மக்களுக்காக நின்று போராடுகிறது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
எஸ்.சுதாகர் ரெட்டி
1925 டிசம்பர் 26 கான்பூரில் கூடி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தனர். கட்சி நிறுவப்பட்ட தொடக்க நாள் முதலாக கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்தது. நீண்ட காலம் சிறை தண்டனை பெற்ற பல தலைவர்களில் சிலர் பத்தாண்டுகளுக்கு மேல் ‘வெஞ்சிறையில் வீழ்ந்தும் செக்கடியில் நொந்தும்’ கிடந்தனர்.
ஒரு வழக்கறிஞராகப் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் வழக்குகளில் வாதாடினார். அடக்குமுறைகளைத் தாங்கி சிபிஐ நாட்டின் பல பகுதிகளில் மெல்ல, உறுதியாகப் பரவியது. பல கம்யூனிஸ்ட்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சோஷலிசக் காங்கிரஸ்காரர்களாகப் பணியாற்றினர். அவர்கள் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
பிரிட்டிஷ் காலனியத்தை எதிர்ப்பதில் சிபிஐ காங்கிரஸ் கட்சியுடன் ஒத்துழைத்தது. ‘பூரண சுயராஜ்யம்’ கோரிக்கையை முதலில் எழுப்பியர்கள் கம்யூனிஸ்ட்களே. மற்றவர்கள் பிரிட்டிஷ் பேரரசுக்கு உட்பட டொமினியன் அந்தஸ்து, சுய ஆட்சி என்று மட்டும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
சமூகத்தின் பல்வேறு பகுதி மக்கள் காலனியத்தைத் தீர்மானகரமாக முறியடிக்க மேலும் தீவிரமான துணிச்சலான போராட்டங்களை விரும்பினர். இந்த நேரத்தில் தேசிய விடுதலை இயக்கத்தின் போற்றுதலுக்குரிய தலைவர் மகாத்மா காந்தியும் தீவிரமான சத்யாகிரகத்துக்கு அழைப்பு விடுத்தார். போராட்ட வீச்சு அதிகரித்த வேளையில் சௌரி சௌராவில் போராட்டக்காரர்கள் போலீஸ் நிலையத்தைக் கோபத்துடன் தீயிட்டு எரித்த வன்முறையைக் காரணம் காட்டி காந்திஜி சத்யாகிரகத்தை ரத்து செய்தார். இதனால் மக்கள் மத்தியில் ஏமாற்றம், நம்பிக்கையின்மை, செய்வதறியாத கோபம் ஏற்பட்டது.
பல நெஞ்சுரம் மிக்க இளைஞர்கள், கற்றறிவாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். 1936ல் சுதந்திரமாகச் செயல்படும் வெகுஜன அமைப்புகளைக் கட்ட சிபிஐ முன்முயற்சி எடுத்தது. மாணவர் பெருமன்றம், விவசாயிகள் சங்கம், இப்டா போன்ற அமைப்புக்களை நிறுவி லட்சக் கணக்கான மக்கள் விடுதலை இயக்கத்தில் திரட்டப்பட்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் பல மாகாணங்களில் ஆல்போல் தழைத்துப் பரவியது.
கட்சியின் வளர்ச்சியோடு கம்யூனிஸ்ட் எதிர்ப்பு பிரச்சாரமும் காங்கிரஸ்காரர்கள் மற்றும் வேறு சிலரால் நடத்தப்பட்டது. கம்யூனிஸ்ட்களை ரஷ்யாவின் ஏஜெண்டுகள் எனப் பழிதூற்றினர். இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளித்த சிபிஐ அன்றைய பொதுச்செயலாளர் பிசி ஜோஷி அவை தவறானவை, அடிப்படையற்றவை என்று விளக்கினார். மேலும் கட்சியின் கணக்கு வழக்குகளை -கட்சி வசூல் செய்தது மற்றும் செலவழித்தது அனைத்திற்குமான கணக்குகளை – மகாத்மா காந்திக்கு அனுப்பிச் சரி பார்க்கலாம் என வெளிப்படையாக வாய்ப்பு வழங்கினார்.
