையாக பாதிக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒன்றுபட்டு போராட முன் வரவேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button