தமிழகம்

நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட்களுக்கு வெண்ணெய்; உழைக்கும் மக்களுக்கு சுண்ணாம்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஒன்றிய அரசின் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2022 – 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.

நாட்டு மக்கள் தொகையில் மேல்தட்டில் உள்ள 10 சதவிதத்தினர் நாட்டின் மொத்த வருமானத்தில் 57 சதவிதத்தை பெற்று வரும் நிலையில் அடித்தட்டில் உள்ள 50 சதவிதத்தினர் (அதாவது 65 கோடி மக்கள்) 8 சதவிதம் மட்டுமே பெறுவதை அண்மையில் சர்வதேச ஆய்வறிக்கை வெளிப்படுத்தியது. சமூக கொந்தளிப்பை உருவாக்கும் இந்த ஏற்றத்தாழ்வை சமப்படுத்துவதற்கான முயற்சியில் நிதிநிலை அறிக்கை ஈடுபடவில்லை. 142 கோடீஸ்வரர்களிடம் குவிந்து வரும் செல்வக்குவிப்பை மேலும் பெருக்குவதில் நிதிநிலை அறிக்கை அக்கறைகாட்டுகிறது. அடித்தட்டு உழைக்கும் மக்களை வஞ்சித்து விட்டது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் பாஜக ஒன்றிய அரசு செய்த குளறுபடியால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளன. இவைகளை மீட்க கடனுதவி அறிவிப்பு மட்டும் பயன் தராது.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பதை சட்டபூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஸ்டார்ட் அப் – தொழில்கள் முடங்கி நிற்கின்றன. அவைகளுக்கு மேலும் ஐந்தாண்டுகள் ஊக்குவிப்பு உதவி தேவை எனக் கோருவதை நிதிநிலை அறிக்கை கவனத்தில் கொள்ளவில்லை.

இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசுகளுக்கு ஆதரவு கரம் நீட்டுவதில் பாகுபாடு காட்டிவரும் ஒன்றிய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

பெரும் நிறுவனங்களின் கூடுதல் வரி ஐந்து சதவிதம் குறைக்கப்பட்டுள்ளது. சமூக உற்பத்தியில் உருவாகும் சொத்துக்களை குவித்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்களுக்கு வெண்ணெய் தடவும் நிதிநிலை அறிக்கை, வேலையில்லாமலும் வருமானம் இழந்தும் கதறி அழுதுவரும் ஏழை மக்களின் கண்களில் சுண்ணாம்பு வைத்து தேய்த்துள்ளது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு மாநில செயற்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button