மகாத்மா காந்திக்கும் ஜோஷிக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து அந்த நாட்களிலிலிருந்தே மிகவும் புகழ்பெற்றவை. இந்திய தேசியக் காங்கிரசின் வழிமுறைகள் மற்றும் அதன் தலைவர் மகாத்மா காந்தியுடன் சிபிஐ முரண்பட்டாலும் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் அவருக்கு மிக உயர்ந்தபட்ச மரியாதையை அளித்தனர். குறிப்பிட வேண்டிய ஒரு முக்கிய செய்தி, மகாத்மா காந்தியைத் “தேசத் தந்தை” என முதன் முதலில் அழைத்தவர் தோழர் ஜோஷியே.
மகாத்மா காந்தியும் இந்திய தேசியக் காங்கிரசும் நிலப்பிரபுத்துவ அரசர்கள், நவாப்கள் ஆட்சி செய்த சமஸ்தானங்களில் எந்தப் போராட்ட இயக்கங்களையும் நடத்துவதில்லை என முடிவு செய்தனர்; ஆனால் அப்பிராந்தியங்களில்தான் காலனிய இந்தியாவைவிட மிக மோசமாக இருந்தன. அங்கே சட்ட ஒழுங்கு ஆட்சி முறை என்பதே இல்லாமல் பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்ட மக்கள், சிவில் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு, கல்வி வாய்ப்பின்றி நிலப்பிரபுத்துவ அடக்குமுறை கொடுமைகளை அனுபவித்து வந்தனர். உதாரணத்திற்கு நம் நாட்டின் மத்திய பகுதியில் பெரும் நிலப்பரப்பை ஆண்ட நிஜாம், இரக்கமற்று மக்களைக் கொடுமையான சுரண்டலுக்கு ஆட்படுத்தி உலகின் அதி பணக்காரர் ஆனார் – அவர் ஆட்சி செய்த மக்களை நாட்டின் ஏழை மக்களில் மிக மோசமான பராரிகளாக்கினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, நிஜாம் அரசின் தெலுங்கானாவிலும்; திருவிதாங்கூர் – கொச்சி அரசின் புன்னப்புரா வயலாரிலும் சரித்திரப் புகழ்மிக்க ஆயுதம் தாங்கிய போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியது. தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தில் 4500க்கும் அதிகமான மக்கள் உயிர்த் தியாகம் செய்தனர், புன்னப்புரா வயலாரில் பல நூறு மக்கள் கொல்லப்பட்டனர். வீரம் செறிந்த இப்போராட்டங்கள் நிலப்பிரபுத்துவ அரசுகளின் அடித்தளத்தை அசைத்தது, அவற்றை மண்ணில் வீழ்த்தியது.
இப்போராட்ட இயக்கங்கள் மூலமாகத்தான் விடுதலைபெற்ற தேசத்தின் நிகழ்ச்சி நிரலில் நிலச் சீர்திருத்தம் முன்னுரிமை பெற்றது. தொழிலாளர்களின் போராட்டங்கள் அவர்களுக்குப் பணி பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட பணிநிலைமைகளைப் பெற்றுத் தந்தன; வேளாண் மக்களின் போராட்டங்கள் விவசாயிகளுக்கு நாட்டில் லாபகரமான விலை கிடைக்கச் செய்தது. ‘உழுபவனுக்கே நிலம் உரிமை’ என்பது அனைத்து அரசியல் கட்சிகளின் பொது முழக்கமாயிற்று.
பம்பாயில் ராயல் இந்தியக் கப்பற்படையினரின் எழுச்சியின்போது அவர்கள் தங்கள் போர்க் கப்பல்களில் இந்திய தேசியக் காங்கிரஸ், முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகளை ஒருசேரப் பறக்கவிட்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை இயக்கத்தின் முக்கிய அங்கம் என்பதை அங்கீகரித்துப் போர் வீரர்கள் செலுத்திய மரியாதை அது.
அதேபோல தீண்டாமை, சாதி பாகுபாடு மற்றும் சுரண்டலுக்கு எதிரான பல வரலாற்றுப் புகழ்மிக்கப் போராட்டங்களைச் சிபிஐ தலைமையேற்று நடத்தியது. விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் சிபிஐ முக்கிய எதிர்கட்சியானது;
கோவா மற்றும் பாண்டிச்சேரி விடுதலை போராட்டங்களில் கேந்திரமான முக்கிய பங்கு வகித்தது. பாண்டிச்சேரியில் நடைபெற்ற தேர்தலில் சிபிஐ தலைவர் சுப்பையா பிரெஞ்ச் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பாண்டிச்சேரி விடுதலைக்காகப் போராடினார்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ அதன் செல்வாக்கு சிலவற்றை இழந்தது உண்மைதான். கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவு, 1964ல் சிபிஐ(எம்) உருவெடுத்தது, வளரும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குப் பலத்த அடியானது. அந்தத் தருணத்தில்தான் மக்கள் இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சிச் செயல்பாட்டில் நம்பிக்கை இழந்து வேறொரு மாற்றைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.
