தலித் பெண் தலைவருக்கு எதிராக துணைத் தலைவர் சாதிய வன்மம்!
சிதம்பரம், ஜன.11- காட்டுமன்னார்கோவில் அருகே திருமுட்டம் ஒன்றியத்திற்குட்பட்டது ஸ்ரீபுத்தூர் ஊராட்சி மன்றம். இதன் தலைவராக தலித் சமூகத்தைச் சார்ந்த கலைவாணி வெற்றி பெற்றார். இவரது கணவர் அர்சுணன். கணவன்-மனைவி இருவரும் திமுகவில் உள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளரான உத்தமராசா ஊராசிமன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் அதிமுக முக்கிய நிர்வாகியுமான பழனிவேலும், உத்தமராசாவும் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள். ஊராட்சிமன்றத் தலைவர் தலித் என்பதால் சாதிய வன்மனத்துடன் அருகே அமர மறுக்கிறார்கள். ஊராட்சிமன்ற வளர்ச்சி பணிகளுக்கு ஒத்து ழைப்பும் கொடுப்பதில்லை. ஊராட்சிமன்றக் கூட்டங்களில் சாதிய உடல்மொழியுடனும், வன்மத்துடனும் நடந்துக்கெள்கின்றனர். ஊராட்சியில் எந்த வேலையும் தலைவர் செய்யக் கூடாது. தாங்கள் செய்யும் வேலைகள் குறித்து எந்த கேள்வியும் கேட்கக் கூடாது. நாங்கள் சொல்லும் இடத்தில் எல்லாம் கையெழுத்துபோட வேண்டும் என்று பொது இடங்களில் சாதி ரீதியாக ஒருமையில் பேசுகிறார்கள்.
இவ்வாறு குற்றச்சாட்டுகளை அடுக்கி கொண்டே செல்கிறார் பெண் தலித் ஊராட்சி தலைவர் கலைவாணி. ஊராட்சிமன்ற வளர்ச்சிக்காக சிறிது காலம் அமைதியாக இருந்துள்ளார். இதனால், ஊராட்சி மன்றத்தின் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கேக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் இருப்பது அவமானமடாக உணர்வதாக அவர் கூறுகிறார்.