புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், “நமக்கு நாமே திட்டம்” மற்றும் “நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்” ஆகிய புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.38.53 கோடி மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.54.01 கோடி மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,837 பயனாளிகளுக்கு ரூ.168.64 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில்,
”தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (11.12.2021) சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில், “நமக்கு நாமே திட்டம்” மற்றும் “நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம்” ஆகிய புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, 38 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, 54 கோடியே 1 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,837 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 168 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடங்கி வைக்கப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்:
நமக்கு நாமே திட்டம்
மக்களின் சுய உதவி, சுயசார்பு எண்ணம் ஆகியவற்றை வலிமைப்படுத்தவும், பரவலாக்கவும், மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே திட்டத்தினை கருணாநிதி 1997-98-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார்கள். மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்தி பொதுச் சொத்துக்களை உருவாக்கி பராமரித்து வருவதே நமக்கு நாமே திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும், இத்திட்டம் வளர்ச்சி பணிகளுக்கான திட்டமிடுதல் தொடங்கி, வள ஆதாரங்களை திரட்டுதல், பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் மேற்பார்வை செய்தல் என அனைத்திலும் மக்களை நேரடியாக ஈடுபடுத்துகிறது.
மாநில அளவில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் மதிப்பீட்டில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பு நிதி மற்றும் அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம்
நகர்ப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாநில அளவில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் நகர்ப்புறங்களில் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதாகும். இயற்கை வள மேலாண்மைப் பணிகள், வெள்ளத் தடுப்புப் பணிகள், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், நகர்ப்புற இடத்தை பசுமைப்படுத்துதல் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், சமூக மற்றும் பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் வாழ்வாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்துதல், திறனுக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொதுச் சொத்துக்களை உருவாக்குதல் மற்றும் பராமரித்தல், பசுமை மற்றும் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு இயற்கை வள மேலாண்மை தொடர்பான பணிகளை மேற்கொள்வது ஆகும்.
தொடங்கி வைக்கப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தலைவாசல், வாழப்பாடி, எடப்பாடி, சங்ககிரி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டிணம், வீரபாண்டி, ஏற்காடு மற்றும் கொங்கணாபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள், ஊராட்சிமன்ற அலுவலகங்கள், சமுதாய சுகாதார வளாகக் கட்டடங்கள், பள்ளிக் கூடுதல் கட்டடங்கள், நியாய விலைக்கடை கட்டடங்கள், சிறு பாலம் மற்றும் தடுப்பணைகள், என மொத்தம் ரூ.15.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள்.
- ஓமலூரில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையக் கட்டடம்.
- மேட்டூரில் ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டிடம்.
- சந்தியூரில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகக் கட்டிடம்.
- தலைவாசல் வட்டம், மும்முடி கிராமத்தில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடம்.
- நாழிக்கல்பட்டி, கரியகோவில், கடம்பூர், வெள்ளையூர், உமையாள்புரம் ஆகிய இடங்களில் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகக் கட்டடங்கள்.
- சேலம் மேற்கு வருவாய் வட்டாட்சியருக்கு ரூ.28.81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புக் கட்டடம்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
- எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரூ.3.66 கோடி மதிப்பீட்டில் கட்ட்ப்பட்டுள்ள 24 படுக்கை வசதிகளுடன் கூடிய பெண்கள் கவனிப்பு பிரிவு, 24 படுக்கை வசதிகளுடன் கூடிய ஆண்கள் பிரிவு, 4 படுக்கை வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை அரங்கம் ஆகிய பிரிவுகள் கொண்ட கட்டிடம்.
- ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆத்தூர் துணை இயக்குநர், சுகாதார பணிகள் புதிய அலுவலகக் கட்டிடம்.
- எடப்பாடி வட்டம், மேட்டுப்பாளையத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய துணை சுகாதார நிலையக் கட்டிடம்.
- நெடுங்குளம் ஊராட்சி, கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்புக் கட்டிடம்.
- நெடுங்குளம் ஊராட்சி, கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.71.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர்/பணியாளர் குடியிருப்புக் கட்டிடம்.
- நெடுங்குளம் ஊராட்சி, கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையக் குடியிருப்புகளுக்கு ரூ.31.5 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுசுவர் மற்றும் வாகன நிறுத்தக்கூடம்.
