சாதிகள் இருக்கும்வரை நாம் மனிதராக வாழ முடியாது!
பெங்களூரு, ஜன. 6 – “சாதிய ரீதியாக பிளவுபட்டிருக்கும் வரை, நாம் யாரும் மனிதர்களாக வாழ முடியாது” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார். ‘சவிதா’ என்ற சமூகத்தின் சார்பில் ‘நான் சுயமரியாதைக்காரன்’ என்ற நூல் வெளியீட்டு விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில், நூலை வெளியிட்டுப் பேசுகையிலேயே சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது: கர்நாடகத்தில் 12-ஆவது நூற்றாண்டில் சாதிகளை ஒழிக்க பசவண்ணர் பாடுபட்டார். அவரது வழியில், சாதிகளால் புரையோடிப் போய் இருக்கும் தீண்டாமையை எதிர்க்க வேண்டும். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, எந்த சாதியை சேர்ந்தவர் ரத்தம் கொடுத்தார் என்று நாம் கேட்பது இல்லை. உயிர் பிழைத்த பிறகு நாம் சாதி பற்றி பேசுகிறோம். சாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ்வது கடினம். செய்யும் தொழிலையே சாதியாக மாற்றி, மேல் சாதி-கீழ் சாதி என்று பிரித்து வைத்துள்ளனர். பல்வேறு தொழில் செய்பவர்களால்தான் மனித சமூகம் வாழ முடியும். பசவண்ணர் கூறியது போல் எந்த சாதியும் மேலானதும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை. மூடநம்பிக்கைகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூடநம்பிக்கைகளை விதைப்பவர்களை புறக்கணிக்காவிட்டால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும். கர்நாடகத்தில் 78 சதவிகிதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஆனால் சாதிகள் குறையவில்லை. படித்தவர்களால்தான் அதிக ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. சுயமரியாதை உள்ளவர்களாக வாழ வேண்டும், படித்து மருத்துவர், பொறியாளர்களாக தொழில் செய்ய வேண்டும். இவ்வாறு சித்தராமையா பேசியுள்ளார்.