அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கிட உச்சநீதிமன்றம் உத்தரவு – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்பு
அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தீர்ப்பை சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்கிறது.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் , ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி:
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய உயர்கல்வி நிறுவனங்களில்,கல்வியில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட ஏதுவாக 93 வது அரசியல் சட்டத்திருத்தம் 2005 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அதன் படி பிரிவு 15 ல் உட்பிரிவு 5 சேர்க்கப்பட்டது. இந்த அரசியல் சட்டத்திருத்தத்திற்கு 2006 ஜனவரியில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.அதைத் தொடர்ந்து இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டம் 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த இட ஒதுக்கீடு செல்லும் , 93 வது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அதைத் தொடர்ந்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் ,கல்வியில் படிப்படியாக 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் படி, 2009 ஆம் கல்வி ஆண்டு முதற்கொண்டே, அகில இந்தியத் தொகுப்பு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு ,2009 ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தவறிவிட்டது.அதனால் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகப் பெரும் இழப்புகளுக்கு உள்ளாகி வந்தனர். இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திடக் கோரி சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளது.
மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்களாக இருந்த டாக்டர் ஹர்ஷ்வர்தன் மற்றும் திரு. நட்டா ஆகியோரை டெல்லியில் நேரடியாக சந்தித்து மனுக்களும் கொடுக்கட்டன. சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால், மத்திய ஆட்சியாளர்கள் இந்த இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர அறிவுறுத்தியது.
இந்நிலையில், திமுக ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு, தமிழ்நாட்டில் உள்ளது போல் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிடக் கோரி வழக்கு தொடர்ந்தன. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அவ்வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஓர் குழுவும் நியமிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு , தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திரு டி.ஆர்.பாலு அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட ஒப்புக்கொண்டது.
இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் சிலரால் ,உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தலாம் என இன்று உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்புக்குரியது.
இந்த 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிட்டிட தொடர்முயற்சியை மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்களுக்கும்,இந்த இட ஒதுக்கீட்டிற்காக வழக்கு தொடர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ,திராவிடர் கழகத்திற்கும், இந்த இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக போராட்டங்களில் பங்கேற்ற மருத்துவ மாணவர்களுக்கும், ஆதரவளித்த அனைவருக்கும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இப்படிக்கு,
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
பொதுச் செயலாளர்,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.
99406643439444181955