2020 டிசம்பரை விட ரூ. 131 கோடி அதிகம் பொதுத்துறையான ஐஆர்சிடிசி டிசம்பர் காலாண்டில் ரூ. 209 கோடி லாபம்!
புதுதில்லி, பிப். 11 – இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (Indian Railway Catering and Tourism Corporation) எனப்படும் ‘ஐஆர்சிடிசி’ (IRCTC), 2021 டிசம்பருடன் முடிவடைந்த தனது காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன்படி ‘ஐஆர்சிடிசி’ 2021 டிசம்பர் காலாண்டில் ரூ. 208 கோடியே 80 லட்சத்தை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 167.41 சதவிகிதம் அதிகமாகும். 2020 டிசம்பருடன் முடிந்த காலாண்டில் ‘ஐஆர்சிடிசி’ நிகர லாபமாக ரூ. 78 கோடியே 08 லட்சம் மட்டுமே வருவாயாக ஈட்டியிருந்தது. தற்போது, அதற்கு ரூ. 130 கோடியே 72 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. 2021 டிசம்பர் காலாண்டில் ‘ஐஆர்சிடிசி’ செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ. 540 கோடியே 21 லட்சத்தை ஈட்டியுள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 140.7 சதவிகிதம் அதிகமாகும். 2020 டிசம்பர் காலாண்டில் ‘ஐஆர்சி டிசி’ நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ. 224 கோடியே 37 லட்சத்தை மட்டுமே ஈட்டியிருந்தது. ஐஆர்சிடிசி நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ. 2-ஐ இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது.