காவியும் சிவப்பும்
பேராசிரியர்.மு.நாகநாதன்
பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலத்தில் சில நலத் திட்டங்களைத் தொடங்கித் தேர்தல் பரப்புரையையும் ஆற்றி உள்ளார்.
தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களில் ஒன்றிய அரசு எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்குவதாக அறிவித்துப் பல ஆண்டுகளாகிவிட்டன.
ஆனால், உ.பி மாநிலத்தில் மட்டும்
எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டன.
மருத்துவமனையும் தொடங்கப்பட்டுள்ளது.
வரவேற்கத் தகுந்ததுதான்.
ஆனால், மற்ற மாநிலங்களில் ஏன் இது போன்று விரைந்து பணிகளை மேற்கொள்ளவில்லை
என்ற வினா எழுகிறது அல்லவா!
எல்லாம் 2022 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள உ.பி தேர்தல் தோல்வி பயம் என்பதை பிரதமரின் உரை சொல்லாமல் சொல்லுகிறது.
உபிக்குச் சென்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டாவது முறையாக
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“நாடாளுமன்றக் கூட்டங்களில் தவறாமல்
கலந்து கொள்ளுங்கள்.”
“நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.”
“அப்படிச் செய்யாவிட்டால் சரியான நேரத்தில் மாற்றங்கள் ஏற்படும்.”
அரசியல் பாடத்தில் முதுகலைப் பட்டம்
பெற்றவரல்லவா?
யார் இவருக்கு அரசியல் பாடத்தை நடத்தியவர்கள் ?
இவருடன் படித்த சக மாணவர்கள் யார்!
என்பதெல்லாம் இன்று வரை பலர் முயன்றும் தெரிந்து கொள்ள முடியாத பல கோடி ரூபாய் மதிப்புமிக்க, விடை காண முடியாத கேள்வியாகும்.
ஆனால் இவர் பாஜக சங்கிகளுக்குப்
பாடம் சொல்லித் தரட்டும்.
எச்சரிக்கை விடட்டும்.
ஆனால் முன்னாள் முதல்வர்
அகிலேஷுக்குக் கூடும் மக்கள் கூட்டம்
இவரைப் பெருமளவில் பாதித்துள்ளது
என்பதையே இவரின் உரை வெளிப்படுத்தியுள்ளது.
Beware of Red Caps P.M in U.P
“The one with lal topis ( red Caps, worn by SP
Members ) are a red alert for UP… they are a danger bell” Mr.Modi said -( The Hindu 8 December 2021-)
“சிவப்பு வண்ணத் தொப்பிகள் எச்சரிக்கை-“
“சமாஜ்வாடி கட்சியின் தொண்டர்கள் அணிந்துள்ள சிவப்பு தொப்பிகள் உபி மாநிலத்திற்குச் சிவப்பு எச்சரிக்கையாம்!
அபாயகரமான மணி ஒலிப்பாம்!”
என்ற மோடியின் உரை ஊடகங்களில் வெளி வந்துள்ள அதே நேரத்தில்
மோடி மறைத்ததை, மறந்ததைப்
புள்ளிவிவரங்கள் மற்றொரு பக்கத்தில் ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றன.
தேசிய சுகாதார ஆய்வு அறிக்கை -5 இல் (2019- 21) புள்ளிவிவரங்கள் அபாய மணி ஒலியை ஓங்கி ஒலிக்கின்றன.
என்ன அந்தப் புள்ளிவிவரங்கள்?
இந்தியாவில் பிறந்து வளரும் குழந்தைகளில்
ஆறு மாதம் தொடங்கி 59 மாதங்கள் வயதை எட்டும் குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எந்த மாநிலத்தில் ரத்த சோகையால்
பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம்
தெரியுமா?
மோடி முதல்வராக இருந்த இன்றும்
காவி ஆளும் மாநிலமான குஜராத்தில்
ஆறு மாதங்கள் தொடங்கி 59 மாதங்கள் வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இரத்த சோகை அளவு 79.6 விழுக்காடாகும்.
எந்த மாநிலத்தில் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டு, குறைவான எண்ணிக்கையில் உள்ளனர் தெரியுமா?
சிவப்பு ஆளும் கேரளாவில் 39.4 விழுக்காடு அளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்துக் குறைந்த பாதிப்பிற்கு உள்ளான மாநிலம் தமிழ்நாடு. விழுக்காடு 57.4.
கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த காவியின் அடிமை எடப்பாடி போதிய குழந்தைகள் நலனில் கவனம் செலுத்தாமல் இருந்தது இந்தச் சரிவிற்கு ஒரு காரணம்.
காஷ்மீரிலிருந்து லடாக் பகுதியைப் பிரித்த பாஜக ஆளுநர் ஆட்சியில் 92.5 விழுக்காடு லடாக் குழந்தைகள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மட்டுமா?
வறுமை, ஏற்றத்தாழ்வு , வேலையின்மை
பெருமளவில் இந்தியாவில் பெருகி வருகின்றன.
இன்றைய ஆங்கில இந்து நாளிதழில் ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் சுகாதார பொருளாதார ஆய்வாளர் இந்தரனில் (INDRANIL)
நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் பொது சுகாதாரத்துறைக்கு, பொதுச் செலவைக் குறைந்த அளவில் செலவிடும் நாடு உலகிலேயே இந்தியா தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டாலும், நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் பொது சுகாதாரத்துறைக்கு 1% முதல் 1.2% மட்டுமே ஒன்றிய அரசு செலவிடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(India’s total public spending on the health as percentage of GDP or in per capita terms has been one of the lowest in the world.
Despite several prouncements, it has been continued to hover around 1% – 1.2% of GDP.
The Hindu 8 December 2021 page 8 –
சிவப்பு வண்ணம் கோலோச்சிய மண்ணில், கோலோச்சும் மண்ணில்
எல்லோருக்கும் கல்வி, சுகாதாரம்
இலவசமாக வழங்கப்படுகிறது.
இதனால் தான் கருப்பும், சிவப்பும் இணைந்த இந்தத் தமிழ் மண்ணில் சட்டமன்றத் தேர்தலில் சரியான பாடத்தைத் தந்தனர்.
மக்களை இன, மத மொழி அடிப்படையில் பிரித்து
ஏழைகள்
தொழிலாளர்கள்,
நடுத்தரப் பிரிவினரின்
வருமானத்தை,
வாழ்வைச் சிதைத்து வருகின்ற சனாதன சர்வாதிகார கொடுங்கோல் ஆட்சியின் வடிவம் தான் காவி என்பதை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
விழித்துக் கொண்ட வேளாண் குடிமக்கள் கற்பித்தனர் சரியான பாடம்!
இருண்ட கண்கள்
பார்க்கும் பார்வையில் மிரட்சி!
வருணா சிரமம் எனும்
சூழ்ச்சி வீழப்போகிறதே
என்ற அச்சம்!
வண்ணங்கள்
எண்ணங்களில் ஏற்படுத்திய
கலக்கம் தடுமாற்ற உரையாக
உ.பியில் வெளி வருகிறது.
சிவப்பு புரட்சியின் வண்ணம் மட்டும் அல்ல உலகையே மாற்றிய புரட்சி வடிவம்!!
இது வரலாறு சுட்டும் பாடம்.
காவி சாயும்!
சிவப்பு வெல்லும்!