(ஹிஜாப்) ஆடைகளைக் காரணம் காட்டி இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகள், கல்லூரிகளில் இருந்து வெளியேற்றம்! – இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கடும் கண்டனம்
கர்நாடக மாநில ஹிஜாப் பிரச்சனை குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆடைகள் சரியாக இல்லை என்ற அடிப்படையற்ற காரணங்களைக் கூறி கர்நாடக மாநில பள்ளிக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து இஸ்லாமிய மாணவிகள் வெளியேற்றப்படுவதை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஹிஜாப் அணிந்துவரும் பெண்கள் கல்வி நிறுவன வளாகங்களுக்குள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்ற காவி கும்பலின் மிரட்டலுக்கு நிர்வாகம் பணிந்து விட்டது. ஒவ்வொரு கல்லூரியாக பெண்களுக்கு கருத்துரிமை மற்றும் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது ஆகும்.
கர்நாடகத்தில் தற்போது நடைபெற்று வருவது, ஆர்எஸ்எஸ் மற்றும் சங்கப் பரிவார அமைப்புகள்பால் விசுவாசம் கொண்டிருக்கும் வெறிபிடித்த வகுப்புவாத கும்பல்களின் நிலையான இயக்கமுறை ஆகும் என்பதை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
சிறுபான்மைச் சமூக மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைவதைத் தடுப்பது, நிறுவனங்களை சேதப்படுத்துவது, தேர்வு காலம் நெருங்கும்போது பாடநூல்கள் உள்ளிட்டவற்றை எரிப்பது ஆகியவை வகுப்புவாத செயல்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் வழக்கமான செயல்முறைகள் ஆகும்.
இதுபோன்றதொரு செயல்முறை சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக ஒடிசாவில் உள்ள கந்தமால் மற்றும் வேறு பல இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
பொருளாதார ரீதியிலான பின்னடைவு மற்றும் சமூக கட்டமைப்பு ரீதியிலான வன்முறை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் கல்வி கற்பது பாதிப்புக்கு உள்ளாகி வரும் காலத்தில், பெண்களை மேலும் அதிகாரம் இழக்கச் செய்திட, வகுப்புவாத சக்திகள் சூழலை மேலும் மோசமடையச் செய்து வருகின்றன.
பெண்களை அனைத்து வகையிலும் அதிகாரப்படுத்த வேண்டியது பற்றி மோடி அரசாங்கம் பேசி வரும் அதேவேளையில், கர்நாடக மாநில பாஜக அரசாங்கம் இஸ்லாமிய பெண்களை கல்வி கற்பதில் இருந்து வெளியேற்ற தலைகீழாக நிற்பது பெரும் முரண்பாடாக உள்ளது.
ஹிஜாப் மற்றும் காவித் தொப்பியை ஒரே நேர்க்கோட்டில் நிலைநிறுத்துவது தர்க்கரீதியாக தவறானது மட்டுமல்ல; வகுப்புவாத வெறுப்புணர்வு தீ பற்றி எரிந்திட திட்டமிட்டு உருவாக்கப்படுவதாகும். இது அழிவுகரமானதும் சிறுபான்மைச் சமூகத்தை அச்சுறுத்துவதற்கான முயற்சியும் ஆகும்.
ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான கோரிக்கைகளுக்கு அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருக்கின்றனர். அரசியலமைப்புச் சட்டம் வழங்கிவரும் உரிமைகளைப் பறிப்பதில் இவர்களும் இந்துத்துவ தீவிரவாதிகளின் கூட்டாளிகள் ஆவர்.
கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரிகள், இதுபோன்ற வகுப்புவாத மற்றும் பெண்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவமானகரமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் காவி வன்முறையாளர்கள் விடுக்கும் அச்சுறுத்தல்களின் நேரடி விளைவாகும்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களையும், அடிப்படை உரிமைகளையும் உயர்த்திப் பிடிப்பதற்கு பதிலாக, இந்நிறுவனங்களின் நிர்வாகத்தார், பிராமணீய சக்திகளால் உருவாக்கப்பட்ட செயல்திட்டத்தில் விருப்பத்துடன் பங்கேற்பது வருத்தமளிப்பதாக உள்ளது.
