வருங்கால வைப்பு நிதியுடன் இணைந்த ஓய்வூதியத்தை உயர்த்திடுக! ஏ ஐ டி யு சி கோரிக்கை
வருங்கால வைப்பு நிதி அறங்காவல் குழு கூட்டம், மார்ச் 11, 12 தேதிகளில் குவாஹாத்தி நகரில் நடைபெற்றது.
வருங்கால வைப்பு நிதியுடன் இணைந்த ஓய்வூதியத்தை (EPS-95) அதிகரிப்பது சம்பந்தமாக, சாத்தியமான வழிமுறைகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவதற்கு, ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு துறை வல்லுநர்களைக் கொண்ட ஒரு செயல்பாட்டுக் குழுவை அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்தக் குழுவில் ஓய்வூதிய ஒழுங்கமைப்பு ஆணையம், ஆயுள் காப்பீட்டு நிறுவனம், வி.வி.கிரி தேசிய தொழிலாளர் கழகம், மற்றும் 2 சுயேச்சையான மதிப்பீட்டாளர்கள், முக்கியமான நிதி நிறுவனங்கள்/ முதலீட்டு நிறுவனங்களின் முதன்மை முதலீட்டு அலுவலர்கள் மற்றும் இதர வல்லுநர்கள் இருப்பார்கள் என்று அறங்காவல் குழு முடிவுகள் கூறுகின்றன.
ஏற்கனவே ஒரு சிறப்பு குழு (Adhoc Committee) அமைத்து பரிந்துரை பெறப்பட்டுள்ளது. அது தந்த பரிந்துரையைப் பரிசீலிப்பதற்கு மற்றொரு குழுவை இப்போது அமைத்திருக்கிறார்கள்!
2013 பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் இணைந்து அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை மேற்கொண்டபோது குறைந்தபட்ச ஓய்வூதியம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. கோரிக்கைகள் குறித்துப் பேசுவதற்காக ஏ கே அந்தோணி தலைமையில் ஒரு அமைச்சரவைக் குழுவை அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் அமைத்தது. அப்போது ரூபாய் 3000 ஓய்வூதியமாக தரவேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கூறியபோது 1000 ரூபாய் தர அமைச்சரவை குழு ஒப்புக்கொண்டது. ஆயினும் அது நிறைவேற்றப்படும் முன்பு பொதுத் தேர்தல் நடந்து, மோடி , ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ரூபாய் 1000 குறைந்தபட்ச முன்பு ஓய்வு ஊதியம் பெறுவதற்கான ஆணை தயாராக இருந்தும் கூட மோடி அரசு 2014 செப்டம்பர் மாதம் வரை இழுத்தடித்து அதன் பின்புதான் அமல் நடத்தியது.
இதற்குப் பிந்தைய காலங்களில் நடந்த பொது வேலைநிறுத்தங்களின் போது 6000 ரூபாய் என ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கூறின. என்றாலும் 2000 அல்லது 2500 உயர்த்தி தருவோம் என்று அரசு சொன்னது. அது வெற்று வாக்குறுதியாகவே இன்றும் காற்றில் அலைந்து கொண்டிருக்கிறது.
மார்ச் 28, 29 பொது வேலை நிறுத்தத்தில் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 28, 29 தேதிகளில் மறியல் ஆர்ப்பாட்டங்கள் தமிழ்நாடு முழுக்க நடைபெறுகிறது. நமது ஓய்வூதியர் சங்கங்கள் அவற்றில் பங்கெடுப்பது பயனுள்ளதாக இருக்கும். அதைச் செய்வார்களா எனத் தெரியவில்லை!
சென்ற இரு தினங்களில் குவஹாத்தியில் நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில், ஏஐடியுசி பிரதிநிதியான, தேசிய செயலாளர் தோழர் சுகுமார் தாம்லே கலந்துகொண்டு, ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் எனக் கோரி வலியுறுத்தி வாதாடினார்.