“பாசிச பாஜக ஒழிக” என முழக்கமிட்ட இளம் மாணவி சோபியா வழக்கில் காவல்துறையினருக்கு ரூ.2 லட்சம் அபராதம்
மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
03.09.18 அன்று தூத்துக்குடி விமானத்தில் கனடா ஆராய்ச்சி மாணவி தூத்துக்குடியைச் சேர்ந்த லாய்ஸ் சோபியா தூத்துக்குடி விமானத்தில் வருகையின்போது பாசிச பாஜக ஒழிக என்று அன்றைய பாஜக தமிழக தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களைப் பார்த்து கோஷமிட்டதற்கு விமான நிலையத்தில் வந்த திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் லாய்ஸ் சோபியா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான பெ.சந்தனசேகர் வாதாடினார். இருப்பினும் லாய்ஸ் சோபியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பிணையில் விடுவிக்க கூடிய சட்டப்பிரிவுகளில் கைது செய்யப்பட்டாலும், உச்சநீதிமன்றம் சட்டவிரோத கைதுகள் என்று இதுகுறித்து நிலையான அறிவுறுத்தல் செய்திருந்தும், பிணையில் விட மறுத்தது அதிமுக அரசு. இதனையும் கண்டித்து மாநில மனித உரிமை ஆணையத்திடம் முறையீடு வழக்கு நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பு மாணவி சோபியாவிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அவரது தந்தை டாக்டர் ஏ.ஏ.சாமி அவர்கள் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், ஆய்வாளர்கள் திருமலை, பாஸ்கர், அன்னத்தாய், உதவி ஆய்வாளர்கள் லதா, நம்பிராஜன் ஆகியோர் மீதும் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் மார்ச் 2 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எதிர் மனுதாரர்கள் மாணவி சோபியாவிற்கு செய்த மனித உரிமை மீறல்களுக்காக ரூபாய் இரண்டு லட்சம் அபராதம் வசூலித்து மாணவி சோபியாவிற்கு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1வது எதிர் மனுதாரர் திருமலை ரூ.50000 மும், மற்ற எதிர்மனுதாரர்கள் தலா ரூ.25,000 மும் மொத்தம் ரூ.200000 இழப்பீடு வழங்கிடவும், எதிர் மனுதாரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், இனி வரும் காலங்களில் இது போன்ற மனித உரிமை மீறல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்குரிய வழிகாட்டுதல்களையும் மாநில காவல்துறை தலைவர் வழக்க வேண்டும் எனவும் அழுத்தமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனுதாரரின் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமான வாதுரையை தாக்கல் செய்தும், பல்வேறு சட்ட போராட்டங்களை நீதிமன்றத்தில் நடத்தியும், வாதாடியும் தொடர்ந்து அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளார். இதற்காக தொடர்ந்து வழக்கில் ஆஜராகி வாதாடி வென்றெடுத்த மனித உரிமைப் போராளி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெ.சந்தனசேகர் மேலும் வழக்கிற்கு பெரிதும் துணை நின்ற வழக்கறிஞர் சுப.ராமச்சந்திரன் ஆகியோருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.