1967ல் பல காங்கிரஸ் அல்லாத அரசுகள் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் காங்கிரசின் தனிப் பெரும்பான்மை குறைந்தது. மேற்கு வங்கம், கேரளா, பீகார் போன்ற சில மாநிலங்களில் சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) இரண்டும் ஒருங்கிணைந்து இழந்த பகுதிகள் சிலவற்றில் செல்வாக்கை மீண்டும் திரும்பக் கைப்பற்றியது;
இருப்பினும் நியாயமாக நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக கம்யூனிஸ்ட் இயக்கம் பெற்றிருக்க வேண்டிய இடத்தைத் திரும்பப் பெற இயலவில்லை. மாநிலக் கட்சிகளின் வளர்ச்சியும் சவாலானது; அவை மெல்ல மெல்ல பஞ்சாப், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் எதிர்கட்சியாகின.
சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு பல ஆதரவாளர்கள், நண்பர்கள் மற்றும் அறிவாளர்கள் நம்பிக்கை இழந்து சோஷலிசத்தின்பால் கோட்பாட்டு ரீதியாக நம்பிக்கை இழக்கத் தலைப்பட்டனர். பாராளுமன்ற ஜனநாயக முறையில் மாநிலக் கட்சிகள் மற்றும் பாஜக அல்லாத கட்சிகளுடன் தேர்தல்களில் தொகுதி உடன்பாடு தவிர்க்க முடியாததாகி விட்டது.
சில இடங்களை நாம் அடைந்தாலும், நமது மக்களை அரசியல்படுத்துவதில் நாம் தோல்வியடைந்த காரணத்தால் பல இடங்களை இழந்தோம். கட்சி அணிகள் பிற பூர்ஷ்வா கட்சிகள் பால் மென்மையான போக்கைக் கடைபிடிக்கத் தொடங்கி, மக்கள் பிரச்சனைகளிலும் மெல்ல வர்க்க சீற்றத்தையும் மென்மைப்படுத்தத் தலைப்பட்டனர்.
பாராளுமன்ற ஜனநாயகத்தின் பாதை என்பதன் பொருள், மக்களின் சார்பாகக் குரல் எழுப்பி, அரசின் தவறான கொள்கைகளை அம்பலப்படுத்த இடங்களைப் பெறுவதற்காகவும்; மக்களின் பிரச்சனைகளுக்காக சட்டமன்றங்களுக்கு வெளியே சக்திவாய்ந்த பெருந்திரள் போராட்டங்களை நடத்துவதற்காகவும் என்பதே. ஆனால் இத்தகைய போராட்டங்கள் ஒப்பிட்டளவில் குறைந்து கொண்டேபோய் அதன் விளைவாய் கட்சிக்குப் பரந்த ஆதரவாளர்கள் மற்றும் மக்களுடன் இருந்த தொடர்பு குறைந்தது. இவற்றைப் பற்றி கட்சியின் அனைத்து அமைப்பு மட்டங்களிலும் பரிசீலனை செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் அனைத்து சவால்களையும் மீறி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டின் கேந்திரமான பிரிவுகளான சுரங்கங்கள், வங்கிகள், போக்குவரத்து, ஏர்வேஸ், தொலைத் தொடர்பு, எண்ணெய், காப்பீடு, ஸ்டீல் மற்றும் முக்கிய ஆலைத் தொழில்கள் முதலானவற்றைத் தேசியமயமாக்க அரசை நிர்பந்திப்பதில் வெற்றிகரமாகச் சாதித்து நாட்டை சுய சார்புடையதாக மாற்றியது. இதன் பயனாய், சர்வதேச அளவில் பொருளாதாரப் பின்னடைவுகள் பலமுறை ஏற்பட்டபோதும் நமது நாடு பாதிக்கப்படாமல் காப்பாற்ற உதவியது.
