உக்ரைனை அடிமைப்படுத்தத் துடிக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பின் திட்டங்களை நிச்சயம் நிறைவேறவிடக் கூடாது – ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
உலக மூலதனம் மற்றும் தன்னலக் குழுக்களிடம் உக்ரைன் மக்கள் பலியாகிவிடக் கூடாது!
ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய தலைமைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டானெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் குடியரசுகள் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, நாஜி வன்முறையாளர்களை அமைதிப் பாதைக்குத் திரும்பச் செய்யும் நோக்கத்துடன் ரஷ்யா ஒரு இராணுவ-அரசியல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை டான்பாஸ் பகுதியில் அமைதியை உறுதிப்படுத்தவும், அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக ரஷ்யாவின் பாதுகாப்பைத் தற்காத்துக் கொள்ளவும் வகை செய்கிறது.
வார்சா உடன்படிக்கை கைவிடப்பட்ட பிறகு கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இராணுவமயமாக்கம் தொடர்ந்து அரங்கேறியது நிதர்சனமான உண்மை ஆகும். யூகோஸ்லாவியா நாட்டைச் சீர்குலைப்பதில் அமெரிக்காவின் மூர்க்கத்தனமான சூழ்ச்சிகள் வெளிப்பட்டன. உக்ரைனை அடிமைப்படுத்தத் துடிக்கும் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பின் திட்டங்களை நிச்சயம் நிறைவேறவிடக் கூடாது. இது போன்ற வஞ்சக திட்டங்கள் ரஷ்யாவின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல்களை உருவாக்குகிறது என்பதோடு இந்தத் திட்டங்கள் உக்ரைன் மக்களின் நலன்களுக்கும் முரணானது ஆகும்.
எவ்வாறாயினும், அமெரிக்கா உலக அரங்கில் அதற்குச் சாதகமானப் பலன்களை அதிகரித்துக் கொள்ளவே முயலுகிறது. ரஷ்யாவுக்கு எதிரான தடைகள், நார்டுஸ்ட்ரீம்-2 குழாய் கட்டமைப்பைத் தகர்ப்பது, ஐரோப்பாவில் போர் ஆகியவற்றால் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பொருளாதார இழப்புகள் உண்டாகும் என்பது போன்ற எந்த ஒரு விஷயமும் அமெரிக்காவின் அத்தகைய முயற்சியைத் தடுக்க முடியவில்லை. இத்தகைய ஆபத்தான தன்மை கொண்ட அமெரிக்க கொள்கைகள் குறித்து உலக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக முக்கியம் ஆகும். போருக்கு எதிரான பரந்துபட்ட இயக்கங்களின் அனுபவங்களை உலக மக்கள் நினைவுகூருவதும் முக்கியம் ஆகும். அத்தகையதொரு இயக்கத்தின் உருவாக்கமானது அமைதியை விரும்பும் ரஷ்ய மற்றும் உக்ரைன் மக்களுடன் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதோடு, சுதந்திரமான வளர்ச்சிக்கான அவர்களது உரிமையைப் பாதுகாக்கும்.
உக்ரைனைப் பண்டேராமயமாக்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவுகளை நிர்மூலமாக்குவதில் இருந்து ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி அதன் செயல்பாடுகளைத் தொடருகிறது. அந்தப் பிரதேசத்தின் கொள்கைகள் வெறித்தனம் கொண்ட தேசியவாதிகளின் சர்வாதிகாரத்தால் பல வழிகளிலும் உருவாக்கப்படுகின்றன. அவர்கள் உக்ரைன் மக்களை அச்சுறுத்துவதோடு, ஒரு மூர்க்கத்தனமான அரசியல் வளர்ச்சிப் போக்கை ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் மீது திணிக்கிறார்கள். இத்தகைய அழுத்தங்களுக்கு அடிபணிந்த செலன்ஸ்கி, டான்பாஸ் பகுதியில் அமைதி மற்றும் ரஷ்யாவுடன் இணக்கமான நல்லுறவைப் பேணும் அதிபராகத் திகழ்வார் என்ற நம்பிக்கையில் அவரைத் தேர்ந்தெடுத்த சக குடிமக்களின் நலன்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டார்.
டான்பாஸ் பகுதி மக்களைப் பாதுகாத்திட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், டானெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களின் அப்பாவி மக்களுக்கும், அகதிகளுக்கும் அனைத்துவித உதவிகளையும் வழங்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்குமாறு ரஷ்ய மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம்.
வன்முறைக் கிளர்ச்சியாளர்களை அமைதிப் பாதைக்குத் திரும்பச் செய்வதும், நேட்டோ அமைப்பின் ஆக்கிரமிப்புப் போக்கை கட்டுப்படுத்துவதும் காலத்தின் கட்டாயம் ஆகும். இராணுவம் மற்றும் நாஜிக்களின் அச்சுறுத்தலை ஒழிப்பதன் மூலமே ரஷ்யா, உக்ரைன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளில் மக்களின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதி செய்திட இயலும். பாசிசத்தின் எழுச்சியைத் தடுப்பதிலும், அமைதியைப் பேணுவதிலும் மனிதநேய அடிப்படையிலான ஒத்துழைப்பு மற்றும் மக்கள் இயக்கங்களின் வழிமுறைகளைப் பரந்த அளவில் நாம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று நாம் கருதுகிறோம்.
அமைதியை உறுதிப்படுத்துவது, சமுதாய முன்னேற்றம், சமூக நீதி மற்றும் சோஷலிசப் பாதையில் ஆக்கத்திறன் கொண்ட முயற்சி மற்றும் மேம்பாடு என்பதே ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
தமிழில் – அருண் அசோகன்