கோகுல்ராஜ் வழக்கு – குற்றவாளிகளுக்கு தண்டனை – சாதி ஆதிக்க சக்திகளுக்கு எச்சரிக்கை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதிக்க வெறி கொண்ட, சாதிவெறி கும்பலால், பட்டியலின இளைஞர் கோகுல்ராஜ் கொடூரமாக கொல்லப்பட்டார். இந்தக் கொலைக் குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மதுரை சிறப்பு நீதி மன்றம் இன்று (08.03.2022) தண்டனை அறிவித்துள்ளது. இதில் முதல் குற்றவாளி யுவராஜுக்கும். அவரது கார் ஓட்டுநர் அருணுக்கும் மூன்று ஆயுள் தண்டனையும், அபராதமும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளுக்கு தலா இரண்டு மற்றும் ஒரு ஆயுள் தண்டனையும், அபராதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ள தண்டனை சமுகத்தில் மனிதத் தன்மையை இழந்து அலையும் ஆதிக்க சக்திகளுக்கு கடுமையான எச்சரிக்கையாகும்.
சமூகநீதிப் போராளிகளுக்கு ஊக்கம் அளிக்கும் தீர்ப்பு, நீதி பரிபாலன வரலாற்றில் கலங்கரை விளக்காக விளங்கும் புகழார்ந்த தீர்ப்பாகும்.
மனிதனை மனிதனாக மதிக்கும் உயர் பண்பை வளர்க்க மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறப்பான பங்களிக்கும். எளிய மனிதனின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தும் தண்டனை வழங்கியதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.