ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடுமாறு அமலாக்கத்துறை மிரட்டுகிறது!
மும்பை, பிப்.10- மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகள் ‘மகா விகாஸ் அகாதி’ என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றனர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி அரசைக் கவிழ்ப்பதற்கு ஒத்துழைக்குமாறு, ஒன்றிய ஆட்சியாளர்கள் அமலாக்கத்துறை மூலமாக தன்னை மிரட்டுவதாக சிவசேனா மூத்தத் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இதுதொடர்பாக குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் ஒன்றை சஞ்சய் ராவத் எழுதியுள்ளார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு சிலர் என்னை அணுகி, மகாராஷ்டிரத்தில் ஆட்சியைக் கவிழ்க்க உதவி செய்யுமாறு கேட்டார்கள். ஆனால், அவர்கள் கூறியதை நான் செய்ய மறுத்து விட்டேன். அப்போது, ‘இதற்காக நான் பெரிய விலையை கொடுக்க வேண்டியது இருக்கும்’ என அவர்கள் என்னிடம் கூறினார்கள். நீண்ட காலமாக சிறையில் இருக்கும் முன்னாள் ரயில்வே அமைச்சருக்கு (லாலு பிரசாத்) ஏற்பட்ட நிலை எனக்கும் ஏற்படும் என்று மிரட்டினார்கள். நான் மட்டுமன்றி, மாநிலத்தின் 2 மூத்த அமைச்சர்களும் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் சிறைக்குப் போக வேண்டியதிருக்கும் என மிரட்டினார்கள்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை கவிழ்க்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை மற்றும் ஒன்றிய அரசின் பல்வேறு முகமைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது நிச்சயமாக ஜனநாயகம் நிலவும் எந்த நாட்டிற்கும் ஆரோக்கியமானது இல்லை. 17 ஆண்டுகளுக்கு முன் எனக்கு நிலம் விற்றவர் மற்றும் அவரது குடும்பத்தினரை எனக்கு எதிராக பேசுமாறு அமலாக்கத்துறை தற்போது மிரட்டுகிறது. எனது மகளின் திருமணத்திற்கு பந்தல், அலங்காரம் செய்தவர்கள் மற்றும் பிற வியாபாரிகளை நான் ரொக்கமாக ரூ. 50 லட்சம் கொடுத்ததாக கூறுமாறு அமலாக்கத் துறையினர் மிரட்டுகின்றனர். அலங்காரம் செய்தவர் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அமலாக்கத்துறை 28 பேரை சட்டவிரோதமாக பிடித்து சென்று உள்ளது. இதற்கு எல்லாம் நான் பயப்படவில்லை. தலைவணங்கப் போவதும் இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக் கொள்கிறேன். மாநிலங்களவையிலும், அவைக்கு வெளியேயும் நான் தொடர்ந்து உண்மையைப் பேசுவேன். அதேநேரம், இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர்கள் அதிகார துஷ்பிரயோகம் மூலம் மிரட்டப்படுவது, துன்புறுத்தப்படுவது போன்றவற்றைத் தாங்கள் கவனத்தில் கொள்வது மட்டுமின்றி, இதற்கு எதிராக குரல் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராவத் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.