பெண்கள் தங்களின் விருப்பப்படி ஆடைகளைத் தேர்வு செய்வதற்கான உரிமையை நிலைநிறுத்தத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில், இஸ்லாமிய பெண்கள் ஆடைகளைத் தேர்வு செய்வதில், கட்டாயப்படுத்தப்படுவதும், அதன் காரணமாக கல்வி மறுக்கப்படுவதும், மிரட்டப்படுவதும் வேதனை அளிக்கிறது. இது பெரும்பான்மைச் சமூகத்தவரின் அழகியல் சிந்தனையை, சிறுபான்மைச் சமூகத்தவர் மீது திணிக்கும் கலாச்சார கட்டளையின் வடிவமாகும்.
தண்டிக்கப்படுவோம் என்ற அச்ச உணர்வின்றி, அவரவர் விருப்பப்படி எந்த ஒரு மதத்தையும் பின்பற்றுவதற்கும், ஒழுகுவதற்குமான உரிமை குடிமக்கள் அனைவருக்கும் உண்டு. உடல் தோற்றத்தை மற்றும் ஆடைகளைத் தேர்வு செய்யும் உரிமையை முன்னிறுத்தி பெண்களைக் கண்டிப்பதும், தண்டிப்பதும் சமத்துவம் மற்றும் முன்னேற்றத்திற்கான பாதையைச் சீர்குலைக்கிறது.
ஹிஜாப் அணியும் பெண்கள் தலிபான்கள் அல்லர் என்பதை உணரவேண்டும். தலிபான்களைப் போல இந்துத்துவ அடிப்படைவாத சக்திகளும் பெண் கல்விக்கு எதிரானவர்களாக இருப்பது நகைப்புக்குரியது ஆகும்.
ஒரு பெண்ணின் உடல் தோற்றம் மற்றும் ஆடை அணிதல் ஆகியவற்றை முறைப்படுத்துவதற்கான உரிமை பாஜக – ஆர்எஸ்எஸ், தலிபான் அல்லது எந்த ஒரு ஆணாதிக்க அமைப்பிற்கும் இல்லை என்பதை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்த விழைகிறது. இது இந்நாட்டுப் பெண்களின் சமத்துவம் மற்றும் நீதிக்கான உரிமைகளைப் பறிப்பதற்கு ஒப்பாகும்.
நமது அரசியலமைப்புச் சட்டம் பாலின சமத்துவத்தை உத்தரவாதப்படுத்துகிறது. பெண்களுக்கு அரசியலமைப்பு சட்ட உரிமைகளை மறுப்பதும் ஒரு வன்முறை ஆகும்.
வன்முறையைத் தூண்டக்கூடிய அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம், பெண்களின் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுப்பதோடு, பாகுபாடு கொண்ட, சமத்துவமற்ற, பெண்களுக்கு எதிரான வெறுப்புணர்வுமிக்க மற்றும் வகுப்புவாத தன்மையுடைய கல்விமுறையைப் பாஜக ஊக்கப்படுத்துகிறது.
தங்களின் கல்வி மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்களுக்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அதன் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆடைகளைத் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கும் பெண்களின் உரிமையை உறுதிப்படுத்திட அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எவ்வித பாகுபாடுமின்றி வன்முறை வெறியாட்டங்களின் பாதிப்புகள் இன்றி இஸ்லாமிய பெண்கள் தங்கள் படிப்பைத் தொடர்ந்திட உகந்த சூழலை, தேச நலன் கருதி உருவாக்க வேண்டியது அரசியலமைப்புச் சட்டப்படியான கடமையாகும் என்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தேசிய தலைவர் அருணாராய், தேசிய பொதுச் செயலாளர் ஆணி ராஜா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.