இந்தியா

பிப்ரவரி 23, 24 ல் நடைபெறவிருந்த அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் மார்ச் மாதம் 28, 29 ஆம் தேதிகளுக்கு மாற்றம் – மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு.

பிப்ரவரி 23, 24 ல் நடைபெறவிருந்த அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் மார்ச் மாதம் 28, 29 ஆம் தேதிக்கு மாற்றம் – மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவிப்பு.

மத்திய தொழிற்சங்கங்களுடைய கூட்டமைப்பின் இணையவழி கூட்டம் 28.01.2022 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளைக் கண்டித்து பிப்ரவரி 23, 24 ல் நடைபெறவிருந்த அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை மார்ச் 28, 29 ஆம் தேதிகளுக்கு மாற்றிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக, வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான தயாரிப்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொள்வதில் பெரும் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகப் பல மாநிலங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.

மேலும், பிப்ரவரி 23 ஆம் நாள் உத்தர பிரதேசத்தில் முதல் கட்ட சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையும், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற இருப்பதையும் கூட்டமைப்பு கவனத்தில் கொண்டு ஆலோசித்தது. அதன் அடிப்படையில், அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை மார்ச் மாதம் 28, 29 ஆம் தேதிகளுக்கு மாற்றிட முடிவு செய்யப்பட்டது. மேற்கண்ட தேதிகளில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அழிவுகரமான, தேச விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஆட்சியாளர்களிடம் இருந்து தேசத்தையும், மக்களையும் பாதுகாத்திட மார்ச் 28 – 29 நடைபெறவுள்ள அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் வெற்றியடையத் தயாரிப்பு பணிகளைத் தீவிரமாகத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு தொழிலாளர்களையும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவி அழைக்கிறது.

குறிப்பாக, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் பா.ஜ.க வைத் தோற்கடித்திட தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யுமாறு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

இவ்வாறு மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button