நியூ ஏஜ் எஸ் துரைராஜ் மறைவு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல்
மூத்த பத்திரிகையாளர் நியூ ஏஜ் எஸ்.துரைராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் சார்பில் இரா.முத்தரசன் வெளியிட்டடுள்ள இரங்கள் செய்தியில்,
சமூக அக்கறை கொண்ட பத்திரிகையாளர் நியூ ஏஜ் எஸ்.துரைராஜ் (70) இன்று (15.01 20221) திருச்சியில் உள்ள அவரது மகள் வீட்டில் மதியம் 12. 45 மணிக்கு காலமானார் என்ற துயரச் செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றோம்.
திருச்சி பொன்மலை ரயில் தொழிலாளி குடும்பத்தில் 1951 ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிறந்தவர். இடதுசாரி இயக்கத்திலும், தொழிற்சங்க இயக்கத்திலும் பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள் செலுத்தியுள்ள பங்கு மகத்தானது.
உரிமைப் போராட்டக் களமாக திழந்த பொன்மலையில் பிறந்த எஸ். துரைராஜ் சிறுவயதிலேயே இடதுசாரி சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர். போராட்டக் குணம் பெற்றவர். பள்ளிக் கல்வி முடித்து தாவரவியலில் இளங்கலை பட்டமும், தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
கல்லூரிக் கல்வி போது அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து செயல்பட தொடங்கியவர். இறுதி மூச்சிருந்த வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் தொடர்பில் இருந்தவர்.
1970களில் புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சென்டிரல் நியூஸ் ஏஜென்சியின் சென்னை செய்தியாளர் களப் பணியை துவக்கியவர். நியூ ஏஜ், பேட்ரியாட், லிங்க் போன்ற ஆங்கில வார இதழ்களின் சென்னை செய்தியாளராக பரந்துபட்ட அளவில் செயல்பட்டவர்.
நியூஸ் டூடே, தி இந்து ஆங்கில தினசரிகளில் முதுநிலை செய்தியாளராக பணியாற்றினார். பின்னர், “பிரண்ட் லைன்” ஆங்கில சஞ்சிகையின் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்தார்.
நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான ஊடகப் பணியில் தேசியத் தலைவர்களோடும், மாநில அரசியல் கட்சித் தலைவர்களோடும் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.
தோழர் எஸ். துரைராஜ் எழுதிய செய்திக் கட்டுரைகள் உழைக்கும் மக்களின் உணர்வை பிரதிபலிக்கும். நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குரல் கொடுக்கும். சாதி, மதவெறி சக்திகளுக்கு எதிரான போர்க்குரலாக ஒலிக்கும். அவரது இழப்பு எளிதில் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த எஸ். துரைராஜ், சிகிச்சை பலனின்றி வீடு திரும்பிய நிலையில் காலமானார்.
நாளை (16.01.2022) ஞாயிறு காலை 10 மணிக்கு, 786, 16, குறுக்குத்தெரு, வாசன் வேலி, வயலூர் ரோடு, திருச்சி 620 102 என்ற முகவரியில் உள்ள அவரது மகள் வீட்டில் இருந்து இறுதி நிகழ்வுகள் தொடங்கும். ஒ.எம்.ஆர். மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தோழர் எஸ். துரைராஜ் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.