ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் போராட முன் வரவேண்டும். – கோவையில் டி.ராஜா பேட்டி.
கோவை- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா 4 ம் தேதி காலை கோவை வந்தார். கோவை ஜீவா இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் போராட முன்வரவேண்டும் என்று கூறினார்.மேலும் அவர் கூறியதாவது:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு மற்றும் தேசியக் குழு கூட்டங்கள் இம்மாதம் 26,27,28 தேதிகளில் கோவையில் நடைபெற இருக்கிறது. கட்சியின் மாநாடு இந்த ஆண்டு அக்டோபர் 14,15,16,17,18 தேதிகளில் விஜயவாடாவில் நடைபெற உள்ளது. விஜயவாடாவில் நடைபெறும் மாநாட்டில் முன்வைக்கப்படும் அரசியல் நிலைபாடுகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதால், கோவையில் நடைபெற உள்ள தேசிய கவுன்சில் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.கோவையில் நடைபெறும் தேசிய கவுன்சில் கூட்டம் அரசியலில் நிகழ்ந்துள்ள சவால்கள், சோதனைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்து, நிறைவாக வழிகாட்டுதல் என்ன என்பதை விவாதித்து அறிக்கை முன்வைக்கும்.
நாட்டில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மூர்க்கத்தனமாக செயல்படத் தொடங்கி உள்ளது. அவர்கள், அவர்களது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள மக்களைப் பிளவுபடுத்தி வருகிறார்கள். டாக்டர் அம்பேத்கர் நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கும்போது இந்தியா மதசார்பற்ற ஜனநாயக குடியரசு என்று குறிப்பிட்டார். ஆனால் மோடியும், ஆர்.எஸ்.எஸ்.சும் இந்திய அரசை ஒரு மதம் சார்ந்த அரசாக கட்டியமைக்க விரும்புகிறார்கள்.
நாட்டின் பிரதமர் என்கிற முறையில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளக் கூடாது. அவரது தனிப்பட்ட மத நம்பிக்கை என்பது வேறு, அரசு நிகழ்ச்சி என்பது வேறு.அவரது தனிப்பட்ட மத நம்பிக்கையை இங்கு நான் குறிப்பிடவில்லை. அவர் உத்தரப் பிரதேசத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் தனது அரசு ஒரு மதம் சார்ந்த அரசாக வெளிப்படுத்திக் கொண்டார். இது அரசியல் சட்ட விரோதமானது ஆகும்.பல மொழி, பல மதங்கள் பல கலாச்சாரம், பல்வேறு வரலாற்று பின்னணிகள் கொண்ட சிறு நாடுகளின் இணைப்புதான் இந்தியா, இதில் ஒரு மதம், ஒரு மொழியை கட்டாயமாக திணிக்க விரும்புகிறார்கள். அதற்காக ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. அமைப்புகள் மூர்க்கத்தனமாக செயல்பட தொடங்கி உள்ளார்கள். மக்களுக்கு எதிராக வெறுப்பையும், தாக்குதலையும் நடத்த தொடங்கி உள்ளார்கள். இது கவலை தரும் தன்மையுள்ளதாக மாறிஉள்ளது.
கோவையில் கூட பள்ளிக் கூடங்களில் சாகா பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. சாகா பயிற்சி என்பது வன்முறைக்கு இளைஞர்களை தயார்படுத்துவதாகும். இது நாட்டு மக்கள் மத்தியில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தமிழக அரசு இடமளிக்கக் கூடாது. உலக அளவில் பசி பட்டினி அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. பசி பட்டினி இல்லாத நாடுகள் என்ற பட்டியலில் 101 வது இடத்தில் இந்தியா உள்ளது. வேலையின்மை கவலை அளிக்கிற வகையில் உள்ளது.
நாடாளுமன்ற மேலவை என்பது பல மாநிலங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு, அது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் அது செயல்படாமல் முடங்கிப்போயுள்ளது. இது ஜனநாயகம் மிகப் பெரிய ஆபத்துக்குள்ளாகி உள்ளது என்பதைக் காட்டுகிறது.நாட்டின் அரசியல் சட்டம் காப்பாற்றப்பட வேண்டும், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், நாட்டின் ஒற்றுமை காப்பாற்றப்பட வேண்டும், இதற்காக மக்கள் முன்னின்று போராட வேண்டும்.
தமிழகத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக கூட்டணி ஏற்படுத்தப்பட்டு அது வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு எடுத்துவரும் நல்ல நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது.
பிரதமர் தமிழகத்திற்கு வருவதால் அது அரசியல் ரீதியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. இது பெரியார் பிறந்த மண், பகுத்தறிவு இயக்கம் வேரூன்றிய மண், இதில் மோடியின் வருகை எவ்வித தாக்கத்தையும் உண்டுபண்ணிவிடாது.
இந்திய சீன எல்லையில் என்ன நடக்கிறது என்பதை, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். அதற்கு அவர் கடமைப் பட்டவர்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பது, எங்களது கட்சி தோழர். சி.ராஜேஸ்வரராவ் காலத்தில் 1986 ம் ஆண்டு கல்கத்தா மாநாட்டில் இருந்து வலியுறுத்தி வருகிறது. இரு கட்சிகள் மட்டுமல்ல இடதுசாரி கட்சிகள் அனைத்துமே ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். எப்போதுமே கூட்டு முயற்சிக்கு வலு அதிகம். அந்த வகையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்தால் அது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தையும், நம்பிக்கையும் ஏற்படுத்தும். அதற்கு வரலாற்று நகர்வுகள் பதில் கூறும்“, என்றும் டி.ராஜா கூறினார்.
இந்த பேட்டியின்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம், மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.தேவராஜ், சி.சிவசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.