இந்தியா

மார்ச் 28, 29 – அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவளிப்பீர்! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு அறைகூவல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அஜாய் பவனில் 2022 மார்ச் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது. இக்கூட்டம் முடிவுற்ற பின், 14 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி ராஜா வெளியிட்ட ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பில் கூறியிருப்பது பின்வருமாறு:

தற்போதைய சர்வதேச மற்றும் தேசிய சூழல் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா ஒரு சுருக்கமான அறிக்கையை தேசியக் குழு கூட்டத்தில் சமர்ப்பித்தார். மார்ச் 10 அன்று வெளியான ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி நாட்டிலுள்ள அனைத்து இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற, ஜனநாயக அரசியல் கட்சிகள் மற்றும் சக்திகளுக்கு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகளில் இருந்து அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக எதிர்க்கட்சிகள் உரிய படிப்பினைகளைப் பெற வேண்டும். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தீவிர சுயபரிசோதனையில் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் ஈடுபட வேண்டும்.

கடுமையாகப் போராடி பெற்ற இந்திய குடியரசை ஒரு இந்து தேசமாக மாற்றுவதற்காக ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டு கட்டவிழ்த்து விடும் வகுப்புவாத, பிரிவினைவாத, எதேச்சதிகார தாக்குதல்களில் இருந்து  இந்திய குடியரசையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்திட நாட்டில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து வலுவான ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும் என்று தேசிய குழு கூட்டம் அறைகூவல் விடுக்கிறது. இத்தகைய அறைகூவல் விடுப்பதற்கான முடிவை மூன்று நாட்கள் நடைபெற்ற கட்சியின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் தேசியக் குழு கூட்டம் மேற்கொண்டது. ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த தோழர் ராமகிருஷ்ண பாண்டா இக்கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார்.

ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணியை முறியடிக்க அனைத்து கட்சிகளிடையே ஒற்றுமை மேலோங்க வேண்டும். அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பரஸ்பரம் ஒத்துப்போகும் இயல்புடைய, விட்டுக்கொடுக்கும் அணுகுமுறையைக்  கொண்டிருக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளைத் தீவிரமாக முன்னெடுப்பதன் மூலம் முன்பு வலுவாக இருந்த பகுதிகளில் தற்போது மீண்டும் இழந்த செல்வாக்கை நிலைநிறுத்திட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

2014ஆம் ஆண்டில் இருந்தே, ஒன்றிய அரசு வெளிப்படையாகவே அரசியலமைப்புச் சட்டத்தின் பாற்பட்ட அமைப்புகளைக்  குறைமதிப்புக்கு உட்படுத்த முயலுவதுடன் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்திடவும் முயலுகிறது. மாநில அரசுகளையோ அல்லது சம்பந்தப்பட்ட எந்த ஒரு அமைப்பையும் கலந்து ஆலோசிக்காமல், அரசியலமைப்புச் சட்டத்தின் மாநில அரசுப் பட்டியலில் வேளாண்மை துறை குறிப்பிடப்பட்டுள்ளதையும் புறந்தள்ளிவிட்டு மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களையும், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இத்தகைய போக்கு ஒன்றிய அரசின் சர்வாதிகார மத்தியத்துவ தன்மையைத் தெளிவாக வெளிப்படுத்தியது.

ஓராண்டு காலமாக நீடித்த விவசாயிகள் போராட்டம், 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்த் தியாகம் – வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்தது என்ற போதும் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி போன்ற தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் மத்திய தொழிற்சங்கங்களை இரண்டு நாட்கள் (2022 மார்ச் 28 மற்றும் 29) அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய விளிம்பிற்கு தள்ளி இருப்பதைக் கட்சியின் தேசியக் குழு கூட்டம் சுட்டிக்காட்டியது.

திமுக, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி மற்றும் சிவசேனா உள்ளிட்ட பெரும்பாலான மாநில கட்சிகள் தொடர்ந்து ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கு குறித்தும், மாநில உரிமைகளைப் பறிப்பது குறித்தும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஒடுக்க மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது, மாநில அரசுகளுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை உள்ளிட்ட பிரச்சனைகளும் குறிப்பிடப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் கூட்டாட்சி முறைக்கு எதிரான இத்தகைய போக்கைக் கண்டித்து கேரள மாநில இடது முன்னணி அரசாங்கம் முன்களத்தில் நின்று போர்க்குரல் எழுப்பி வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் மத்தியத்துவ மற்றும் மேலாதிக்கப் போக்கிற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் இடதுசாரிகள் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாக இருப்பதையும், ஒரு பரந்துபட்ட, ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இதர இடதுசாரி கட்சிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளத் தீர்மானித்து இருப்பதை கட்சியின் தேசியக் குழு அங்கீகரித்துள்ளது. வலுவான வெகுமக்கள் இயக்கங்களின் மூலமாகவே அத்தகையதொரு ஐக்கிய முன்னணி உருவாகும் என்ற எதார்த்த நிலையை ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் கவனத்திற்கு தேசியக் குழு முன்வைத்தது.

