குழந்தைகள் உணவை நஞ்சாக்கும் பெப்சி உருளைக்கிழங்கு பயிரிட தடை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்பு
பெப்சி நிறுவனம் 1989இல் ‘லேஸ் சிப்ஸ்’ தயாரிக்கும் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைத்தது. அது பயன்படுத்திய உருளைக்கிழங்கு சிப்ஸ் எடை குறைவாகவும், பருமன் அதிகமாகவும் இருந்ததும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் செயற்கை சுவையூட்டிகள் சேர்த்ததும் இதற்கு முக்கிய காரணமாகும். சில ஆண்டுகளிலேயே இதன் வியாபாரம் கொடிகட்டிப் பறந்து, அந்த நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டியது.
இந்த உருளைக்கிழங்கு விதைகளை குஜராத் மாநில விவசாயிகளிடம் தந்து, உற்பத்தி செய்த கிழங்குகளை தனக்கு மட்டுமே விற்பனை செய்யவேண்டும் என்ற நிபந்தனையோடு பெப்சி நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தப்படி உற்பத்தி செய்த உருளைக்கிழங்குகள், உரிய தரத்தில் இல்லை என்று கூறி, விலையை அந்த நிறுவனம் குறைத்ததால், பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். வேறு வழியின்றி வேறு விவசாயிகளுக்கு அந்த விதைகளை விற்று விட்டார்கள்.
அந்த விதைகளுக்கு பெப்சி நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ளதாகவும், ஒப்பந்தம் செய்து கொள்ளாத விவசாயிகள் அதனை சாகுபடி செய்ததால் ஒவ்வொரு விவசாயியும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் பெப்சி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை எதிர்த்து நாடெங்கும் விவசாயிகள் போராடினார்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இறுதியில் மாநில அரசு இதில் தலையிட்டு பேசியபோது, நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்வு செய்து கொள்வதாகக் கூறி, வழக்கை பெப்சி கம்பெனி திரும்பப் பெற்றது.
இந்த நிலையில்தான் அந்த உருளைக்கிழங்கு வகைகள் மரபணு நீக்கம் செய்யப்பட்டவை என்றும் அவை உடல் நலத்துக்கு தீங்குவிளைவிப்பவை என்றும் விவரம் வெளியானது. இந்தியாவில் மரபணு நீக்கம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு விதைகளை விற்கவோ, சாகுபடி செய்யவோ அனுமதி இல்லை. எனவே பெப்சி நிறுவனம் இந்த உருளைக்கிழங்கை இந்தியாவில் பயிரிடக் கூடாது என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது, இந்திய விதைகள் மற்றும் விவசாயிகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், இந்த மரபணு நீக்கம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை பயிரிடத் தடை விதித்து உத்தரவிட்டு இருக்கிறது. இது விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
மரபணு நீக்கம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கை இந்தியாவில் பயிரிட கூடாது என்ற தடையை முழுமையாக அமுல் நடத்தி உறுதிப்படுத்தவும், குழந்தைகளின் உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் பெப்சி நிறுவனத்தின் ‘லேஸ் சிப்ஸ்’ஸை இந்தியாவில் விற்பனை செய்யக்கூடாது என்று தடை செய்யவும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.