நொடித்துப் போன இலங்கை, வெடித்தெழும் போராட்டங்கள்!
த லெனின்
இலங்கையில் இனப்படுகொலை நடந்தபோது இந்திய கடலோரங்களில் வந்து இறங்கிய தமிழகர்களைப் போல இன்று மீண்டும் குடும்பம், குடும்பமாக தமிழக கடலோரங்களான இராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட இடங்களில் வந்து இறங்குகின்றனர்.
சாதாரண ஏழை எளிய இலங்கை வாழ் தமிழர்கள் தங்களிடம் இருந்த உடைமைகளை விற்றுவிட்டு தலைக்கு ரூ.10,000 கட்டி சட்டவிரோத படகுகளின் மூலம் இந்திய கடலோர பகுதிகளில் வந்து இறங்குகின்றனர். இது சட்டவிரோதமாக இருந்தாலும் அவர்களை அகதிகளாகத்தான் கருத வேண்டும் என்று சர்வதேச சட்டங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
கடந்த 2009ஆம் ஆண்டு ஒரு மாபெரும் இனப்படுகொலையை நடத்திய சிங்கள பெரும்பான்மைவாத அரசு இன்று நொடித்து போன பொருளாதாரத்தையும் வெடித்து எழும் மக்கள் போராட்டங்களையும் எதிர்கொண்டு வருகிறது.
சிங்கள பவுத்த பேரினவாத கொள்கைகளை முன்னிறுத்தி அரசியல் அறுவடைகளை நிகழ்த்தினாலும், அது கடைபிடித்த தவறான உலகமய பொருளாதார கொள்கையால் இன்று சாயம் வெளுத்து சொந்த மக்கள் முன்னால் அம்மணப்பட்டு நிற்கிறது அரசு.
பெரும்பான்மைவாத வலதுசாரி அரசியலுக்கு இது ஒரு எச்சரிக்கை.
அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வால் இன்று மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். பெட்ரோல் விலை இலங்கை ரூபாயில் 270ஐ தாண்டி விட்டது. சமையல் எரிவாயு விலையின் விலையோ ரூ.4170ஐ தாண்டி விட்டது. பால் பவுடர் பாக்கெட் ஒரு கிலோ ரூ.2000. ஒரு டீ யின் விலை ரூ.100 என்றாகியுள்ளது. அத்துடன் நாடுமுழுவதும் மின் தட்டுப்பாடு எங்கும் தலைவிரித்தாடுகிறது. அதனால் குடிநீர் வினியோகம், மருந்து மற்றும் உணவுப் பொருட்களுக்கு நாள் கணக்கில் மக்கள் காத்துக் கிடக்கும் அவலம் நடந்து வருகிறது. பெட்ரோல் கிடைக்காமல் பெட்ரோல் பங்குகளின் முன்பு மக்கள் வரிசையில் நிற்கும்போது கலவரம் ஏற்படுகிறது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்கப்படும் இடங்களில் பெரும் மக்கள் கூட்டத்தை சந்தித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இலங்கை அரசு இந்தியாவின் உதவியை நாடி உள்ளது. 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை தங்களுக்கு அளித்து இந்தியா உதவ வேண்டும் என்றும், அதில் ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு அத்தியாவசியப் பொருட்களை கடனாக அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அதுபோலவே சீனாவிடமும், சர்வதேசிய நிதியத்திடமும் கடன்கள் கேட்டு கதவை தட்டி வருகிறது.
அதுவும் ஏப்ரல் மாத மத்தியில் வர இருக்கும் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
இலங்கைக்கு ஏன் இந்த நெருக்கடி?
இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு பெரும் பொருளாதார சீரழிவை சந்தித்து வருகிறது. அதிகப்படியான கடன் மூலமாகத்தான் இலங்கை தற்போது திவால் நிலையை அடைந்துள்ளது என்று சர்வதேச நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே போனது. ஆனால் அதை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பணவீக்கம் அதிகரித்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சிறிய நாடான இலங்கை தனது பெரிய இராணுவத்திற்கு நிதியை அளவுக்கு அதிகமாக ஒதுக்கி செலவு செய்வதால் இந்தப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. அதுவும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆறு தமிழருக்கு ஒரு ராணுவ வீரர், இறுதிப் போர் முடிந்தும் இன்றும் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். தமிழர் பிரச்சனையை தீர்த்து அதிகாரப் பகிர்வின் மூலம் இராணுவச் செலவை குறைக்க வேண்டும்.
2021 முதல் விவசாயம் அனைத்தும் நூறு சதம் இயற்கை விவசாயம் என்று அறிவித்தனர். இதனால் தேயிலை உற்பத்தி மிகவும் பாதிப்படைந்தது. 2021 செப்டம்பரில் பொருளாதார அவசர நிலையை அறிவித்தது அரசு.
கொரோனா காலம் இலங்கைக்கு வருமானம் ஈட்டும் சுற்றுலாவை முடக்கி போட்டது. தேயிலை, சுற்றுலா, ஆடை உற்பத்தி ஆகிய மூன்றும்தான் அவர்களுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த மிக முக்கியமான ஏற்றுமதி சரக்குகளாகும். அவை முற்றாக அடைபட்டது.
ஏற்கனவே, இதோடு இலங்கை வாங்கிய கடன்களும் சேர்ந்து இன்று மூச்சுத் திணற வைத்துவிட்டது. இன அழிப்பு குற்றத்திற்கு உள்ளான இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷவும், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் இனவெறியையும் பெரும்பான்மை மதவெறியையும் இணைத்து ஆட்சிக்கு வந்திருந்தாலும் இன்று சிங்கள மக்களை திருப்திபடுத்த முடியாத சூழலுக்கு நாட்டை விட்டுச் சென்று விட்டனர்.
ஏற்கனவே தமிழர்கள் பொருளாதாரத் தடையால் போர்க்காலங்களில் என்ன துன்பங்களை அனுபவித்தார்களோ அவற்றை இன்று சிங்கள மக்களும் அனுபவிக்கின்றனர்.
தமிழர்களின் வலி இப்போதுதான் சிங்கள நடுநிலையாளர்களுக்குத் தெரிய வருகிறது.
இலங்கை கடன் கேட்டு இந்தியாவை நெருங்க வரும் இந்த நேரத்தில் ஏற்கனவே உள்ள இலங்கை இந்திய ஒப்பந்தமான 1987ன் அடிப்படையில் 13வது சட்டத்திருத்தம் கொண்டுவந்து தமிழர்களின் தாயகப் பகுதிகளை ஒன்றிணைத்து மாநில அந்தஸ்து பெறுவதற்கு இந்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து நிறைவேற்ற வேண்டும்.
தமிழர்களிடம் களவாடப்பட்ட நிலங்களை திரும்பப் பெறுவதற்கும், தமிழர் பகுதியில் நிலைபெற்றிருக்கிற ராணுவத்தை அகற்றி தமிழ் மக்கள் சுதந்திரமாக சுவாசிக்கவும், தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யவும் வழி ஏற்படுத்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசு ராஜதந்திர நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்.