முஸ்லிம் இளைஞரை சிறுநீர் குடிக்கவைத்த காவல்துறையினர்
பெங்களூரு. டிச.9- முஸ்லிம் இளைஞரை துன்புறுத்தி, சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்திய காவல் துணை ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு, பியாட்ராயனபுரா காவல் நிலையத்தில் டிச. 2-ஆம் தேதி தௌசிப் பாட்ஷா (24) என்பவரை அடித்து துன்புறுத்தி, சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக, அந்த காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் கே.என்.ஹரீஷ் மீது புகார் எழுந்தது. தௌசிப் பாட்ஷாவின் தந்தை அஸ்லாம் அளித்த புகாரின் பேரில், காவல் துணை ஆய்வாளர் ஹரீஷின் நடத்தை குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடமை தவறி நடந்துகொண்டதாலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாததாலும் ஹரீஷை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் (மேற்கு) சஞ்சீவ் எம் பாட்டீல். கூறினார்.
இதுகுறித்து தௌசிப் பாட்ஷாவின் தந்தை அஸ்லாம் கூறுகையில், அண்டை வீட்டாருடன் சண்டையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், கடந்த வியாழக்கிழமை (டிச. 2) நள்ளிரவு ஒரு மணிக்கு எனது மகன் தௌசிப்பை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் அடித்து துன்புறுத்திய காவல்துறையினர், அவரை விடுவிக்க பணம் கேட்டனர் என்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக தௌசிப் பேசும் காணொலி வலைதளங்களில் வேகமாகப் பரவியது. அதில், “காவல்துறையினர் எனது முடியை கத்தரித்து, இடுப்புக்கு கீழ் அடித்து உதைத்தனர். 30 முறை காவலர்கள் கிரிக்கெட் மட்டையால் அடித்து, அதன்பிறகு சிறுநீரை குடிக்கும்படி கட்டாயப்படுத்தினர்’. எனது தாடியையும் வெட்டினர். எனது மதம் சார்ந்த நம்பிக்கை எனத் தடுத்தேன். அதற்கு இது ஒன்றும் வழிபாட்டுத்தலமல்ல எனக் கூறியதோடு காவல்நிலையத்தையும் சுத்தம் செய்ய வைத்தனர்” என்றார்.