நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரை அறிவுறுத்துங்கள்
புதுதில்லி, டிச. 30 – நீட் தேர்விலிருந்து தமிழகத் திற்கு விதி விலக்கு அளிக்க வகை செய்யும் விதத்தில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட “தமிழ்நாடு இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை மசோதா 2021”எனும் சிறப்பு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கிட, தலையீடு செய்து, அவருக்கு உரிய வழி காட்டுதல்களை அளிக்க வேண்டும் என குடியரசுத் தலைவரிடம் தமி ழகத்தின் அனைத்துக் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். கோவிட் 19 விதிமுறைகள் காரண மாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துடனான நேரடியான சந்திப்புகள் சமீபகாலமாக தவிர்க்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் குடியரசுத் தலைவரின் தனிச் செயலாளரை சந்தித்து, திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.நவநீத கிருஷ்ணன்(அதிமுக), டாக்டர் ஜெயக்குமார்(காங்கிரஸ்), டாக்டர் தொல்.திருமாவளவன் (விசிக), சு.வெங்கடேசன்(சிபிஎம்), எம்.செல்வராசு(சிபிஐ) மற்றும் கே.நவாஸ்கனி(ஐயுஎம்எல்) ஆகி யோர் மனு அளித்தனர்.
நீட் தேர்வு விலக்கை வற்புறுத்தும் தமிழகத்தின் சிறப்பு சட்டத்திற்காக முதல்முறையாக அதிமுகவும் இணைந்து, தமிழகத்தின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற கட்சித் தலைவர்களும் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. அந்த மனுவில், கூட்டுறவு, கூட்டாட்சி எனும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்பினை உறுதிப்படுத்தும் விதத்திலும் தமிழக குழந்தைகளின் எதிர்காலக் கல்வி நலன்களைக் கருத்தில் கொண்டும், நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சிறப்புச் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்துமாறு குடியரசுத் தலைவரை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த நான்காண்டு கால நீட் தேர்வு அனுபவங்கள் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி மற்றும் பல் மருத்துவக் கல்விக் கான கனவுகளைத் தகர்த்து வரு வதை மனுவில் சுட்டிக்காட்டியுள்ள தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் கள், தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ள மசோதாவை, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 200ல் குறிப்பிட்டுள்ளது போல, மசோதா ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டால் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரை வாக ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற விதியின்படி ஒப்புதல் வழங்குமாறு ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்த மனுவில் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர். குடியரசுத் தலைவரின் தனிச் செய லாளரிடம் மனு அளித்த பின்பு வியாழனன்று மாலை மேற்கண்ட விபரங்கள் தொடர்பாக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தில்லி யில் செய்தியாளர்களையும் சந்தித்தனர்.
தமிழக எம்.பி.க்களை இழுத்தடித்த அமித்ஷா
முன்னதாக கடந்த மூன்று நாட்களாக, இப்பிரச்சனை தொடர்பாக குடியரசுத் தலை வர் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்வதற்கும், அதன்பொருட்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசுவதற்கும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திருந்தனர். குடியரசுத் தலைவரை கோவிட்-19 விதிகள் காரணமாக நேரடியாகச் சந்திக்க இயலாது என்ற நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கு மாறு கேட்டிருந்தனர். அவரும் நேரம் ஒதுக்குவதாக கூறியிருந்தார். எனினும் இரண்டு நாட்கள் தில்லியிலேயே காத்திருந்த போதிலும் கடைசி வரை அவர் தில்லிக்கு வரவில்லை. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதாகவும், எனினும் நேரில் வந்து சந்தித்து மனுவை பெற்றுக்கொள்வதாகவும் அமித்ஷா உறுதி அளித்திருந்தார். மீண்டும் மீண்டும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பு கொண்ட போதிலும் இந்த பதில் மட்டுமே கிடைத்தது. தமிழக நாடாளுமன்றக் கட்சி களின் தலைவர்கள், உறுப்பினர்கள் தனக்கா கக் காத்திருக்கிறார்கள் எனத் தெரிந்தும் அவர்களை தவிர்க்கும் நோக்கத்துடன் தில்லிக்கு வராமல் இழுத்தடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தமிழக மக்க ளையும் அமித்ஷா அவமதித்துள்ளார். இது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் களிடம் மட்டுமின்றி, தமிழக மக்களிடை யேயும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.