முதல்கட்டமாக 15 மாவட்டங்களில் டிச.13, 14-ல் அதிமுக உள்கட்சி தேர்தல்: ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு
அதிமுகவில் முதல்கட்டமாக 15 மாவட்டங்களுக்கு வரும் டிச.13, 14 தேதிகளில்உள்கட்சித் தேர்தல் நடக்கிறது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர்பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு:
அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தென்காசி வடக்கு, தெற்கு, விருதுநகர் கிழக்கு, மதுரை மாநகர்,மதுரை புறநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம்மாநகர், புறநகர் ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் பொறுப்புகளுக்கான முதல்கட்ட தேர்தல், வரும் டிச.13, 14 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது.
இதற்கு, மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், ஒன்றிய, பேரூராட்சி, நகரம், மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், அமைப்பு தேர்தல்களை நடத்துவதற்கான கட்சி உறுப்பினர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியல், மினிட் புத்தகம்,விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம், வெற்றிப் படிவம் முதலானவற்றை சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களிடம் இருந்து பெற்று, அவற்றை ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையர்களிடம் வழங்க வேண்டும். அதிமுக சட்ட விதிமுறைகளின்படி தேர்தலை முறையாக நடத்த வேண்டும்.
அமைப்பு தேர்தல்கள் சுமுகமாக நடக்கும் வகையில், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.