- பகடுப்பட்டு அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் ரூ.94.40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதிக் கட்டடம் மற்றும் சமையலறை கட்டிடம்.
- ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் பம்பாரப்பட்டி, ஒய்.கணேசபுரம், அபிநவம், ஆரியபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் சிறுவாச்சூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள ஒரு வகுப்பறை, பேவர்பிளாக் அமைத்தல் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் உபகரணங்கள்.
கூட்டுறவுத் துறை
- அருநூத்துமலை பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடம்.
- சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் ரூ.27 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எடை மேடை.
- செட்டியப்பனூர், கொல்லத்தெரு, மஞ்சையன்காடு, காரைக்காடு, வால்கரடு, மலமானூர், வெங்கடாசலம் காலனி மற்றும் போத்தனூர் ஆகிய இடங்களில் ரூ.60.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பகுதி நேர நியாய விலைக் கடைகள்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை
- ஒருங்கிணைந்த சேலம் (நெ) நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் அலுவலகத்திற்கு ரூ.95.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டம் மற்றும் கோட்ட அலுவலகக் கட்டடம்.
என மொத்தம், 38 கோடியே 53 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் திறந்து வைத்தார்கள்.
அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
- எடப்பாடி வட்டம், கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மருத்துவ அலுவலர்களுக்கான குடியிருப்புகள்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
- பெத்தநாயக்கன்பாளையத்தில் ரூ.21 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை
- 14 வட்டாரங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ.3.29 கோடி மதிப்பீட்டில் 1 இலட்சத்து 450 மரக்கன்றுகள் நடும் பணிகள்.
சேலம் மாநகராட்சி
- ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி மற்றும் கொண்டலாம்பட்டி மண்டலங்களில் நகர்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கு கூடுதல் கட்டடம் மற்றும் சானிக்குட்டை மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகள்.
பேரூராட்சிகள்
- பேளூர், ஏத்தாப்பூர், வீரக்கல்புதூர், வீரகனூர், கன்னங்குறிச்சி, அரசிராமணி, ஆட்டையாம்பட்டி, அயோத்தியாப்பட்டினம், பனமரத்துப்பட்டி, இளம்பிள்ளை, கொங்கணாபுரம், வனவாசி, வாழப்பாடி, காடையாம்பட்டி, கீரிப்பட்டி, கொளத்தூர், நங்கவள்ளி, தெடாவூர், ஓமலூர், செந்தாரப்பட்டி, மேச்சேரி, பி.என்.பட்டி, கெங்கவல்லி, தம்மம்பட்டி, பூலாம்பட்டி, சங்ககிரி, கருப்பூர், மல்லூர், பெத்தநாயக்கன்பாளையம், தேவூர் ஆகிய பேரூராட்சிகளில் ரூ.40.55 கோடி மதிப்பீட்டில் சாலைகள், பாலங்கள், எரிவாயு தகன மேடைகள் மற்றும் வார சந்தை அமைக்கும் பணிகள்.
நகராட்சி நிர்வாகம்
- ஆத்தூர் மற்றும் மேட்டூர் நகராட்சிகளில் ரூ.5.14 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள்.
என மொத்தம் 54 கோடியே 01 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்கள்.
துவக்கி வைக்கப்படும் அரசு வாகனங்களின் விவரம்
சமூக பாதுகாப்புத் துறை
- குழந்தைகளுக்கான சமூக பாதுகாப்பு நலன் தொடர்பான பணிகளை மேற்கொள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் பயன்பாட்டிற்காக ரூ.7.33 இலட்சம் மதிப்பிலான மகேந்திரா ஈப்பு வாகனம்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
- தலைவாசல் வருவாய் வட்டாட்சியருக்கு ரூ.7.23 இலட்சம் மதிப்பிலான ஈப்பு வாகனம்.
- தலைவாசல் தனி வட்டாட்சியருக்கு (ச.பா.தி) ரூ.7.23 இலட்சம் மதிப்பிலான ஈப்பு வாகனம்.
என மொத்தம், 21 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 ஈப்பு வாகனங்களை வருவாய் துறை பயன்பாட்டிற்காக முதல்வர் வழங்கினார்.
பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட அரசு நலத்திட்ட உதவிகள்
- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த 37 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணை .
- பட்டுவளர்ச்சித்துறை சார்பில் 283 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் மல்பெரி நடவு செய்ய ஊக்கத்தொகை, தனி புழு வளர்ப்புக்கு உதவித்தொகை .
- பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 62 பயனாளிகளுக்கு ரூ.3.34 இலட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகை, விலையில்லா சலவைப்பெட்டிகள்.
- மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்திற்கான ஆணை மற்றும் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் ஒப்புகை ஆணை.
- 1,000 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள்.
- 59 பழங்குடியினருக்கு வன உரிமை பட்டாக்கள்.
- சமுக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 9,009 பயனாளிகளுக்கு உதவித்தொகை.
- 2,189 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள்.
- 261 மலைவாழ் மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள்.
- 42 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள்.
- 6 பயனாளிகளுக்கு விபத்து நிவாரண உதவித்தொகை.
- உள்நாட்டு மீனவர்கள் 15 பேருக்கு 40 சதவிகித மானிய விலையில் ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டிலான மீன்பிடி வலைகள்.
- வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 259 விவசாயிகளுக்கு ரூ.80 இலட்சம் மதிப்பீட்டில் இடுபொருட்கள், வேளாண் கருவிகள், விதைகள், நுண்ணீர் பாசன கருவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்.
- வேளாண் பொறியியல் துறையின் சார்பில் சூரிய ஒளியின் மூலம் இயங்கும் மோட்டார் பம்புகளுக்கு ரூ.14.24 இலட்சம் மதிப்பீட்டில் மானியம்.
- தோட்டக்கலைத்துறையின் சார்பில் 250 நபர்களுக்கு ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் காய்கறி சாகுபடிக்கான பந்தல் அமைப்பதற்கு மானியம், வெங்காய சேமிப்பு கிடங்குக்கான மானியம், நிழல் வலைக்கூடம் அமைக்க மானியம்.
- சமூக நலத்துறையின் சார்பில் 5,000 நபர்களுக்கு ரூ.20.09 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி.
- பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரிந்து பணியிடையே காலமான 2 சத்துணவு அமைப்பாளர்களின் வாரிசுதாரர்களுக்கு சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையில் பணி நியமனம் ஆணை.
- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 352 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90.82 இலட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் மாதாந்திர உதவித்தொகை.
- சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில் 146 பயனாளிகளுக்கு ரூ.4.38 கோடி மதிப்பீட்டில் கொரோனா தொற்றால் பெற்றோரில் யாரேனும் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி.
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ.1.77 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கண்ணொளி காப்போம் திட்டத்தில் 1,344 பயனாளிகளுக்கு கண்கண்ணாடிகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கார்டுகள், கோவிட் பெருந்தொற்று பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை.
- ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 21 நபர்களுக்கு ரூ.28.38 இலட்சம் மதிப்பீட்டில் தீருதவித்தொகை.
- முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டவாறு விவசாயிகளுக்கு துரிதமாக மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 111 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள்.
- அமைப்பு சாரா மற்றும் கட்டட தொழிலாளர்களின் 15 குழந்தைகளுக்கு ரூ.2.10 இலட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகை.
- ரூ.2.25 கோடி மதிப்பீட்டில், 500 விவசாயிகளுக்கு கறவை மாடுகளுக்கான மூலதனக்கடன், 100 சாலையோர வியாபாரிகளுக்கு கடன் தொகை, 25 மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில கல்வி கடன் உதவிகள்.
- ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 2,251 பயனாளிகளுக்கு ரூ.6.73 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.
- 5,123 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.87 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன்.
- பேரூராட்சிகள் துறையின் சார்பில் கொங்கணாபுரம் பேரூராட்சியில் அலுவலக உதவியாளராக ஒரு நபருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை.
- கூட்டுறவுத்துறையின் சார்பில் 2,223 பயனாளிகளுக்கு ரூ.12.90 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி.
- தமிழ்நாடு காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 20 வனக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.2 இலட்சம் சுழல் நிதி.
- தாட்கோ சார்பில் 117 நபர்களுக்கு ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் தொழில் முனைவோர் நிதி, வேலைவாய்ப்பு திட்ட நிதி, மகளிருக்கான மேம்பாட்டு நிதிகள்.
போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள், என மொத்தம் 30,837 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 168 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் பொன்.கௌதம் சிகாமணி, எஸ்.ஆர். பார்த்திபன், ஏ.கே.பி.சின்ராஜ், .கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.இராஜேந்திரன், இரா.அருள், எஸ். சதாசிவம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் ரேவதி ராஜசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.