மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் நீட் தேர்வை திணித்திருப்பது மாநில உரிமைகளுக்கும் சமூகநீதிக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் நேர் எதிரானது – டி இராமச்சந்திரன் எம் எல் ஏ

தோழர் டி இராமச்சந்திரன் எம் எல் ஏ முகநூல் பதிவில் இருந்து
இன்று 08.01.2022 – சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துகளை பதிவு செய்தேன்.
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு, நீட் மட்டுமல்ல எந்த ஒரு உயர் கல்விக்கும் நுழைவு தேர்வு கூடாது என்பதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.தமிழ்நாடு சமூகநீதியின் பிறப்பிடமாக திகழ்ந்து வருகிறது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வில் ஒன்றிய அரசு நீட் தேர்வை திணித்திருப்பதால் தமிழ்நாட்டில் கிராமப்புற ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவு சிதைந்து போகிறது. ஆகவே நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த 13.09.2021 அன்று தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டுமென்று சட்ட முன் வடிவை கொண்டுவந்தார். அதை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு கடந்த நான்கு மாதங்களாக அனுப்பாமல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியும் கிடப்பில் போட்டுருப்பது தமிழக மக்களையும் அரசியல் சாசன சட்டத்தையும் அவமதிக்கும் செயல்.
தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சரை சந்திக்க காத்திருந்தும் அவர்களை பார்க்க அனுமதி வழங்காமல் இருப்பது தமிழக மக்களையும் மாணவர்களையும் அவமதிக்கும் செயல் இது மிகவும் கண்டனத்துக்குரியது.மாநில அரசால் சட்டமன்றத்தில் இயற்றப்படுகின்ற சட்ட முன்வடிவுகள் மீது குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மாநில ஆளுநர்கள் முடிவு எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சிம்லாவில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் நம்முடைய சபாநாயகர் வலியுறுத்தியது மாநில உரிமைகளுக்கு குரல் கொடுத்திருக்கிறார். ஒன்றிய அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் நீட் தேர்வை திணித்திருப்பது மாநில உரிமைகளுக்கும் சமூகநீதிக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் நேர் எதிரானது.
ஆகவே நீட் தேர்வில் இருந்து சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் அனைத்து மாநில முதல்வர்களையும் நீட்டுக்கு எதிராக தங்கள் தலைமையில் அணி திரட்ட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து தங்கள் தலைமையில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமூக நீதியை நிலைநாட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுக்கின்ற அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும்.
நன்றி, வணக்கம்