தேசத்தின் பொருளாதார நிலை சிறப்பாக இருப்பது போல் முன்னிலைப்படுத்தும் ஒன்றிய நிதியமைச்சரின் முயற்சிகளை தேசிய குழு கூட்டம் மறுதலிக்கிறது. விலை உயர்வு மற்றும் வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் இதர மாநிலங்களில் உள்ள இளைஞர்களை ரயில்வே பணிகளில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கு எதிராகப் போராடச் செய்துள்ளது, அதன் விளைவாக, ரயில்வே பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டது. வேலைவாய்ப்பில் பெண்களின் சதவிகிதம் குறைவாக இருப்பது வேதனை அளிக்கக்கூடிய மற்றொரு விஷயம் ஆகும். நிலைமை இவ்வாறு இருக்க, நிதிநிலை அறிக்கை வேலையின்மை பிரச்சனையை முற்றாகப் புறந்தள்ளுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் ஆதரவு குழுக்களுக்கு ஒன்றிய நிதியமைச்சர் சலுகைகளை வாரி வழங்கி இருக்கிறார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் மற்றும் இதர நலவாழ்வு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளார். கல்வி மற்றும் மருத்துவத்துறைக்கான நிதி ஒதுக்கீடு ஓரளவு உயர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக, இந்த நிதிநிலை அறிக்கையானது கார்ப்பரேட் ஆதரவு மற்றும் மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை என்று தேசியக் குழு கருதுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மோடி அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும், சமூக மற்றும் பொதுத் துறைகளின் மீது உள்ள வெறுப்பையும் நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. வேளாண்மை, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நீதி துறைகளில் நிதிநிலை அறிக்கை பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாகவே உள்ளது.

உக்ரைன் நெருக்கடி இந்தியக் கல்வித் துறையில் நிலவும் அதிக கட்டணம் வசூலிக்கும் பிரச்சனையை அம்பலப்படுத்துகிறது. இந்தப்  பிரச்சினை குறித்து உடனடியாக விவாதிக்கப்பட வேண்டும்.

கர்நாடகத்தில் மக்களிடையே வகுப்புவாத பிளவை உண்டாக்க ஆர்.எஸ்.எஸ்-பாஜகவினரும், இசுலாமிய அடிப்படைவாதிகளும் வெளிப்படையாக முயன்றனர். ஆடைகளைத் தேர்ந்தெடுக்கும் தனிநபர் சுதந்திரத்தை தேசியக் குழு கூட்டம் உயர்த்திப் பிடிக்கிறது; கல்வி கற்கும் உரிமை கோரும் பெண்களின் உறுதிப்பாட்டை வரவேற்கிறது. பெரும்பான்மை வகுப்புவாதமும்,  சிறுபான்மை வகுப்பு வாதமும் ஒன்றுக்கொன்று பரஸ்பரம் உதவுவதால், பெரும்பான்மை வகுப்புவாதத்தை சிறுபான்மை வகுப்புவாதம் மூலமாக எதிர்த்து நின்று வெல்ல முடியாது என்ற உண்மையைத் தேசியக் குழு பறைசாற்றுகிறது.

அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளாகக் கட்சியின் தேசியக் குழுக் கூட்டம் பின்வருவனவற்றை வலியுறுத்துகிறது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 முதல் 18 வரை நடைபெறும். இதற்கான வழிகாட்டுதல்களை தேசியக் குழு அங்கீகரித்துள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ள இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு கட்சி அமைப்புகள் முழு ஆதரவு அளிக்க வேண்டும்.

நால்கோ நிறுவன தனியார்மயமாக்கலுக்கு  எதிரான போராட்ட இயக்கத்தை முன்னெடுத்தல்.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைத்திருப்பதற்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்துவது.

இவ்வாறு கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி ராஜா வெளியிட்ட ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button