தமிழ்நாடு பாடநூல்கள் தமிழ்நாட்டிலேயே அச்சிடப்பட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு
தமிழ்நாட்டில் முதல் வகுப்பு தொடங்கி பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாடநூல்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் தயார் செய்யப்படுகிறது. இதற்காக சுமார் 30 ஆயிரம் டன் எடை அளவு கொண்ட சுமார் 8 கோடி புத்தகங்கள் அச்சிடப்படுகின்றது.
இப்படி அச்சிடும் வேலைக்காக ஏலம் மூலமாக ஒப்பந்ததாரர்கள் அமர்ந்தப்படுகின்றனர். இந்த வகையில் நடப்பு ஆண்டில் பாடநூல் அச்சிடும் பணியை வெளி மாநிலங்களைச் சேர்ந்தோர் (நிறுவனங்கள்) ஏலம் எடுத்துச் சென்றுள்ளனர். பாடநூல் அச்சிடும் பணி வெளி மாநிலங்கள் செல்வதால், தமிழ்நாட்டில் அச்சகப் பணியும், அதன் சார்புத் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.உலகளாவிய டெண்டர் முறையில் ஏலம் கோரப்படுவதால் இது தவிர்க்க முடியவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
மாணவர்கள் பயிலும் பாடநூல்கள் தவறுகள் இல்லாமலும், மொழிவளம் குறையாமலும் அச்சிடும் பணிக்கு ஆயிரக்கணக்கான அச்சகங்கள் தமிழ்நாட்டில் இருப்பதை அரசு கருத்தில் கொண்டு ஏல முறை சட்டத்தில் பொருத்தமான திருத்தம் செய்ய தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
அதே சமயம் உலகளாவிய டெண்டர் முறையில் குறைந்த விலைப்புள்ளியில் வெளிமாநிலங்கள் குறித்து, பணியை ஒப்பந்தம் பெறுவதை தமிழ்நாடு அச்சக நிறுவனங்களும் கருத்தில் கொள்ள வேண்டும். நியாயமான செலவில், தரமான முறையில் தமிழ்நாட்டில் அச்சிடும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஏல நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.