மாநில அரசின் மசோதாவை திருப்பி அனுப்பிய, மக்கள் உணர்வை நிராகரித்த ஆளுநர் நடவடிக்கைக்கு கண்டனம்
மக்கள் உணர்வை நிராகரித்த ஆளுநர் நடவடிக்கைக்கு கண்டனம்!
பாஜக ஒன்றிய அரசு 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய “நீட்” தேர்வு முறைக்கு ஆரம்ப நிலையில் இருந்தே தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் பயின்று வரும் அடித்தட்டு மக்களின் மருத்துவக் கல்வி உரிமையை மறுத்து நிராகரிக்கும் “நீட்” தேசிய திறன் மற்றும் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அரியலூர் மாணவி அனிதா தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதும், அந்த துயர நிலை தொடர்வதும் நெஞ்சை சுடும் உண்மையாகும். “நீட்” தேர்வு முறையை கைவிட்டு, பழைய நடைமுறையை பின்பற்றி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தனிச்சட்டம் நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்து, சட்டமன்றப் பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை தற்போது ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிரானது. ஆளுநரின் இந்த அணுகுமுறை ஜனநாயக வழிமுறைகளில், சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமூக நீதி கேட்கும் மக்களை ஆத்திரமூட்டும் செயலாகும்.
கூட்டாட்சி கோட்பாட்டை மதித்து நடக்கும் தமிழ்நாடு அரசின் மீது மோதல் போக்கை உருவாக்கும் ஆளுநரின் அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில சொற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
நீட் தேர்வுக்கு பதிலாக தமிழ்நாட்டு மாணவர்கள் நலனையும், சமூகநீதி கொள்கை நடைமுறையினையும் உறுதி செய்யும் முறையில் தமிழ்நாடு அரசு மீண்டும் மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறது.