வன்முறைக் கூடமாகும் சென்னை ஐஐடி! – அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் கண்டனம்
சென்னை ஐஐடியில் வேதியியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வந்த பட்டியல் இன மாணவி சக மாணவர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளார். இவர்கள் மீது புகார் கொடுத்த பின்பும் ஐஐடி நிர்வாகமும், மயிலாப்பூர் காவல் நிலைய அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடும் மனஉளைச்சலுக்குத் தள்ளப்பட்ட மாணவி 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஐஐடி நிர்வாகம் மற்றும் மயிலாப்பூர் காவல் நிலைய அதிகாரிகளின் அலட்சிய, பாரபட்சமான போக்கினை மாணவர் பெருமன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
சென்னை ஐஐடியில் உயர்சாதியினரே பெரும்பாலான மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும், பணியாளர்களாகவும், நிர்வகிப்பவர்களாகவும் இருப்பதால் உயர்சாதியினர் செய்யும் குற்றங்கள் பெரும்பாலும் மூடி மறைக்கப்படுகிறது. இதனால் ஐஐடியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சிறுபான்மையினர்கள் மீது பல்வேறு வகையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால் சம்பந்தப்பட்ட அந்த மாணவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதன் விளைவாக, இவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியேறுவது, இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கே தள்ளப்படுகின்றனர்.
ஐஐடியில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்; வளாக ஜனநாயகம் நிலை நாட்டப்பட வேண்டும். இதன்மூலம் இப்படிப்பட்ட வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியும். மாணவியை துன்புறுத்திய ஐஐடி முன்னாள் மாணவர் கிங்ஸ் தேப்சர்மா தற்போது தான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மாணவியை சாதி ரீதியாக துன்புறுத்திய, பாலியல் ரீதியாக துன்புறுத்திய அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மாணவி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட ஐஐடி பொறுப்பாளர்கள், மயிலாப்பூர் காவல் நிலைய அதிகாரிகள் மீதும் ஒன்றிய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு ஒன்றிய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
மௌ.குணசேகர், மாநில தலைவர் தினேஷ் சீரங்கராஜ், மாநில செயலாளர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) தமிழ்நாடு மாநிலக் குழு