1957ல் உலகிலேயே இரண்டாவது முறையாக ஜனநாயக முறையில் கேரளாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு அமைக்கப்பட்டு சிபிஐ ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தது. 1996ல் சிபிஐ தலைவர் இந்திரஜித் குப்தா, முதன் முறையாக ஒரு கம்யூனிஸ்ட், ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சராகவும், சதுரானன் மிஸ்ரா ஒன்றிய விவசாயத் துறை அமைச்சராகவும் பொறுப்பு ஏற்றனர். அமைச்சராக இந்திரஜித் குப்தா முன்மொழிந்த தேர்தல் சீர்திருத்த அறிக்கை நீண்டகாலக் கண்ணோட்டம் உடையது; பயிர் காப்பீடு திட்டம் நாட்டில் முதன் முறையாக விவசாயத் துறை அமைச்சராக சதுரானன் மிஸ்ரா அறிமுகப்படுத்தியது.
தொழிலாளி வர்க்கம் மற்றும் வேளாண் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட மன்றங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சிபிஐ போராடியது. 1971ல் நாடு தழுவிய அளவில் தீவிரமாக நடத்தப்பட்ட நிலங்களைக் கைப்பற்றும் இயக்கம், நிலமில்லாத விவசாயிகளுக்கு உபரி நிலங்களைப் பகிர்ந்தளிக்க வழிவகுத்தது. தற்போது கார்ப்ரேட்டுகள் மற்றும் இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் தாக்குதலில் சிபிஐ மற்றும் இடதுசாரி இயக்கம் கடினமான நிலையைச் சந்தித்து வருகின்றன.
கடந்த ஏழாண்டு நரேந்திரமோடி ஆட்சியில் சிறுபான்மையினர்பால் சகிப்பின்மை, பசு பாதுகாப்புப் பெயரில் கொலைகள், சிந்தனையாளர் மற்றும் பத்திரிக்கையாளர்களைக் கொலை செய்வது, அரசுக்கு எதிராகப் பேசுபவர்களைச் சிறையில் தள்ளுவது, நியாயமற்ற மோசமான வழிகள் மூலமாக வெகுஜன ஊடகங்களை முழுமையாகத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவது என்பனவற்றையே நாடு சந்திக்கிறது.
ஒவ்வொரு நாளும் அரசியலமைப்பு மற்றும் அதன் விழுமியங்களைச் சீர்குலைத்து பாழ்படுத்தப்படுகின்றன. நீதிமன்றம், தேர்தல் ஆணையம், புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை போன்ற அரசியல் சட்டப்படியான அமைப்புகள் அரசின் கூண்டுக் கிளியாய் — மாறுகின்றன.
அமலாக்கத்துறை, சிபிஐ புலனாய்வு மற்றும் வருமானவரித் துறைகளைப் பயன்படுத்தி எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் குறிவைக்கப்படுகின்றன. எதிர்கட்சிகள், அறிவார்ந்த சான்றோர்கள், பத்திரிக்கையாளர்கள் முதலானவர்களைக் குறிவைத்துத் தாக்க நுட்பமான விரிவான உளவுத் தொழில்நுட்பங்கள் இரகசியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அரசை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு, தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அவர்களில் எவர் மீதும் ஒரு வழக்குகூட இதுவரை நிரூபிக்கப்படவில்லை. பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களுக்குக் கல்விப்புலம் சார்ந்த சுதந்திரம் மறுக்கப்படுகிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அவசர கோலத்தில் அமலாக்கப்பட்ட ஜிஎஸ்டி பொருளாதாரப் பேரழிவுக்கு வழி வகுத்தது; நாட்டின் பெரும்பான்மை வேலைவாய்ப்பு வழங்கிய சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் நிறுவனங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. கோவிட் 19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பரிதாபகரமாகத் தோல்வியடைந்தது மட்டுமல்ல முன்யோசனையற்ற அதிரடி ஊரடங்கு உத்தரவால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழ்விழந்து நிர்கதியாகி சாலைகளில் கால்நடையாக பயணித்தனர். நாட்டில் ஒவ்வொரு சிறு குடும்பமும் பாதிக்கப்பட்டு பல ஆயிரக்கணக்கில் உயிர் இழந்தனர்.
ஓராண்டில் இந்திய நாட்டில் உற்பத்தியான லாபங்களில் 75 சதவீதம் வெறும் 19 கார்ப்பரேட்டுகளின் கைகளில் சேர்ந்தது. உண்மையிலிருந்தே அரசு தனது கார்ப்பரேட் மாஸ்டர்கள் சிலர் மட்டுமே பலன் அடைவதில் முழு கவத்தையும் செலுத்தியது வெளிப்படுகிறது. கார்ப்பரேட் எஜமானர்களிடம் இந்த அரசு அடிமைப்பட்டுக் கிடக்கிறது.
இந்தக் கட்சியின் அரசு அமைகிறது என்ற செய்தி வந்தவுடன் – பங்குச் சந்தையில் ஒரு கம்பெனி மட்டும் ரூ20ஆயிரம் கோடிகள் மதிப்பில் லாபம் அடைந்தது என்பதும் வெளிப்படுத்துகிறது. வகைதொகையற்ற தனியார்மயப்படுதல், நாட்டின் பொருளாதாரத்தைப் பின்னடைவில் தள்ளி, இத்தகைய சில கார்ப்பரேட்டுகள் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெறுகிறது. ஆனால் பிரகாசமான நம்பிக்கை கீற்றுகளும் உள்ளன. தேசம் முழுவதுமுள்ள தொழிலாளர் வர்க்கம், தொழிலாளர் விரோதமான சட்டங்களையும், தனியார்மயப்படுத்தலையும் எதிர்த்து நடத்திய பொது வேலைநிறுத்தங்களில் 20லிருந்து 25 கோடி தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். வங்கி ஊழியர்கள் போராடுகின்றனர். மாணவர்களும், இளைஞர்களும் கிளர்ச்சியில். ஓராண்டைத் தாண்டி வேளாண்குடி பெருமக்கள் விவசாயிகளுக்கு எதிரான மூன்று கருப்புச் சட்டங்கள் ரத்தாகும்வரைப் போராடினர். ஏழைகளுக்கு எதிரான இந்த அரசின் அபாயம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே நாட்டில் வளர்ந்து வருகிறது.
பிற்போக்கான சட்டங்களை எதிர்த்து முறியடிக்க ஒவ்வொருவரையும் போராட்டங்களில் ஒன்றிணைக்கவும், மேலும் நியாயமான சமத்துவச் சமுதாயப் பாதையில் நாட்டைக் கொண்டு செல்லவும் இந்த விழிப்புணர்வை மேலும் பரப்புவதற்கான கடமைப் பொறுப்பு ஒவ்வொரு சிபிஐ தோழரையும் சேர்ந்தது.
மேலும் வலிமையான கம்யூனிஸ்ட் கட்சியை நாம் கட்ட வேண்டும்! பாசிசச் சக்திகளின் தாக்குதல்களைத் திருப்பித் தாக்கக் கட்சி உறுப்பினர்களைக் கொள்கை ரீதியில் அரசியல் ரீதியாக பயிற்றுவிக்க வேண்டும்! மேலும் வலிமையான இடதுசாரி மற்றும் இடது ஜனநாயக மதசார்பற்ற சக்திகளின் ஒற்றுமையை நாம் கட்டி மேம்படுத்த வேண்டும்!
மக்கள் விரோத, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான அரசைத் தோற்கடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்! இதைவிடக் கடுமையான சூழல்களில் செயல்பட்டிருக்கிறோம். பிரிட்டிஷ் காலனியத்தை நாம் தோற்கடித்திருக்கிறோம், கொடூரமான நிலப்பிரபுத்துவ அரசர்களை வென்று நிலப்பிரபுத்துவ முதுகெலும்பை உடைத்து நொறுக்கியிருக்கிறோம். எதையும் எதிர்த்து நின்று போராடி முறியடிக்கும் வரலாறு நமக்கு உண்டு.
சந்தேகமில்லாமல் கம்யூனிசம் வெல்லப் போகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு தின இந்த ஆண்டு விழா நாளில் நாம் – நமது கட்சியை, நமது மக்களை, நமது அரசியலமைப்புச் சட்டத்தை மற்றும் நமது மதசார்பற்ற ஜனநாயகத்தையும் பாதுகாக்க — உறுதி ஏற்போம்!
தமிழில் : நீலகண்டன்